காலத்தின் சுவடுகள்: சூரிய நிழல் முதல் ஸ்மார்ட் வாட்ச் வரை!

ஜூன் 19 – தேசிய கைக்கடிகார தினம் :

காலத்தைக் கணக்கிடுவது என்பது மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே ஒரு முதன்மையான தேவையாக இருந்து வந்துள்ளது.

ஆதிமனிதன் சூரியனின் இயக்கத்தையும், விழும் நிழலின் நீளத்தையும் கொண்டு நேரத்தை கணித்தான்.

அந்த எளிய தொடக்கத்திலிருந்து, இன்று மணிக்கட்டில் கட்டப்பட்டிருக்கும் அதிநவீன ஸ்மார்ட் வாட்ச் வரை மனிதன் கடந்து வந்துள்ள தொழில்நுட்பப் பயணம் மிகவும் வியக்கத்தக்கது.

காலம் கடந்து வந்த அந்த வரலாற்றுப் பரிணாமத்தை அவற்றின் தனித்துவமான வடிவமைப்பையும் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 தேதி ‘தேசிய கைக்கடிகார தினம்’ உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

பாக்கெட் கடிகாரத்தின் தொடக்கம் :

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் கடிகாரங்கள் மனிதனின் கைகளுக்குள் அடங்கும் வடிவத்தைப் பெறத் தொடங்கின·

முதல் கையடக்கக் கடிகாரம் 1504 ஆம் ஆண்டு ஜெர்மனியின் நூரம்பெர்க் நகரைச் சேர்ந்த பீட்டர் ஹென்லின் என்பவர் உலோக ஸ்பிரிங்க் பயன்படுத்தி உலகின் முதல் சிறிய கையடக்கக் கடிகாரத்தை உருவாக்கினார்.

இது கடிகாரத் தயாரிப்பில் ஒரு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது.

1675 – ல், டச்சு அறிவியலாளர் கிறிஸ்டியன் ஹியூஜென்ஸ் மற்றும் ஆங்கிலேயர் ராபர்ட் ஹூக் ஆகியோர் தனித்தனியாக ‘ஸ்பிரிங் பேலன்ஸ் வீல்’ அமைப்பைக் கண்டுபிடித்தனர்.

இந்தத் தொழில்நுட்பம் கடிகாரங்களின் அளவை மேலும் சுருக்கவும், நேரத்தைத் துல்லியமாக காட்டவும் உதவியது.

கைக்கடிகாரத்தின் உதயம் :

தொடக்க காலப் பயன்பாடு 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாக்கெட் கடிகாரங்கள் பிரெஞ்சு தத்துவஞானி பிளேஸ் பாஸ்கல் போன்றவர்களால் கயிற்றில் கட்டிப் பயன்படுத்தப்பட்டன.

எனினும், அக்காலத்தில் மணிக்கட்டில் கட்டும் கடிகாரங்கள் பெண்களுக்கான ஒரு விலை உயர்ந்த ஆடம்பர ஆபரணமாகவே மட்டுமே கருதப்பட்டன.

விமானிகளுக்கான முதல் நவீன வடிவம் கொண்ட கைக்கடிகாரம் 1904 ஆம் ஆண்டு லூயிஸ் கார்ட்டியர் என்ற புகழ்பெற்ற வடிவமைப்பாளர், தனது நண்பரான ஆல்பர்ட்டோ சாண்டோஸ் என்ற விமானி பறக்கும்போது எளிதாக நேரம் பார்ப்பதற்காக முதல் நவீன கைக்கடிகாரத்தை வடிவமைத்து கொடுத்தார்.

முதலாம் உலகப் போரின் திருப்புமுனை: போர்க்களத்தில் இருந்த போர்வீரர்களுக்கு பாக்கெட்டிலிருந்து கடிகாரத்தை எடுத்துப் பார்ப்பது சாத்தியமில்லாமல் போனது.

துல்லியமான வியூகங்களை வகுக்க மணிக்கட்டில் கட்டும் கடிகாரத்தின் தேவை அவசியமானது.

இந்த ராணுவ தேவைதான், கைக்கடிகாரங்களை ஆண்களும் பயன்படுத்தும் வகையில் உலக அளவில் வழக்கமாக மாறியது.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கைக்கடிகாரங்கள் :

இருபதாம் நூற்றாண்டில் கைக்கடிகாரத் துறை வியக்கத்தக்க வடிவங்களை பெற்றது.

நீர்ப்புகா தொழில்நுட்பம் 1926ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற ரோலக்ஸ் நிறுவனம் நீர்ப்புகா மற்றும் தூசி புகாத தன்மையுடைய ‘ஆயிஸ்டர்’ என்ற கைக்கடிகாரத்தை முதன்முதலில் அறிமுகம் செய்து சாதனை படைத்தது.

அதன் பிறகு குவார்ட்ஸ் புரட்சி 1969 ஆம் ஆண்டு மின்கலம் மூலம் இயங்கும் முதல் ‘குவார்ட்ஸ்’ கைக்கடிகாரம் சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்டது.

இது மெக்கானிக்கல் கடிகாரங்களின் தேவையைத் தாண்டி, உலகக் கடிகாரத் துறையில் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியது.

டிஜிட்டல் யுகம் 1971ஆம் ஆண்டு அமெரிக்கப் பொறியாளர்களால் முட்கள் இல்லாத, திரையில் எண்களைக் காட்டும் டிஜிட்டல் கைக்கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டன.

ஆட்டோமேட்டிக் கடிகாரங்கள் (Automatic / Self-Winding Watches): இதுவும் மெக்கானிக்கல் வகையைச் சேர்ந்ததுதான்.

ஆனால், நாம் தனித்து சாவி கொடுக்க வேண்டியதில்லை. நம் கையின் அசைவை வைத்தே அதனுள் இருக்கும் ‘ரோட்டார்’ என்ற பகுதி சுழன்று, கடிகாரத்திற்கு தேவையான ஆற்றலைத் தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும்.

குவார்ட்ஸ் கடிகாரங்கள் மின்கலம் (Battery) மூலம் இயங்குபவை. இதனுள் இருக்கும் சிறிய குவார்ட்ஸ் படிகத்திற்கு மின்சாரம் செல்லும்போது அது குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அதிரும்.

இதன் மூலம் முட்கள் துல்லியமாக நகரும். பராமரிப்பு செலவு குறைவு, துல்லியம் அதிகம்.

திரை வடிவமைப்பின் அடிப்படையில் அனலாக் கடிகாரங்கள் ஒன்று முதல் பன்னிரண்டு வரையிலான எண்கள் அல்லது குறியீடுகள் மற்றும் முட்களைக் (மணி, நிமிடம், விநாடி) கொண்டு நேரத்தைக் காட்டும் பாரம்பரிய வடிவமாகும்.

டிஜிட்டல் கடிகாரங்கள் (Digital Watches):

முட்கள் இல்லாமல், திரையில் எண்களாக நேரத்தைக் காட்டுபவை (உதாரணம்: 10:30).

இதில் அலாரம், ஸ்டாப் வாட்ச் போன்ற கூடுதல் வசதிகள் இருக்கும்.

அனலாக்-டிஜிட்டல் (Ana-Digi Watches):

ஒரே கடிகாரத்தில் முட்களும் இருக்கும், அதே சமயம் சிறிய டிஜிட்டல் திரையும் இருக்கும். இரண்டு தொழில்நுட்பமும் இணைந்த வடிவம்.

கைக்கடிகார வகைகள்

டிரெஸ் வாட்ச் (Dress Watches) :

மிக எளிமையான, மெலிதான மற்றும் ஆடம்பரமான தோற்றம் கொண்டது. கோட்-சூட் அல்லது பாரம்பரிய ஆடைகளுடன் அலுவலக விசேஷங்களுக்கு அணிய ஏற்றவை. பொதுவாக தோல் வார்ப்புகளைக் கொண்டிருக்கும்.

டைவர் வாட்ச் :

ஆழ்கடலில் நீச்சல் அடிப்பவர்கள் மற்றும் நீர்மூழ்கி வீரர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை.

தண்ணீருக்கு அடியில் அதிக ஆழம் சென்றாலும் பழுதடையாத அளவுக்கு வலுவான நீர் புகாத்தன்மை (Water Resistance) கொண்டவை.

குரோனோகிராஃப் கடிகாரங்கள் :

நேரத்தை காட்டுவதோடு மட்டுமல்லாமல், துல்லியமான கால அளவைக் கணக்கிட உதவும் ‘ஸ்டாப்வாட்ச்’ (Stopwatch) வசதியும் இதனுள் இருக்கும்.

இதன் டயலுக்குள் மேலும் மூன்று சிறிய வட்ட வடிவ டயல்கள் இருக்கும்.

பைலட் வாட்ச் :

விமான ஓட்டுனர்களுக்காக உருவாக்கப்பட்டவை. இருட்டிலும் தெளிவாகத் தெரியும்படி பெரிய எண்களும், திசையறிதல் மற்றும் கணக்கீடுகளுக்கான பிரத்யேக வளையங்களும் (Bezels) இதில் இருக்கும்.

ஸ்மார்ட் கடிகாரங்கள் :

இன்றைய நவீன யுகத்தின் தொழில்நுட்பக் கடிகாரங்கள்.

புளூடூத் மூலம் நமது ஸ்மார்ட்போனுடன் இணைந்துகொள்ளும்.

நேரத்தோடு சேர்த்து இதயத் துடிப்பு, உடற்பயிற்சி அளவுகள், அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைக் காட்டும் மின்கலத் திரை சாதனமாகும்.

இன்றைய ஸ்மார்ட் யுகத்தின் கைக்கடிகாரங்கள் :

இயந்திரப் பற்சக்கரங்களில் தொடங்கி, மின்கலத் தொழில்நுட்பத்தைக் கடந்து, இன்று கைக்கடிகாரங்கள் ஒரு கணினியின் வடிவத்தைப் பெற்றுள்ளன.

தற்போதைய ஸ்மார்ட் வாட்ச்கள் வெறும் நேரம் பார்ப்பதற்கான கருவி மட்டுமல்லாமல், மனிதனின் இதயத் துடிப்பை அளவிடவும், தினசரி உடல்நலத்தைக் கண்காணிக்கவும், மொபைல் அழைப்புகளை ஏற்கவும் பயன்படும் ஒரு அத்தியாவசிய உயிர்நாடி சாதனமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.

தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், காலத்தைக் காட்டும் அந்த மணிக்கட்டுப் பயணம் என்றும் தொய்வின்றித் தொடரும்.

இந்தத் தேசிய கைக்கடிகார தினத்தில், காலத்தின் அருமையை உணர்ந்து நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக்க உறுதியேற்போம்.

– யாழினி சோமு

Comments (0)
Add Comment