ஜி.நாகராஜனும் ’குட் டே’ திரையனுபவமும்!

மு. இராமசுவாமி

என்னுடைய பட விமர்சனங்களைப் படித்திருந்த நண்பர் – என்னோடு ’கே.டி என்கிற கருப்புதுரை’ திரைப்படத்தில் எனக்கு நண்பராக நடித்திருந்த, அப்படத்தின் இணை நெறியாளுநர் – திரு பரத், ’தான் ஒன்றிரண்டு காட்சிகளில் ’குட் டே’ படத்தில் நடித்திருப்பதாகவும், இது தன்னுடைய நண்பரின் படமென்றும், இந்தப் படத்தைப் பற்றி எட்டு பக்கங்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுதுவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றும் புலனத்தில் தகவல் அனுப்பியிருந்தார்.

அப்பொழுதுதான், இப்படியொரு படம் திரைக்கு வந்துள்ளது என்பது தெரியவந்திருந்தது. அப்போதே, ‘யாரும் எழுதச் சொல்லி அவற்றை எழுதவில்லை. நீங்கள் நடித்திருப்பதால் படத்தைப் பார்ப்பேன். படம் என்னை எழுதத் தூண்ட வேண்டும். தங்களின் உரிமைக்கு என் நன்றி’ என்று நறுக்குவெட்டாக என் இயல்பில் பதில் அனுப்பியிருந்தேன்.

அவரும் சளைக்காமல் விடாக்கண்டனாய், ’எழுதுங்கள் என்று நான் கேட்கவில்லை சார். தாங்களாகவே எழுதுவீர்கள் என்று அடித்துக் கூறுகிறேன்… நன்றி’ என்று முறுக்குவெட்டாய்ப் பதிவை முடித்திருந்தார்.

அதில், குறுக்குவெட்டாக என்னைப் பற்றிய குணப்பீடும், படத்தைப் பற்றிய மதிப்பீடும், ஒருசேர அமைந்திருந்தது. முன்பெல்லாம், எல்லாத் திரையரங்குகளிலும், காலைக் காட்சி 10.30 / மதியக் காட்சி 2.30 / மாலைக் காட்சி 6.30 / இரவுக் காட்சி 10.30 என்று ஒரு ஒழுங்குமுறை நிதானம் இருந்துவந்தது.

இப்பொழுதெல்லாம், நாம் பார்க்க விரும்பும் திரைப்படம், எந்தத் திசையில், எந்தக் காட்சி மட்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது கூகுளிடமிருந்து!

திரையில் படம் போடுகிற அந்த நேரமும், நம் நேரமும், அந்தத் திசையும் நமக்குக் கூடிவரவும் வேண்டியதிருக்கிறது!

மாம்பலம் இரயில் நிலையத்தில் ஒருவர், ‘நல்லாருக்கீங்களா?’ என்கிறார். மருத்துவமனை போய்க் கொண்டிருக்கிற சங்கதியை இவரிடம் எதற்குச் சொல்ல வேண்டும் என்பதாய் மறுகி, ‘நீங்க…?’ என்கிறேன்.

’திட்டக்குடியில் நடந்த படப்பிடிப்பிற்கு, கலைராணி மேம்மும் நீங்களும் வந்திருந்தீங்க’ என்கிறார்.

அது நடந்து, பத்து வருடங்களைத் தொட்டிருக்கும். ஆமா, ’கிடா பூசாரி மகுடி’ படம் தானே… அதுலெ நீங்க?’ என்க, ’ஜெயக்குமார் டைரக்ஷன்… நான் கேமரா’ என்கிறார் இரத்தினச் சுருக்கமாக! ’பேரு’ என்று நெற்றியைச் சுருக்க, ’செல்வம்’ என்கிறார் அவர்!

அப்படி ஒரு முகத்தைப் பார்த்ததாகவோ, பரிச்சயம் கொண்டிருந்ததாகவோ எனக்கு எதுவும் நினைவிலேயே இல்லை. மரியாதைக்காக, ’இப்ப என்ன படம் செய்றீங்க?’ என்று கேட்டுவைக்க, ‘படங்கள்ல நடிச்சுக்கிட்ருக்கேன்… இப்பக்கூட ‘குட் டே’ படத்துல நடிச்சிருக்கேன்’ – இது அவர்!

‘நான் அதெப் பாக்கணும்… நண்பர் பார்க்கச் சொன்னார்’ என்று இழுக்கவும், ‘நல்ல படம் சார்…. திட்டக்குடி ஷூட்டிங்லெ, ஒரு தடவ நீங்க, சாதாரணமா மொகத்த வச்சுகிட்டு அழுது காமிச்சீங்க… அதுதான் சார் எனக்கு இன்ஸ்பிரேஸன்’ என்று அவர் கூறவும், எனக்கு எதுவும் புரியாமல், அவரிடமிருந்து வெட்கப்பட்டு கழறுகிறேன்.

இப்பொழுது காலம், மருத்துவமனைக்கு ’டேக்கா’ கொடுக்கச் சொல்லிவிட்டு, என்னைக் கைபிடித்து, ’பிவிஆர் கலாட்டா’விற்கு இழுத்துச் சென்றுவிட்டது.

வேலை தலைக்குமேல் கிடந்து, என் தலைக்குள் கொப்புளங்களை உருவாக்கிக் கொண்டிருக்கையில், மருத்துவரைப் புறம்தள்ளி, அரக்கப்பரக்கப் படம் பார்க்க ஓடி வந்திருப்பதை நினைக்கையில், எனக்கே அவமானமாயிருந்தது.

அதென்ன கணக்கென்று தெரியவில்லை, மதியம் சாப்பிடுகிற நேரத்தில் 12.50க்குப் படம்! எதையாவது உள்ளே தள்ளலாமென்றால், ’கீதம் ரெஸ்ட்ராரெண்’டில் வரிசை நீண்டிருந்தது, இது தோதுப்படாது என்று, அரங்கம் 4க்குள், ஒட்டிய வயிற்றுடன் நுழைந்தால், விளம்பரம்… விளம்பரம்… விளம்பரம்… வந்த விளம்பரங்களே திரும்பத் திரும்ப என்று, படம் பார்க்கும் மனநிலையையே வெறுக்க வைத்திருந்தன!

ஜி.நாகராஜன்

ஓடிடியில் எல்லாம், நம் கைக்குள் அவை அடங்கிக் கிடக்கின்றன. யோசித்துப் பார்த்தால், அவர்கள் தயாரிப்புகளை நம் தலைக்குள் திணிக்க, உண்மையில், அவர்கள்தான் நமக்குச் சலுகை விலையில் படம் காட்ட வேண்டியிருக்கும்!

அரங்கில், என்னையும் சேர்த்து வெறும் 21 உயிர்கள் மட்டுமே – இரண்டாம் நாளில் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டாவது நபர் நான்! ’கீதம் ரெஸ்ட்ராரெண்ட்’, மௌனமாக ஒரு செய்தியை, எனக்குள் கடத்திக் கொண்டிருந்தது-கலையாவது கத்திரிக்காயாவது!

ஆனாலும், மனிதர்களின் கதைபொதி வாழ்வினை, ஓர் உணர்வுக் கோலமாய் ஆக்கிக் காட்டும் காவியச் சவால், கலைப் படைப்பிற்குள்தான் ஒளிந்திருக்கிறது.

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், நெறியாளுநர்கள் என்று, தயாரிப்பு நிறுவனத்தின் நீண்ட ’நன்றி’ப் பட்டியல் திரையில் ஓடுகிறது. எல்லா வயதினரையும் என்மேல் வாஞ்சை கொள்ளவைத்து, என்னை உலகிற்கு நல்ல தாத்தனாய் அடையாளங்காட்டிய திரை நெறியாளுநர், மதுமிதா அவர்கள் பெயரும் அதில் வருகிறது.

முகமுறுவலுடன், இருக்கையில் நிமிர்ந்து உட்காருகிறேன். என்னை நிமிர்த்திய அடுத்த இடம், ‘இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை; நிர்ப்பந்தித்திருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல்; விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள்; பட்டுக் கொண்டேயிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம் – இவையே அவன் வாழ்க்கை!

அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலரைப் போலவே, நாளை மற்றுமொரு நாளே’ என்று ஒரு பெரிய மேற்கோள் போட்டு, அதன்கீழ், ’ஜி.நாகராஜன்’ என்கிற பெயரைத் திரையில் பார்த்ததும், ஆச்சரியத்தில் மனசு கூத்தாடத் தொடங்கியது.

ஜி.நாகராஜன் மாதிரியான, தன்னைச் சிதைத்துக் கொண்ட ஒரு ஆளுமையைப் பற்றிய படம் என்பது புரியத் தொடங்கியதும், மனம் புன்னகை பூக்கத் தொடங்கியது.

ஜி. நாகராஜனைப் பற்றிக் கொஞ்சமாவது இங்குப் பேசியாக வேண்டும். அதற்கே, இந்தத் திரைப்படக் குழுவிற்கு நன்றி சொல்லவேண்டும். அது, 1976-ம் ஆண்டாக இருக்கும் – ‘விழிகள்’ இலக்கிய இதழை, நண்பர்களுடன் மதுரையில் நடத்திக் கொண்டிருந்த நேரம்!

மேலக்கோபுரத்திற்கு எதிரிலிருந்த பிர்லா ஹவுஸிற்குப் பக்கத்துச் சந்திலிருந்த திருப்பதி லாட்ஜில், என் அறையில், ’விழிகள் இலக்கிய வட்டக் கூட்டம்’ நடந்து முடிந்திருந்தது.

வந்தவர்கள் விடைபெற்றுப் போனபின், கைகள் இரண்டையும் பின்னுக்குக் கட்டியபடி, வாசல் நிலையில் ஒருக்களித்துச் சாய்ந்தபடி, அழுக்குப் பீடித்திருந்த ஜிப்பாவும் வேட்டியுமாக, பரட்டைத் தலையுடன், ஒருவித குமட்டும் வாடையுடன், மழித்த முகத்துடன் ஒரு ஜீவன் வந்து நின்றது.

“யார் வேணும்?” – நான்!

அறையை மேய்ந்தபடி,  “விழிகள் இலக்கியக் கூட்டம் இங்கதான் நடக்குதா…. பா.செயப்பிரகாசம் இங்க வரச் சொல்லியிருந்தாரு” என்கிறார்.

’மனமும், நல்ல குணமும், உன் நினைவை விட்டு விலகும்’ என்கிற வாத்தியார் பாடம் பசுமரத்தாணியாய் எனக்குள் இறங்கியிருந்தும், அமரச் சொல்லி, சாராய / கஞ்சா வாடையைச் சகித்தபடி, அவரிடம் பேசுகிறேன்.

அவர்தான், ’நாளை மற்றுமொரு நாளே’, ’குறத்தி முடுக்கு’ (குறுநாவல்), ’கண்டதும் கேட்டதும்’ (சிறுகதைத் தொகுப்பு) போன்ற படைப்புகள் தந்திருந்த எழுத்தாளர் ஜி.நாகராஜன்!

அன்றையக் கணக்கிற்கு, இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு பிரிகிறார். அதன்பின் தினத்திக்கும் அறைக்கு, விழிகள் அச்சாகும் நண்பர் ராமியின் வடக்கு மாசி வீதி அருசா அச்சகத்திற்கு, அதன்பின்… நான் பணிபுரியும் பல்கலைக்கழகத்திற்கே அதே கோலத்தில் வருவதும், சந்திப்பதும், கேண்டீனில் சாப்பிடுவதும், மொய் எழுதுவதுமாகப் பொழுதுகள் கழிந்திருந்தன.

எந்தச் சஞ்சலமும், அவமானமும், அசௌகரியமும் இல்லாமல், உரிமையுடன் காசு கேட்பார். அவருக்கும் நமக்குமே ஒரு நாளிலேயே அதுவும் பழகிப் போய்விடும்! அவரின் கட்டை எரிகிற வரையிலும், எனக்கும் அவருக்குமான சந்திப்புகள் இருந்துவந்தன.

அப்போது ’விழிகள்’ இதழில் இப்படியாக எழுதியிருந்தேன் :-

’பரத்வாஜ கோத்திரத்துக் கணபதி அய்யர் புத்திரன், இந்தச் சமூகத்திற்கு இறுதியில் விட்டுச் சென்றது, அவர் அணிந்திருந்த ஜிப்பாவின் ஒரு பக்கப் பையில் ஒளிந்திருந்த, காக்கிப் பேப்பரில் சுற்றப்பட்ட சிறு கஞ்சாப் பொட்டலமும், இன்னொரு பக்கப் பையில், ஒரு வெட்டும்புலி தீப்பெட்டியும்தான்’ என்று!

‘அறிவினில் உயர்வாகச் சொல்லிக் கொண்டாய், மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்’ – அவருக்காகவே எழுதிய வரியாயிருக்கும்!

’குட் டே’ படத்தின் பெரும்பாலான காட்சிகளில், எனக்கும் ஜி.நாகராஜனுக்கும் நடந்திருந்த சம்பாஷணைகள் நினைவிற்கு வந்துவந்து சென்று கொண்டிருந்தன.

1978-ல் ஒருநாள், மதுரை அமெரிக்கன் கல்லூரி முன்பு, ஜி.நாகராஜனும் நானும் எதிரெதிரே சந்திக்கிறோம்.

அருகிருக்கும் ‘ராஜாஜி பூங்கா’வில் ‘பண்டிதர் மூவரும் மாண்டதொரு சிங்கமும்’ நாடகம் போடுறோம்… பாக்க வாங்க’ என்கிறேன்.

’எல்லாரும் பாத்து ரசிக்கிற மாதிரிதானே நீங்களும் நாடகம் போடுறீங்க… அத ஏன் நான் பாக்கணும்?… யாராவது கல்லெறிஞ்சி நாடகத்த நிறுத்துனாங்கன்னு சொல்லுங்க, அப்ப வந்து நாடகத்தப் பாக்குறேன்’ என்று சொல்லி, எந்தச் சங்கடமும், சங்கோஜமுமின்றி, அவர் நடந்தார். இதுதான் ஜி.நாகராஜனுக்கான எளிய அடையாளம்!

25 ஆண்டுகளுக்குப் பிறகு, 2003-ல், அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை’ நாடகம் என் நெறியாளுகையில் நிகழ்ந்தபோது, மேடையில் சிலர் ஏறி நாடகத்தை நிறுத்தச் சொன்னபோது, எனக்குள்ளிருந்து ஜி.நாகராஜன் வெளிவந்து, என்னைப் பார்த்து, என் தோள் தட்டிச் சிரித்துக் கொண்டிருந்தார்.

அவரின் ’கலக’ வகைப்பாட்டிற்குள் நானும் வந்து சேர்ந்திருந்த அனுபவத்தை அது தந்திருந்தது. அதைப் பகிர்ந்துகொள்ள, அப்பொழுது அவர் உயிருடன் இல்லை. அவரின் ’நாளை மற்றுமொரு நாளே’ கந்தன், இன்னமும் எனக்குள் கபடி ஆடிக் கொண்டிருப்பவன். ’கந்தன்’தான் ஜி.நாகராஜன்!

கல்லைத் தூக்கி எறிந்து கண்ணாடியை உடைத்துவிட்டு, எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல், எந்தப் பதை பதைப்பும் இன்றி, அவனால்தான், சாவதானமாக எதையும் கடந்து செல்லமுடியும். அப்படி ஒரு கதாபாத்திரம் அது!

ஜி.நாகராஜனையும், அவர் படைத்து உலவ விட்டிருந்த கந்தனையும், இரத்தமும் எலும்பும் சதையுமாக, இருவரையுமே எனக்குத் தெரியும் – நன்றாகத் தெரியும்!

இவ்வளவிற்கும், ஒருகாலத்தில் அவர் பெரிய வாசிப்பாளர்; அதிகார அடாவடி செய்பவர்களை அரட்ட, மிரட்ட ஆங்கிலத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்!

அப்பொழுதெல்லாம், பிரக்ஞைபூர்வமாகத்தான் இப்படிச் செய்கிறாரோ எனும் சந்தேகம் எனக்குள் வந்துபோகும். ’கம்யூனிஸ்ட்’ என்பதால், ஏ.ஜி.அலுவலம் / அமெரிக்கன் கல்லூரியிலிருந்தும் வெளியேற்றப்பட்டவர்.

நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்பாளராயுமிருந்தவர்; மதுரையில் ஸ்டூடண்ட் டுடோரியல் கல்லூரியில் (STC) விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர்; ’ஜி.நாகராஜன், இப்பொழுது எங்கள் தனிப்பயிற்சிக் கல்லூரியில் வகுப்பெடுக்கிறார்’ என, சினிமாக் கொட்டகைகளில் சிலைடுகள் போடப்பட்ட காலமுமிருந்தது.

அது அவரின் வகுப்பெடுக்கும் திறனுக்குச் சான்று! அவரின் கம்பீரத்தைப் பழகிய பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆஜானுபாகுவான உடல்வாகு; முனையில் வளைந்த அழகிய மீசை; வாரிச் சீவிய முடி; மடிப்புக் கலையாத சட்டை; வேட்டியின் பின்புறத்தை இடக்கையால் பிடித்தபடி, வலக்கையால் புகைத்தபடி, திமிர்ந்த ஞானச்செருக்குடன், மிடுக்கான நடையுடன் அவர் வருவார் என்பார்கள்.

இப்பொழுது நான் பார்த்த ஜி.நாகராஜன், வாளிப்பு இழந்த, நெஞ்சாங்கூட்டு எலும்புகள் துருத்தி நிற்கிற, பார்க்கிற யாவரும் விலகிச் செல்ல எத்தனிக்கிற ஒரு நபர்! ஜி.நாகராஜன் மாதிரி, இப்படியான சுதந்திர வாழ்க்கை வாழ்ந்தால் எப்படியிருக்கும் என, நானும் அடிக்கடி யோசிப்பதுண்டு.

ஆனால், காசுக்காக ஒவ்வொருவரின் முகம் பார்த்து வாழ்வது நமக்கு ஆகாதது; இன்னொன்று, குடி, கஞ்சா, கூத்தியென்று வாழ்வதும் நினைத்துப் பார்க்க முடியாதது. அவை, தனிக்கதையாய்ப் பேசப்பட வேண்டியவை!

பூரிப்பு முகத்தில் பூத்துக் குலுங்க, திரைக்குள் நான் முகம் புதைக்கத் தொடங்கினேன். மூலக்கதை ’பிருத்விராஜ் இராமலிங்கம்’ என்று பெயர் போடப்படுகிறது.

உரையாடல் பகுதியிலும் அவர் பெயர் வருகிறது. தயாரிப்பாளரென்றும் அவர் பெயர் வருகிறது. அவர்தான், கதை நாயகன் ’குமார் என்கிற சாந்தகுமா’ராகவும் வருகிறார்.

ஜி.நாகராஜன் வடித்திருந்த கந்தனின் இன்னொரு சாடையில்! அட்டகாசம் பண்ணியிருக்கிறார். மனுஷன், பாத்திரமாய் வாழ்ந்திருக்கிறார். நடிகவேள் எம்.ஆர்.ராதா மாதிரி, இரசிக்கும்படி, தன் பாத்திரத்தை, அணியணியாய் அற்புதமாய்ச் செதுக்கித் தந்திருக்கிறார்.

திருப்பூரில், ‘தாய் பேப்ரிக்’ஸில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும், B.A. History படித்திருந்த ஒரு புதிய ’கந்த’னின் கதை-அகழ்வாராய்ச்சிகள் செய்து தமிழின் வரலாற்றை அழுத்தமாக்கி, இந்தச் சமூகத்திற்குத் தரவேண்டுமென்று ஆசைப்பட்டு, அப்பா இறந்ததால் எதுவும் கைகூடாமல், மாத ஊதியத்திற்கு அடிமைச் சேவகம் செய்து – மனம் சீழ்பட்டு, பின் வாழ்வைப் புரிந்துகொண்டு, திருந்திய ஒருவனின் கதை!

’நாளை மற்றுமொரு நாளே’ என்பது ஜி.நாகராஜனின் கதை! ஆனால் இது, நாளையை மற்றொரு புதிய நாளாகவே ஆக்கிக்காட்ட முயன்றிருக்கிற கதை! படக் குழுவினருக்குப் பாராட்டுகள்!

இவன் மனைவி சத்யா, இரண்டு பெண் குழந்தைகள் – அவர்களின் படிப்புச்செலவு, தனியே இருக்கும் அவன் தாய் – அவருக்கான மருத்துவச்செலவு! இவர்களுக்கெல்லாம் ATM-ல் பணம் போட்டு அனுப்பிவிட்டு, வீட்டு வாடகை கொடுத்துவிட்டு, இந்தக் கவலைகளை எல்லாம் மறக்கக் குடித்தே தன்னை அழித்தவன், ‘குமார் என்கிற சாந்தகுமார்’! சத்யாதான் நினைவுபடுத்துகிறாள், அவனின் பிறந்தநாளை!

போதையில் இருக்கையில், இவனுக்குப் பிடிக்காத எதையும், யாரையும் காரித்துப்புவதற்கான இவனுக்கான ஒரு சொல்லாயிருக்கிறது ’மயிறு’!

இவனைப் பொருத்தவரை, சத்யாவும் இவனுக்கு ‘மயிறு’தான்! அவனின் பிறந்த நாள் போதை, ‘வேணி’யின் நினைவுக்குள் அவனைத் தள்ளிவிடுகிறது. சத்யாவும், இவனுடன் கல்லூரியில் படித்துப் பின் கைபிடித்த பெண்ணாயிருக்க வேண்டும்.

தொலைக்காட்சியில் ஓடும் ‘அலுங்குறா குலுங்குறா’, இவனின் அடிமனதைக் கிளுகிளுப்பாக்க, இவனின் கல்லூரி நண்பன் மணியிடம், இவனின் பழைய காதலி / நண்பி, ’வேணி என்கிற கிருஷ்ணவேணி’யின் செல்பேசி எண்ணைக் கேட்கையில், அவன், ‘சத்யா’ எண் தரட்டுமா என்று சாதாரணமாய்க் கேட்கிறான்.

‘வேணி’யும் இவனின் இன்றைய போதை ஏறிய ’ஐ லவ் யூ’வை, ‘அன்னைக்கே நீ சொல்லியிருக்கலாம்; இன்னைக்கி நீ சொல்லாமலே இருந்திருக்கலாம்’ என்கிறாள்.

வீட்டுக்காரன் அரவம் கேட்டு, ‘நீ எனக்குப் பண்ணாத, நானே ஒனக்குப் போன் பண்ணுறேன்’ என்கிறாள் வேணி! என்னென்ன நடந்து கொண்டிருக்கின்றன – என்னென்ன நடந்திருக்குமென்பதை, வெறும் ஒலி உதிர்ப்புகள் காட்சிகளாய் நமக்குக் கதை சொல்லுகின்றன.

ஒவ்வொரு வார்த்தைகளும், அத்தனையத்தனை இரகசியங்களை உள்ளடக்கிக்கிடக்கின்றன என்பதை, வாழ்வின் தொனியாய், நூல்பிடித்துக் காட்டுகின்றன உரையாடல்கள்!

உரையாடல்கள், அத்தனை இயல்பாக மனசுகளையும், மனப்போராட்டங்களையும் சொல்லிக் கடக்கின்றன. நம்மையும் காட்சிகளால் கடத்துகின்றன. ஒவ்வொரு உரையாடலுக்குள்ளும், ஒன்றோ, பலவோ கதைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.

சஞ்சார பாவமாக, பல கதைகளின் / பலரின் கதைகளின் உணர்வுகளுக்குள் முங்காச்சிப் போட்டுப்போட்டு மூழ்கி எழுகின்ற மனநிலையைத் தருகிறது படம்! நல்ல படங்கள் அதைச் செய்யும். இந்தப் படமும் அதைச் செய்திருக்கிறது.

சத்யா நினைவுபடுத்திய அவனின் ’பிறந்தநா’ளில், அந்த ஓரிரவில் நடந்துமுடிகிற கதைதான் ‘குட் டே’! இரவில் மொடாக் குடியனாக / வீட்டை வெறுத்தவனாக இருந்த அவன், இரவின் விடியலின்போது, அவன் வாழ்க்கையும் ’குடும்பஸ்த’னாக எப்படி விடிகிறது என்பதைக் கலகலப்பாகச் சொல்லப் பார்த்திருக்கிற படம்!

குடும்பம், விட்டுக் கொடுத்தலுடன், புரிதலுடன் எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சொல்லுகிற படம்! குடிகாரர்கள் பெரிய குசும்புக்கார்கள் – அதில் தெளிவானவர்கள் என்பதை ஜி.நாகராஜனின் நடவடிக்கைகளில் பலமுறை நான் கண்டிருக்கிறேன்.

இங்கும் தன்னை அடிப்பவர்களிடமிருந்து தப்பிக்க, ‘குடிகாரன் நான் பொய் சொல்ல மாட்டேன்’ என்று கூறி, விட்டவுடன் ஓடுவதும், பேருந்து நேரக் கட்டுப்பாட்டு அதிகாரி போஸ் வெங்கட், சாந்தகுமாருக்கு அறிவுரை கூற, மிகச் சாந்தமாக, ’நானும் குடிக்கலேன்னா, ஒங்களவிட நெறைய அறிவுர சொல்லுவேன் சார்’ என்பதும் எளிய உதாரணங்கள்.

என்ன ஒன்று, குடிக்காதவன் மனசு பல பக்கம் போய்த் திரும்பும். குடித்தவன் மனசு, நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கும். அவ்வளவே!

இதைக் கதையாக எடுப்பதற்குப் பெரும் துணிச்சல் வேண்டும். ’கார்த்திக் நேத்தா’வின் அனுபவங்கள், கதையானதாய்ச் சொல்லியிருக்கிறார்கள்.

அதற்குள்ளே ஜி.நாகராஜனும் இருக்கிறார் என்றுதான், அவருடனான என் அனுபவத்தில் தோன்றுகிறது. அல்லது இந்த மனநிலையினர் எல்லோருமே இப்படித்தான் இருப்பார்கள் போலும்!

இது, ஜி.நாகராஜன் வகையறாப் படமில்லை என்பதற்காக, டாஸ்மாக்கை மூடச் சொல்லிப் பெண்கள் நடத்தும் போராட்டமும், கைதும், ஏமாற்றும் நீதித்துறையும் பேசப்படுகிறது.

‘மக்கள் அதிகாரம்’ பெண்களைக் கொண்டு முன்னெடுத்த போராட்டமும், ஒரு கணம் நினைவிற்குள் வந்துபோனது.

என் பிரச்சினைகள் மறந்து, சாந்தகுமாரின் பிரச்சினையாய்ப் படம் என்னை உள்ளிழுத்துக் கொண்டது மட்டுமல்லாமல், ஜி.நாகராஜனின் நினைவுகளிலும் என்னைத் தள்ளிவிட்டு, எனக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது.

வயிறும் இப்பொழுது முழுமையாக நிறைந்திருக்கிறது, என் மனசைப் போலவே!

திரைப்படம், தானாகவே என்னை எழுதத் துண்டியிருக்கிறது – ஜி.நாகராஜனின் நினைவின் அனுபவத்திற்குள் என்னைச் சிக்க வைத்தமைக்காகவும், அழகிய, அவசியத் திரைப்படமாக அமைந்து போயிருப்பதற்குமாக!

திரைக் கதாசிரியரும் (பூர்ணா ஜெஎஸ் மைக்கேல்), நெறியாளுநரும் (அரவிந்தன்), நடிக நடிகையரும், தொழில்நுணுக்கர்களும் (ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: மதன்குணதேவ், இசை: கோவிந்த் வசந்தா, கலை இயக்கம்), படம் பேசுகிற, ’ஏழு மலை, ஏழு கடல்’ என்கிற ஆயாசத்தை, அநாயசமாகத் தாண்டியிருக்கின்றனர். திரைக்கதை அபாரமாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது.

முதற்சட்டகம், திருப்பூர் – கொங்குநகர் காவல் நிலையத்தின் பரபரப்பைக் காட்டுகிறது. அதற்குள்ளே, படம் பேசும் பெரும்பகுதிப் பிரச்சினைகள் பாதிக்கப்படவர்களால் முன்மொழியப்படுகின்றன.

’முறைவாசல்’ கட்டணம் கேட்ட வீட்டு உரிமையாளரின் மண்டையை உடைத்திருக்கிறான்;

’நம்பர் இருக்காம்மா’ என்கிற காவல்துறை விசாரிப்பில், உரிமையாளர் மனைவியின் செல்போனைப் பிடுங்கிக் கிணற்றுக்குள் தூக்கி வீசியிருக்கிறான் என்பது தெரிகிறது; வேணியின் வீட்டிற்குக் கேக்வெட்டிக் கொண்டாடப்போய், அந்தப் பிரச்சினையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான்;

தற்கொலை செய்ய, பாலத்திலேறி நின்று கொண்டிருப்பதாகக் காவல்துறையின் வாக்கி டாக்கிகளில் தகவல் பறக்கிறது.

ATM எந்திரத்தை அடித்து நொறுக்கியிருக்கிறான்; ’இதுக்கு முந்திப் பார்த்ததில்லெ’. காவல் அதிகாரி உடையுடன், வாக்கி டாக்கியுடன் அலைந்து கொண்டிருக்கிறான் என்கிற தகவல் கிடைக்கிறது; இத்தனைப் புகார்களுக்கும் நடுவில், குழந்தை ஒன்று காணாமல் போயிருக்கிற புகாரும் வருகிறது!

அவன் அறை நண்பன் செய்யதுவைக் கேட்டால், அவனைப் பற்றிய போட்டோ கிடைக்கும் என்பதாய்ப் பெரியதொரு மனப் பதிவைப் பார்வையாளரிடம் ஏற்படுத்தி, ’யார் அவன்?’ என்கிற எதிர்பார்ப்பை பார்ப்பவர்களின் இதயங்களுக்குள் விதைத்துவிடும் கதைசொல்லும் முறை அழகு!

இந்தப் புகார்கள், விசாரிப்புகளின் காட்சி வடிமாகக் கதை, காலநேரம் குழப்பமில்லாமல் விறுவிறுப்பாய் நகருகிறது. தொகுப்பாளரின் சாமர்த்தியத்தால், போரடிக்காமல், பார்ப்பவர் ஆர்வத்தைத் தூண்டும் படி, அந்த முதற்காட்சி, விரியும் காட்சிகளின் குவியும் காட்சியாய் அமைந்திருக்கிறது.

’பாட்டில் ராதா’வைப்போல், இங்கும், குடியை விட்டொழிக்கிற, குடும்பத்தை நேசிக்கிற, பெரிய தருமோபதேசம் பார்வையாளர் இதயத்தில் மீட்டிக் காட்டப்படுகிறது.

இது கார்த்திக் நேத்தாவின் அனுபவமாயிருக்கிறது. ஜி.நாகராஜனுக்கு இந்தத் திருந்துகிற அனுபவம் கடைசிவரையும் அமைந்துவரவே இல்லை என்பதுதான் சோகம்!

எனக்குத் திருமணம் ஆகி, மதுரை சொக்கலிங்கநகரில் குடியிருக்கிறேன். ஜி.நாகராஜன் என் முகவரி கேட்டு நண்பர்களைத் தொந்தரவு செய்திருக்கிறார்.

குடும்பத்தில் குழப்பம் வந்துவிடக் கூடாதென்று நண்பர்கள் என் முகவரியை அவருக்குக் காட்டிக் கொடுத்திருக்கவில்லை.

அப்பொழுது ஒரு நாள், 1982 ஆக இருக்கும், சர்வோதயா இலக்கியப் பண்ணை அருகே அவரை எதேச்சையாய்ச் சந்திக்கிற சூழல் வாய்க்கிறது. என்னைத் தேடி அலைந்ததை அவர் வர்த்தையாய்ச் சொல்லுகையில், அவர் கண்கள் அதற்குச் சான்றிதழ்கள் தந்திருந்தன.

இனி அவர் அதிக நாட்கள் வாழமாட்டார் என்பதை, அவர் உடம்பின் நடுக்கம் காட்டிக் கொண்டிருந்தது.

அவரின் கைவிரல்களின் இடுக்குகளெல்லாம் வெடித்துக் கிடந்தன. விரல்கள் வீங்கிக் கிடந்தன. நான் அவரைவிட்டு விலகிச் சென்றிருந்ததை, நான் அவரை ஏமாற்றிவிட்டதாய்க் குற்றம் சாட்டினார்.

தலையைக் குனிந்துகொண்டு, தீர்க்கமாகச் சொன்னார், ’மார்க்ஸியவாதிகளும் மனைவிமார்களும்’ என்கிற பெயரில் புதிய தொகுப்பைக் கொண்டு வரப்போவதாக! மனசுக்குள் சிரித்துக் கொண்டேன்.

இனி எப்பொழுதும் அவரைச் சந்திப்பது சாத்தியப்படாது என்பதால், கையில் தட்டுப்பட்ட நூறு ருபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு, ’வீடு எங்கயிருக்கு? வரணும்’ என்கிறார்.

என் செண்பகம் என்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு ஊறு வந்துவிடக்கூடாதே என்று அப்பொழுது பயந்திருந்தேன். ’நானே வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன், அதுக்கு முந்தி, நீங்க சொன்ன தொகுப்பை எழுதிக்கொடுங்க’ என்று சொல்லிப் பிரிகிறேன்.

என்னைப்போல், இன்னும் யார் யாரையெல்லாம் அவர் கதையாக்கி இருப்பார் என்பதை அசைபோட்டபடியே, மதுரைக்குள் நுழைகிறேன். அதன்பின், கொஞ்சநாளில், நண்பர் ஐஓபி சிவராமகிருஷ்ணன் தகவல் சொல்லி, சுடுகாட்டில்தான், சடலமாக அவரைப் பார்க்கிறேன்.

’குட் டே’ சாந்தகுமாரைப் போலவே குடும்ப ஒவ்வாமை, ஜி.நாகராஜனுக்கும் இருந்திருக்கிறது. குழந்தைகளின்மீது கொண்டிருக்கிற பாசம், அதை வெளிப்படுத்தத் தெரியாத சிடுமூஞ்சித்தனம் அவர்களை வாழவும் / வாடவும் செய்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அப்பொழுது நான் நாகமலை புதுக்கோட்டை என்ஜிஓ காலனியில் தங்கியிருக்கிறேன். ஒருநாள் மாலை, என் புத்தக அலமாரியிலிருந்து, ’ரென் அண்ட் மார்டின்’ ஆங்கில இலக்கணப் புத்தகத்தை எடுத்துத் தன் அக்குளில் சொருகிக் கொள்கிறார் ஜி.நாகராஜன்!

’ஒங்களுக்கு எதுக்கு இது?’ என்று கத்துகிறேன். மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தை என்னிடம் சொல்லாமல், செய்யதுவின் கேள்விக்குப் பதிலேதும் சொல்லாத சாந்தகுமார்போல், வெளியே போகிறார்.

பின்வாசல் வழியாக வந்துநின்று, அவர் எங்கு போகிறார் / என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கிறேன். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில், ஓரமாய்ப்போய் நிற்கிறார்.

விளையாட்டு முடிகிற வரையில், ஒரு கல்லில் உட்கார்ந்திருந்து விட்டு, விளையாட்டு முடியவும், ஒரு சிறுவனிடம் என்னிடமிருந்து சுட்ட ’ரென் அண்ட் மார்ட்டின்’ நூலைக் கொடுத்துவிட்டு, இவர் இன்னொரு திசையிலே நடக்கிறார்.

’யார் அந்தச் சிறுவன்?’ இவரைக் கண்டுகொள்ளாத அவனிடம், எதற்கு, என் நூலைக் கொடுக்கவேண்டும்? குழம்பித்தான் போயிருந்தேன். பின்னாளில்தான் தெரிந்தது, அவன் அவருடைய பையன் என்று! இரண்டு தெருக்கள் தள்ளிதான், ஜி.நாகராஜனின் மாமியார் வீடு இருந்ததென்பது!

சாந்தகுமார் தன் குழந்தைகளின் உருவங்களைச் சுவற்றில் கரியால் வரைவதைப்போல், ஜி.நாகராஜனின் பாசமும், பரிவும் யாரிடமும் பகிராமல், அவர் மனசுக்குள்ளேயே சித்திரமாய்ப் பொருமிக் கிடந்திருக்கிறது.

வீட்டுக்காரர், செய்யதுவிடம் சாந்தகுமார் அடாவடித்தனம் பற்றி முறையிட, போனை சாந்தகுமாரிடம் செய்யது குடுக்கச்சொல்ல, ‘என் தாலியெ அறுக்கனுங்றதுக்காகவே வருவீங்களாடா… நான் ஊருக்கு வந்து ஒருமணி நேரங்கூட ஆகலெ. அதுக்குள்ள’… என்று கத்த, போனை கிணற்றுக்குள் வீசி அடிக்கிறான் சாந்தகுமார்.

எனக்கு நடந்த கதை வேறுமாதிரியானது. காந்தி மியூசியத்திலிருந்து ஜி.நாகராஜன் அடித்துத் துரத்தப்பட்டபின், முகக்காயங்களுக்கு மருந்திட்டு, மேல ஆவணி மூலவீதியில் அப்போதிருந்த மோகன் போஜனாலயாவில் சாப்பிடவைத்து, நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கிறேன்-சுந்தர ராமசுவாமியைப் பார்க்கப் போகவேண்டும் என்று அவர் அடம் பிடித்ததால்!

பிற்பாடு, சுந்தர ராமசுவாமியை மதுரையில் ஒருமுறை சந்திக்கையில் அவர்தான் சொன்னார், ’நான் இவ்வளவு வருஷமா நாகர்கோயில்லதான் இருக்கேன். கஞ்சா எங்கெ கெடைக்கும்னு எனக்கு இதுவரைக்கும் தெரியாது.

நீங்க அனுப்பி விட்டீங்கன்னு சொல்லி, பைய வீட்ல வச்சிட்டு வெளிய போய்ட்டு வாரேன்னு போனார். திரும்பிவந்தா, கையில கஞ்சாப் பொட்டலம்! பாம்பறியும் பாம்பின் கால்ங்றது சும்மாச் சொல்லல’ என்று அவர்பாணியில் அதை இலக்கியமாக்கிச் சொன்னார்.

ஜி.நாகராஜன் எங்கெங்கோ சுற்றிவிட்டு, நீண்ட நாட்களுக்குப் பின், அவர் திரும்பி வரும்போது, நான் அப்பொழுது வடக்கு வெளிவீதியில் தங்கியிருக்கிறேன். அழகேந்திரன் ஆட்டோமொபைல்ஸ் மாடியில்!

அப்பொழுது அது, பணிபுரிவோர் மாத வாடகைக்குத் தங்குமிடம். நிறைய அறைகள்! பெரும்பாலும் மருந்துகள் விற்பனைப் பிரதிநிதிகள் அங்குத் தங்கியிருந்தனர். அது கொஞ்சம் விசாலமான இடம்! ஜி.நாகராஜனுக்கு அந்த இடம் பிடித்திருந்தது. ஒரு பாயை அவருக்கு வாங்கிப் போட்டிருந்தேன். வந்தால் வெளியில் படுத்துக்கொள்வார். காலையில் காணாமல் போயிருப்பார்.

ஒருமுறை என் ஆசிரியர் தமிழவன் என் அறைக்கு வந்து, ‘அமைப்பியல்வாதம்’ பற்றி வகுப்பெடுத்தார். அப்பொழுது அவர், ஜி.நாகராஜன் பற்றிச் சொல்லி, ’அவர்ட்ட இவ்வளவு உரிமையா பேசுறியே, அவர்ட்ட ஒரு நல்ல நேர்காணல் பண்ணலாமே நீ’ என்றார்.

நான் சொன்னேன், ‘ஒருநாள்ங்றதுனால நீங்க சொல்லுறிங்க. கொடலெப் புடுங்குற அந்தக் கஞ்சா / சாராய வாடையில, அவரு பக்கத்துலயே என்னால உக்கார முடியாது சார். நான் எங்க பேட்டி எடுக்குறது?’ என்று! அதுதான் என் நிலையாய் இருந்தது.

ஒருநாள் கட்டிட உரிமையாளர் என்னிடம் வந்தார்.

’சார்! இந்த மாசத்தோடு நீங்க ரூமெக் காலிப் பண்ணிக்கிருங்க’ என்று கடுமையாகப் பேசினார். எனக்கு எதுவும் புரியவில்லை. எதற்கு? என்றுதான் நானும் கேட்டேன். அவர் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

என் முக அடையாளத்தை வைத்து, அங்கு உள்நுழைந்த ஜி.நாகராஜனுக்கு, மருந்துகள் விற்பனைப் பிரதிநிதிகள் அனைவரும் நண்பர்களாகிப் போயிருந்தனர். மருந்துகளோடே பழகிப் போனதால், அவர்கள் ஜி.நாகராஜனின் நாற்றத்தைச் சகிக்கப் பழக்கப்பட்டிருக்க வேண்டும்.

புதியபுதிய நபர்களின் அறையின் வெளிப்புறம் தேடி, நான் வாங்கிப் போட்டிருந்த பாய், அவரால் இடம்மாறத் தொடங்கியது. பரவாயில்லையே, அவருக்கு நண்பர்கள் பெருகுகின்றனரே என்று நானும் மகிழ்ந்திருந்தேன். என் அறைக்கு, எப்போவாவது வருவது என்று அவர் வழக்கப்படுத்தி இருந்தார்.

விஷயம் இதுதான்: இப்பொழுது அவர் அவர்களுடன் கூடியிருந்து, ஒவ்வொரு நாளும் கஞ்சா அடித்திருக்கிறார். கஞ்சா குடிப்போர் சங்கமாக மாறியிருந்திருக்கிறது அது! அவர்களுக்குள்ளே தகராறு வர, அது பெரும் பிரச்சினையாகி இருந்திருக்கிறது. இது எதுவும் எனக்குத் தெரியாது.

இதன் உச்சம், ஜி.நாகராஜனுக்கும் உரிமையாளருக்குமே சண்டையாகி இருக்கிறது. ’யார்’ என்று விசாரித்தால், என் முக விலாசம் சந்திக்கு வந்திருக்கிறது.

’சங்கம்’ வைத்திருந்த விற்பனைப் பிரதிநிதிகள் அனைவரையும் அறையைக் காலி பண்ணச் சொல்லிவிட்டார், இப்பொழுது என்னையும்! அங்கிருந்து நாகமலைப் புதுக்கோட்டை நகர வேண்டியதாகியது எனக்கு! செய்யதுக்கு நேர்த்த நிலையேதான் எனக்கும்!

குடிக்கிற எண்ணம் வரும்போது, தன் குழந்தையின் முகத்தையும், அதன் எதிர்காலத்தையும் நினைத்தால், எவனுக்குத்தான் குடிக்கிற தெம்பு வரும்? என்பதை மனம் திறந்து பேசுகிறது.

’மின்மினியே ராசாத்தி குருடாட்டம் கிடந்தேனே / குற்றமெல்லாம் சாமி நான் உணர்ந்தேனே / அச்சுவெல்லப் பூவே நான் அடிமாடாய்க் கிடந்தேனே/ பாசமென்னா என்னன்னு அறிஞ்சேனே’- வரிகள் மிக எளி மையானவை; மிகச் சாதாரணமானவையே!

ஆனால், படத்தின் சூழலின் நேர்த்தியும், இசையின் வருடலும் நம்மை நெக்குருக வைக்கின்றன. கடத்தப்பட்ட குழந்தை, சாந்தகுமாரின் நச்சரிப்பால் கண்டுபிடிக்கப்பட, சாந்தகுமார் தானாகவே காவல் வண்டியின் பின்னால் போய்க் கைதியாக அமர்ந்து, வண்டிக்கு வெளியே நிற்கிற காவல் அதிகாரி மாது தயாளனைப் பார்க்க, அவர், சாந்தகுமாரைப் பார்க்கிற இடம், அந்த மௌனம், அந்தக் கோணம் இப்போதும் மனதிற்குள் மல்லிகையாய் மணக்கிறது.

என்னவொரு அற்புதச் சித்திரம் அது! ஒளிப்பதிவாளர், நெறியாளுநர், இசைஞர், மாது தயாளனாய் நடிப்பவர், சாந்தகுமாரென்று அனைவரும் அந்தக் காட்சியைத் தூக்கி நிறுத்தி விடுகின்றனர். அங்கேயே படம் முடிந்துவிடுகிற உணர்வு வந்துவிடுகிறது.

அவர் புது ஆளாய் மாறி, அடுத்தவருக்குப் புத்தி சொல்வதைக் கேட்க-பார்க்க கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டியிருந்தது.

இத்தனைக் கலகங்களுக்கும் மத்தியில், சாந்தகுமார், புது மனிதனாய்த் தான் மாறக் கண்டடைந்த புது உலகமாக, அந்தக் குழந்தையின் முகமும் – அதனால் அக்குழந்தையின் பெற்றோர்களுக்கு உருவான மகிழ்ச்சியும், சுடுகாட்டில் மரித்ததொரு முகமும் – அதனால் அக்குடும்பத்தில் உருவான சோகமும், சாந்த குமாருக்கு வாழ்க்கையின் தத்துவத்தை – இன்பம் துன்பம் இணைந்துதான் வாழ்க்கை என்பதை விளக்கி, சாந்தகுமாரைப் புது மனிதனாக்குகிறது. சிறப்பு!

ஒருமுறை ஜி.நாகராஜன் என்னிடம் பேசிக் கொண்டிருக்கையில், ‘ஒருத்தன் நல்ல எழுத்தாளனா வரணும்னா, அவனுக்கு ரெண்டு அனுபவங்கள் அவசியம் வேணும்.

ஒன்னு, ’போலீஸ் ஸ்டேஷன்’; இன்னொன்னு ’ஹாஸ்பிடல்’ என்று வானத்தைப் பார்த்துக் கொண்டு, தீர்க்கமாகச் சொன்னார். அவர் மனசுக்குள் என்ன காட்சிகள் அப்பொழுது ஓடிக் கொண்டிருந்தன என்பது எனக்குத் தெரியவில்லை.

குடிகாரன் பேச்சு என்பதாக, நானும் அதில் அப்போது கருத்தைச் செலுத்தியது இல்லை. பிற்பாடு ஒருநாள், டவுண் ஹால் ரோடு தாஜ் ஓட்டலின்முன் தகராறு செய்தார் என்பதற்காகவும், மேலப் பெருமாள் மேஸ்திரி தெருவிலிருந்த வை.சங்கரன் வீட்டின்முன் தகராறு செய்ததற்காகவும் ஜி.நாகராஜனை பி.4 காவல் நிலையம் அழைத்துச் சென்று, உள்ளேவைத்து அடித்து உதைத்திருந்தனர்.

இவர் பேசிய ஆங்கிலத்தைப் பார்த்துக் காவல்துறையினர் அதிர்ச்சியடைய, அவர்களிடம் சிகரெட் கேட்டு வாங்கி, வெளியே அமர்ந்து குடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அவர்கள் அவரவர் வேலைகளில் ஈடுபட, இவர்பாட்டுக்கு எழுந்து, ’தகறாரு பண்ணியதற்கு அவர்கள் நன்றாக அடித்து விட்டனர். கணக்குச் சரியாய்ப் போய்விட்டது’ என்று வந்துவிட்டார்.

அதைப்பற்றி, ‘ஓடிய கால்கள்’ என்றொரு கதை எழுதியிருந்தார். ’விழிகள்’ இதழில், அவர் பெயரில் வந்திருந்த ஒரே கதை அது!

இந்தக் கதையை அவரிடமிருந்து வாங்கியதே, ஒரு ருசிகர சம்பவமாயிருந்தது.

என்னிடமிருந்த ’மனிதன்’ இதழைக் கிழேபோட்டு, அதில் கஞ்சாவைக் கசக்கிக் கொண்டிருந்தார். எனக்குக் கோபம் சுர்ரென்று ஏறியது. காரணம், அந்த மனிதன் இதழின் அட்டைப் படம், தோழர் மாசேதுங்!

அரை மயக்கத்தில் இருந்தார். சிகரெட்டுக்குள் அந்தக் கஞ்சாப் பொடிகளை அடைத்துவிட்டு, அதைப் பற்ற வைத்திருந்தார். தலை கவிந்து தூங்கிக் கொண்டிருப்பதாய்த் தெரிந்தது.

சிகரெட் அவர் விரல்களின் நடுவே இழுக்கப்படாமலே எரிந்து கொண்டிருந்தது. கோபத்தில் ’இனிமேல் இங்கு வரக்கூடாது’ என்று கத்துகிறேன். குழந்தையாக என்னிடம் கெஞ்சுகிறார்.

’இங்கெ இனுமெ வராதீங்க. போதும், ஒங்களாலெ நான் பட்ட கஷ்டம்’ என்று முகத்தைத் திருப்பிக் கொள்கிறேன்.

மெதுவாக வெளியே போனவர், முக்கால் மணி நேரம் கழிந்துத் திரும்பி வருகிறார். முகத்தில் வெறுப்பைத் தேக்கி அவரைப் பார்க்கிறேன்.

எங்கிருந்தோ வாங்கிவந்த புரோட்டா, மட்டன் கிரேவி பொட்டலத்தைப் பிரித்து என்னைச் சாப்பிடச் சொல்லுகிறார். நான் மறுக்கிறேன். கோப முறுக்குக் குறையாமல் போய்ப் படுக்கிறேன்.

அடுத்தநாள் என்னிடமிருந்த, நான் பயன்படுத்தாத பைஜாமா ஜிப்பாவை அவருக்குக் கொடுக்கிறேன். இனிமேல் சுத்தமாக உடை உடுத்தச் சொல்லுகிறேன்.

புத்தாடை அணிந்தபின், அங்கேயே கழற்றிப் போட்ட கசடுத் துணிகளை – ’சிகரெட்டெ எடுத்து நல்லா ஊதத் தெரியுதில்லெ. அதெ எடுத்துக் குப்பையிலெ போடத் தெரியாதா?’ என்று செய்யது சாந்தகுமாரைக் கோபிப்பதுபோல் – ’வெளியெ கொண்டுபோய்ப் போடுங்க’ என்று கத்துகிறேன்.

நாற்றமெடுக்கும் அந்தத் துணிகளை ஒரு பேப்பரில் சுற்றுகிறார். என்னுடன் ஹைஸ்கூல் பேருந்து நிறுத்தத்திற்கு வருகிறார்.

மூடிக் கிடக்கும் பெட்டிக்கடை மரக்கூட்டில் அதை வைத்துக்கொண்டு நிற்கிறார். பேருந்து வருகிறது. ஏறுகிறோம். ஒருவர் ஓடிவந்து, ‘சார், ஒங்கப் பொட்டணத்தெ வச்சிட்டுப் போறீங்க’ என்று இவரைப் பார்த்துக் கத்துகிறார்.

இவர் அவரைப் பார்த்துவிட்டு, எதுவுமே நடக்காததுபோல் பாவமாக முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்.

’நிங்க வச்சதுதானே?’ என்கிறேன். ‘யாராவது எடுத்திட்டுப் போகட்டும்’ என்கிறார். அந்த அழுக்குக் கவசத்தை யார்தான் பயன்படுத்த முடியும்? எரிக்கத்தான் முடியும்!

– இதுதான், ஜி.நாகராஜன் – இதுதான் அவரின் குறும்பு!

பல்கலைக்கழக கேண்டீனில் பூரி சாப்பிட்டுவிட்டு, விடைபெற்றுக் கொள்ளும்போது நான் சொல்லுகிறேன், ‘இனுமெ காசு எதுவும் தர மாட்டேன். வேணும்னா, கதை எழுதிக் கொடுத்திட்டுக் காசு வாங்கிக்கிருங்க’ என்று அனுப்பி வைக்கிறேன்.

அந்த வைராக்கியத்தில் அவர் எழுதிக்கொண்டு வந்த கதைதான் ‘ஓடிய கால்கள்’! நான் அவரிடமிருந்து பணம் கொடுத்து வாங்கிய கதை அது!

’குட் டே’ படம் ஆரம்பிக்கிற இடம், திருப்பூர் – கொங்குநகர் காவல் நிலையமாகத்தான் இருக்கிறது. அங்கு, சாந்தகுமாரை மையமிட்டுப் பல வழக்குகள்!

நடுநிசி 12மணிக்கு, சாந்தகுமார் தற்கொலை செய்யப் போவதாய், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்திருந்த வேணிக்குச் செல்பேசியில் தகவல் சொல்ல, காவல்துறை அதிகாரி மாது தயாளன், பாலத்தின் மேலிருந்து குதிக்க இருந்த சாந்த குமாரைப் பிடித்துவருகையில், வண்டிக்குள்ளிருந்து சாந்தகுமார் பாடுகிற பாடல், காவல்துறை அதிகாரத்தின் மேலான சரியான நையாண்டி – எதையும் மதிக்காது, தூக்கி எறியும் சாந்தகுமாரின் பீரங்கி வண்டி!

‘வாயெ மூடு’ என்கிற காவலாளியிடன், ‘வாயெ மூடு…தெட் மீன்ஸ் ஷட் யுவர் மவுத் / அத்தமூடு இத்த மூடு ஆனா ஊனா வாயெ மூடு / பேசவே கூடாதுன்னா வாயெதுக்கு எருமெ மாடு…. /பணக்காரன் பேசுவானாம் / பீத்தவாயன் பேசுவானாம் /நொந்தவன் பேசினாக்கா / உள்ளெ விட்டு நொக்குவானாம் / எந்த ஊரு நியாயம் / அட போடா பெருங்காயம்…..’/ என்று பாட,

ஓட்டுநர் அருகில் உட்கார்ந்திருக்கும் மாது தயாளனின் முகம், குற்றவாளிக் கூண்டில் நிற்கின்ற ஒருவனாய்க் குமுறிக் கொண்டிருப்பதும், கொலைவெறி உள்ளுக்குள் எகிறிக் கொண்டிருப்பதும் வார்த்தைகள், பாவங்கள் மூலமாக அன்றி இயல்பான முகத்திலிருந்தே காட்டப்படுவது அருமை!

நெறியாளுநருக்குப் பாராட்டுகள்!

ஸ்டேஷனுக்கு வந்தவுடன், சந்தகுமாரை அடிப்பதற்காக, தன் சட்டையைக் கழட்டிவிட்டு, சாந்தகுமார் சட்டையைக் கிழித்தெடுத்து நையப் புடைக்கிறார். பர்ஸையும், செல்லையும், கோனையும் பிடுங்கி, சட்டையில்லாமல் அடித்து உட்கார வைக்கிறார்.

எந்த அவமானமும் இல்லாமல், சாந்தகுமார் தன் பக்க நியாயங்களையே குழறிக் கொண்டிருக்கிறார்.

அவசரமாய் அனைவரும் வெளியே ஓட, எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல், தன் செல்பேசி, பர்ஸுக்காக, மாது தயாளனின் கழட்டிப் போட்டிருந்த காவல் யூனிபார்ம் சட்டையையும், வாக்கி டாக்கியையும் எடுத்துக்கொண்டு, ஜி.நாகராஜனின் ‘ஓடிய கால்க’ளாக  காவல் நிலையத்திலிருந்து வெளியேறுகிறார்.         

நடித்தவர்கள் பற்றி நிறையப் பேசலாம். இன்னுமே நீளக்கூடியதாயிருக்கும். எல்லோரும் கன கச்சிதமாகப் பாத்திரத்திற்குப் பொருந்தி, புது அழகு செய்திருக்கின்றனர் என்பதனோடு, அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன். 

Comments (0)
Add Comment