1967-ஆம் ஆண்டு அதுவரை தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் அகற்றப்பட்டு, திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த நேரம்.
முதலமைச்சராக இருந்த அண்ணாவைப் பார்க்க வந்த காவல்துறை அதிகாரிகள் “ஆட்சி மாறியதால், எங்களுடைய பொறுப்புகளும் மாறுமா?” என்று கேட்டபோது, ”ஆட்சி மாறியதால், காவல்துறையில் எந்த மாற்றங்களையும் செய்ய மாட்டேன். போய் வாருங்கள்” என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார் முதல்வரான அண்ணா.
இது, அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலிருந்த அண்ணா, காவல்துறையை நடத்திய விதத்திற்கு ஓர் உதாரணம்.
அதற்குபிறகு, எத்தனையோ முதல்வர்கள் பல கட்சிகள் சார்பில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோதும், எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் பார்வையில், குற்றச்சாட்டுக்கு உரியதாகவே மாறியிருக்கிறது காவல்துறை.
இவ்வளவுக்கும் ராஜாஜி சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டில் தான் முதன்முறையாக காவல்துறைக்கு என்று சங்கம் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
தீனதயாளன் என்கின்ற காவல்துறை அதிகாரித் தலைமையில் உருவான அந்த சங்கம் பல்வேறு அழுத்தங்களால், விரைவிலேயே கலைக்கப்பட்டுவிட்டது என்பது ஒரு சோகம்.
அதன்பிறகு, காவல்துறையினர் சங்கம் வைத்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் அவ்வப்போது எழுந்தபோதும், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.
சென்ற ஆட்சியின்போது, சாத்தான்குளத்தில் அப்பா, மகன் இருவரும் காவல் நிலையத்திற்குள்ளேயே சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிரிழந்தபோது பெரும் சர்ச்சை உருவானது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையே நேரடியாகத் தலையிடும் சூழல் உருவானது.
அதைப்போலவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீது வெளிப்படையாகத் துப்பாக்கிச்சூடு நடந்து பல உயிர்கள் பறிபோனபோது, அந்தக் கொடுமையான நிகழ்வும் தேசிய அளவில் கவனம் பெற்றது.
அப்போது, காவல்துறை சார்பில் இத்தகைய அத்துமீறல்கள் நடந்தபோதெல்லாம் தட்டிக்கேட்ட, எதிர்த்துப் போராடிய கட்சியான திமுக ஆட்சிக்கு வந்தபோது, கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது?
கடந்த நான்காண்டுகளில் மட்டும் காவல் நிலையத்தில், நிகழ்ந்த (லாக்கப்) மரணங்களின் எண்ணிக்கை இருபத்து நான்கைத் தொட்டிருக்கிறது.
அண்மையில், தொலைக்காட்சி விவாதத்தில் ஒரு சமூக ஆர்வலர் தெரிவித்த தகவலின்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி தமிழகத்தில் 4 ஆண்டுகளில், 300-க்கும் அதிகமானவர்கள் விசாரணைக் கைதிகளாகப் பிடிபட்டவர்கள் காவல்நிலைய கழிவறைகளில் வழுக்கி விழுந்து மாவுக்கட்டுப் போடப்பட்ட நிலையிலும் காட்சித் தந்திருக்கிறார்கள்.
பல குற்றவாளிகள் பிடிபட்டவுடன் மாவுக்கட்டுப் போடப்பட்ட தோற்றத்தோடு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதை பல காட்சி ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தியே வந்திருக்கின்றன.
இதையொட்டி, கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், “காவல்நிலைய கழிவறைகளில் குற்றவாளிகள் மட்டும் எப்படி வழுக்கி விழுந்து அடிபடுகிறார்கள். ஒரு காவலர்கூட அதே கழிவறையில் வழுக்கி விழுவதில்லையே, இது எப்படி” என்று யதார்த்தமான ஒரு கேள்வியையும் மாவுக்கட்டுப் போட்டவர்களின் சார்பில் எழுப்பியிருக்கிறது.
அதோடு, கொலை செய்யும் எண்ணம் கொண்டோர்கூட இப்படித் தாக்க மாட்டார்கள் என்றும், அரசே தனது குடிமகனைக் கொலை செய்துள்ளது என்றும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
தற்போது, திருப்புவனத்தில் கோவில் காவலளியான அஜித்குமாரின் உயிரிழப்பும் அப்படிப்பட்டதுதான்.
ஒரு செல்வாக்குமிக்க நபரின் நகைகள் காணாமல்போனதாக எழுந்த புகாரையொட்டி விசாரணைக்கு பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு பல்வேறு தொடர் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார் அஜித்குமார்.
கடந்த வாரத்தில் நிகழ்ந்த இந்தக் கொடுமையான சம்பவத்தை அடுத்து, பல்வேறு எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பியிருக்கின்றன.
ஊடகங்கள் பரபரப்பான விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து இந்த உயிரிழப்பு குறித்து அலசிக் கொண்டே இருக்கின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் உடனே உயரதிகாரிகளைக் கலந்து ஆலோசித்த பிறகு, குற்றம் சாட்டப்பட்ட 6 காவலர்கள் கைது செய்திருக்கிறார்கள். விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள், “இத்தகைய சம்பவங்கள் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தொடர்ந்து நடப்பதுதானே. இதை மட்டும் தனித்து, பெரிதுபடுத்தி, ஏன் ஆட்சித் தலைமையை விமர்சிக்கிறீர்கள்?” என்கின்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
அதேசமயத்தில், மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், “எத்தகைய ஆட்சியாக இருந்தாலும், இத்தகைய மரணங்கள் தொடர்ந்து நிகழ என்ன காரணம்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
இத்தகையை கொடுமையான நிகழ்வுகளுக்கு பின்னணியிலிருந்து காவல்துறைக்கு அழுத்தம் கொடுப்பவர்கள் யார்?
திருப்புவனத்தில் நடந்த அஜித்குமார் என்கின்ற இளைஞரின் உயிரிழப்பில்கூட காவல்துறை இந்தளவுக்கு சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்ட விசாணைமுறையைக் கடைபிடித்து அதன் முடிவில், ஒரு உயிரிழப்பு நடக்கக்கூடிய அளவிற்கு திருப்புவனம் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்தது யார்?
காவல் துறையினரை மட்டும் தனித்துக் குற்றம்சாட்டி அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கிற நாம், காவல் துறையினரை ஏவி அழுத்தம் கொடுப்பவர்களையும் விசாரிக்குமா? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா?
இதற்கு முன்பு தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு காரணமாக குற்றம்சாட்டப்பட்ட அதே அதிகாரிகள் பின்னாளில் பதவி உயர்வு பெருமளவுக்குச் செல்ல முடிந்ததும் இங்குதானே நடந்திருக்கிறது.
லாக்கப் மரணங்களில் உயிரிழந்தவர்கள் சாதாரணமான குடும்பவங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களாகவும் இருக்கலாம்.
ஆனால், அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்ப்படுத்த வேண்டிய கடமையைச் செய்ய வேண்டிய காவல்துறை, ஏன் இத்தகைய உயிரிழப்புகளுக்குக் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இருந்து கொண்டிருக்கிறது?
இங்குள்ள சாதாரண அடித்தட்டு மக்களின் கேள்வியும் இதுதான்.
– லியோ