தமிழர்களின் பாரம்பரியச் சொத்து மீண்டும் நம்மை வந்தடைய வேண்டும்!

எழுத்தாளர் கோவை ஞானி
தமிழ் இலக்கிய, விமர்சன உலகில் தவிர்க்க முடியாத பெயர் – கோவை ஞானி. கி.பழனிச்சாமி – இதுதான் இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர்.
முப்பது ஆண்டுகளாக ஆசிரியப்பணி. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கியம், அரசியலில் தடம் பதித்திருக்கிற இவர், சர்க்கரை நோயினால் கண் பார்வையை இழந்தவர்.
நண்பர்களின் துணையுடன் கடைசிவரை வாசிப்பைக் கைவிடாமல் எழுதி வந்தவர். பார்வை இழப்பை மீறிய பார்வையுடன் ‘தமிழ் நேயம்’ என்ற இலக்கிய இதழைக் கோவையில் இருந்து கொண்டு வந்தவர்.
ஏற்கனவே ‘புதிய தலைமுறை’, ‘பரிமாணம்’, ‘நிகழ்’ போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். பல புத்தகங்களை எழுதி இருக்கிற இவரது ‘இந்திய வாழ்க்கையும், மார்க்சியமும்’ (1975) ‘கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை?’ (1996) என்கிற நூல்கள் வெளிவந்தபோது விவாதங்களை எழுப்பி இருக்கின்றன.
மார்க்சியத்தைத் தமிழகச் சூழலோடு, அதற்கான அடையாளத்தைப் புரிந்துகொண்டு பொருத்த வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வந்த இவர், கம்யூனிஸ்ட் இயக்கங்கள், திராவிட இயக்கங்களைப் பற்றிய விமர்சனத்தையும் வைத்து வந்தார்.
கடந்த 2002-ம் ஆண்டில் கோவை காளீஸ்வரர் நகரில் ஒரு மாடி வீட்டில் ஞானியைச் சந்தித்தோம்.
நேர்காணலின் போது, பேச்சுக்கு இடையில், “சரிங்களா?”, “அப்படிங்களா?” என்று கோயம்புத்தூருக்கான வட்டார வழக்கு ஊடுருவ பேசிய ஞானிக்கு அப்போது வயது 68.
இனி நேர்காணலுக்கு நகரலாம்,
கேள்வி: ஞானி என்கிற பெயரே ஆன்மீக சாயல் படிந்ததாக இருக்கிறதே?
கோவை ஞானி: அந்த விதமான ஆன்மீகக் குணம் எனக்கு அப்போது இருந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நான் படித்தபோது அத்வைதம் எனக்குப் பிடித்திருந்தது.
விவேகானந்தர், அரவிந்தரின் நூல்களை எல்லாம் விரும்பிப் படிப்பேன், தாகூரை மிகவும் நேசத்துடன் படித்தேன். ஆன்மிக ஈடுபாடு சற்றே அதிகரித்து தியானத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன். மூன்று மாதங்களில் எனக்கு நிறைய அனுபவங்கள்.
கால் மணி நேரத்தில் இருந்து, அரை மணி நேரம் வரை கண்மூடி தியானத்தில் உட்கார்ந்து இருந்தால் ஒருவித ஒளி தெரியும். எனக்கு அப்படித்தான் தெரிந்தது.
அந்த ஒளியை மேகங்கள் மறைத்துக் கொண்டிருந்தன. விடாமல் அதையே கவனித்துக் கொண்டிருந்தால், மெதுவாக அந்த மேகம் விலகும். பின்னால் இருப்பது சூரியன் மாதிரியான பேரொளி.
இப்படி அனுபவமாய் உச்சந்தலையிலிருந்து ஏதோ குளிர்ச்சியான திரவம் உடம்புக்குள் இறங்குகிற மாதிரியான உணர்வு உண்டாகி, ஒரு பரவச நிலை உண்டானது.
‘நானே பிரும்மம்’ என்கிற ஆனந்தத்தில் திளைக்க முடிந்தது. யாரைப் பார்த்தாலும் கடவுளாகத் தோன்றி ‘நான்’ என்ற உணர்வற்று இருந்தேன்.
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சமயங்களில் போய் கடவுளை கும்பிட்டு இருக்கிறேன். ஒரு சமயம் நடராஜரைக் கும்பிடும்போது நானே சிவபெருமான் என்னை நானே எப்படி கும்பிடுவது? என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது.
உணவு உண்கிறபோதும் எனக்கு ஒருவித தவிப்பு. சமயத்தில் அதுவே உடம்புக்கு ஆபத்தாகிவிட்டது. எப்படியோ காசநோய் உடம்புக்குள் உற்பத்தியாகிவிட்டது. ஒரு நாள் மாலையில் இருமியபோது ரத்தம் கொட்டியது. மறுநாள் தியானத்தில் ஈடுபட்டால், ரத்தம் உள்ளே பொங்கியது.
பெருந்துறையில் 8 மாதங்கள் இருந்த பிறகு காசநோய் சரியானது. படுக்கையில் கிடந்தபோது, ஏன் எனக்கு இந்த அனுபவம் என்று யோசித்தேன்.
சின்ன வயதில் கடவுளைப் பற்றி எத்தனையோ விஷயங்கள் உள்ளே போய் அடிமனதில் தங்கியிருக்கின்றன. தியானத்தில் ஒருவன் ஈடுபடுகிறபோது அது மனதுக்கு வரும். இதைத்தான் நான் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்.
அதற்குப் பிறகு நம்மைச் சுற்றியிருக்கிற புற உலகம் தான் உண்மையான உலகம் என்கிற கருத்துக்கு வந்தேன். அதன்பிறகு பெரியார் எழுத்துக்களை, மார்க்சின் எழுத்துகளைப் படித்தேன்.
கடவுள் என்பது மாபெரும் கருத்தாக்கம். அது மனிதன் உருவாக்கிய கருத்தாக்கம். இயற்கை, பிரபஞ்சம், அதில் மனித வாழ்க்கை, பிறப்பு வளர்ப்பு, இறப்பு இதெல்லாம் அந்தக் கால மனிதர்களுக்குப் புரிந்து கொள்ள முடியாத விஷயங்கள்.
விஞ்ஞானத்திற்குள் போகப் போக நிறைய கேள்விகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பிரபஞ்சத்தைப் பற்றி ஆராய்ந்த ஐன்ஸ்டீன் கூட பிரபஞ்சத்தைத் தாண்டி ஏதோ ஒரு சக்தி இருந்தாக வேண்டும் என்கிறார்.
அறிவினால் புரிந்து கொள்ள முடியாத ஒருவிதப் பேருணர்வு என்று அதைச் சொல்லலாம். நாம் அதை ஒதுக்கி விட முடியாது. அந்த உணர்வைத்தான், ‘கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை’ என்கிற புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்.
‘நான் யார்?’ என்கிற கேள்விக்கு விடை சொல்லிக் கொண்டே போனால் பிரபஞ்சத்திற்குள் நாம் கரைந்து போக வேண்டும். இதையே ‘பிரும்மம்’ என்கிறார்கள் சிலர். ‘சூன்யம்’ என்கிறது புத்த மதம்.
கே: மாக்சியத்தைத் தமிழக மற்றும் தமிழ்ச் சூழலுக்கு ஏற்றபடி சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்கிற உணர்வு உங்களுக்கு இருந்ததா? துவக்கத்தில் ஜீவானந்தத்திற்குத் தமிழ்மொழி, இலக்கியம் மீது இருந்த ஈடுபாட்டிற்குப் பிறகு தொடர்ச்சி இல்லாதது மாதிரி உணர்கிறீர்களா?
ஞானி : மார்க்சியம் படிக்கிறபோது புராதனப் பொதுவுடமைச் சமுதாயம் என்ற ஒன்றைப் படிப்போம். அந்தக் காலத்தில் மனிதர்கள் இனக் குழுக்களாக வாழ்ந்தார்கள். அங்கே உடைமை இல்லை, ஏற்றத்தாழ்வு இல்லை, அதிகாரம் இல்லை, இதற்குப் பெயர் ஆதிப் பொதுமை.
பின்னாளில் தான் வர்க்க வேறுபாடுகள் எல்லாம் வருகின்றன. இருந்தும் இன்னும் நம்மிடையே ஆதிப் பொதுமை என்கிற மனநிலை முழுக்க இல்லாமல் போய்விடவில்லை.
“நாம் அனைவரும் ஒன்று, ஏன் ஒருவன் அதிகாரம் பண்ண வேண்டும்? மற்றவர்களை ஒடுக்க வேண்டும்? என்கிற சிந்தனை வரலாற்றுக் காலம் முழுக்க, எல்லோருக்குள்ளும் இருக்கிற சிந்தனை, இந்த ஆதிப் பொதுவுடைமைச் சிந்தனைக்குத்தான் சிலர் ‘கடவுள்’ என்று பெயர் சூட்டுகிறார்கள்.
சிலா் ‘அறம்’ என்கிறார்கள். இந்த அம்சம் இன்னொரு விதத்தில் மார்க்சியத்திற்குள் இருக்கிற அம்சம். மதங்களில் இதே கருத்து, கோவில், புரோகிதம் சார்ந்து வேறு வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. இந்தக் கருத்து வள்ளுவருக்குள்ளும் இருக்கிறது.
மழை பெய்தால் எல்லோருக்கும் சொந்தம் என்கிற மாதிரி, இந்த உலகம் நம் எல்லோருக்கும்தான் சொந்தம் என்கிற உணர்வுதான் மார்க்சியத்தின் கரு. இதைத்தான் சமதர்மம் என்று சொல்கிறோம்.
மதத்திலேயே தீர்க்கதரிசிகள் என்றும் சித்தர்கள், சூஃபிகள் என்றும் ஏதாவது ஒரு விதத்தில் இந்தக் குரல் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சாதாரண மனிதனுக்குள்ளும், தாய்க்குள்ளும் இப்படி ஒரு குரல் உண்டு.
மோசமான கொள்ளைக்காரனின் உள்ளத்தில் கூட எப்போதாவது இந்தக் குரல் கேட்கும். இது அறத்தின் குரல். மக்களின் சார்பான தீர்க்கதரிசியின் குரல்.
இங்கு ஜெயகாந்தன், லா.ச.ரா., க.நா.சு போன்றவர்களை நான் கொண்டாடக் காரணம் அவர்களிடம் இருந்து வெளிப்படும் இந்தக் குரல்தான்.
மனிதர்களுக்குள் ஆழமாகப் போனால் நிலத்தடி நீர் மாதிரி, இந்தக் குரல் எங்கோ கசிவதை உணரமுடியும்.
விவேகானந்தரிடம் இந்தச் சமரதர்மக் குரல் இருந்ததால்தான் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான குரல் அவரிடம் இருந்து எழுந்தது. பாரதியிடம் இருந்து வந்தது.
ஆனால் இங்குள்ள சங்கர மடத்திலிருந்து தான் இந்தக் குரல் வராமல் இருக்கிறது. புராதன சங்கரர் கூட இந்த இடத்திற்கு வந்திருப்பார்.
பெரியார் வந்த இடத்திற்கு இவர்களால் வர முடியவில்லை. ‘கடவுள்’ என்கிற கருத்தை உடைத்துப் பார்த்தால், உள்ளே பேரன்பு இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டுச் சாதிப் பாகுபாடு, ஆச்சாரங்கள், அதிகாரம், சொத்து என்றெல்லாம் இருக்கக்கூடாது.
கே: மார்க்சீயத்தைத் தமிழகத்தில் எப்படிக் கொண்டு வர வேண்டும் என்கிற கனவு உங்களுக்குள் இருந்தது?
ஞானி : நா.வானமாமலை, கைலாசபதி எல்லாம் சேர்ந்து சங்க இலக்கியத்தை முழுக்கப் புறம் ஒதுக்குகிற மாதிரி எழுதினார்களே அந்தப் பார்வை தவறு.
நான் தமிழ் இலக்கிய மாணவன். பாரியையும், இளங்கோவையும் எப்படி ஒதுக்க முடியும்? ஆதி மனிதனின் குரல் அவற்றில் வலுவாக இருக்கிறது.
‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்கிற குரல் சமத்துவக் குரல் இல்லையா? வள்ளுவரை ஏன் வணிகர்களின் சார்பாகப் பார்த்தார்கள்? இந்த அளவுக்கு மார்க்சிஸ்டுகள் ஒதுங்கியதற்குக் காரணம் திராவிட இயக்கத்தின் மீது இவர்களுக்கு இருந்த வெறுப்பு தான்.
கே: “மணல் மேட்டில் அழகிய வீடு” என்று ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி நீங்கள் எழுதியுள்ள நூலில், அவர் சொல்கிற விஷயங்கள் அழகானதாக இருந்தாலும் அடிப்படை இல்லாமல், ஒரு கனவு நிலையில் இருப்பதாக நீங்கள் சொல்லி இருந்தீர்களே?
ஞானி : ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவப்படி சிந்தனை என்பது இறந்த காலம். கடவுள் என்பது முன்னால் உருவாக்கப்பட்ட கோட்பாடு.
நிகழ்கால நிகழ்வில் எப்போதும் இருக்க வேண்டும். நிதர்சனத்தில் இருக்க வேண்டும். பழைய வாழ்க்கை அல்ல. கணம் தோறும் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது.
அதனால் முந்தைய உலகம், முந்தைய கோட்பாடு, முந்தைய சிந்தனை எல்லாவற்றையும் ஒதுக்கி விடு என்று அவர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
பழமையான தத்துவம் உங்களுக்குள் இறுக்கமான பிடிப்பை ஏற்படுத்தக் கூடாது. அது ஒரு நெகிழ்வை ஏற்படுத்த வேண்டும். அப்படி ஒரு நெகழ்வு இருந்தால், நீங்கள் உலகத்தைப் புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் புரிந்து கொள்வீர்கள்.
நேற்றிலிருந்து முழுக்க வெட்டுப்பட்ட நிலையில், இன்றைய வாழ்க்கை இல்லை. எல்லாம் நீரோட்டமாக இருக்கிறது. இந்த நீரோட்டத்தில் கையில் அள்ளிய நீரை மட்டுமே தண்ணீர் என்று சொல்ல முடியாது.
ஆரம்ப கால ஜே.கே.வுக்குள் நான் சொல்கிற விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. பிற்காலத்திய ஜே.கே.வுக்குள் இந்த அம்சங்கள் குறைந்திருக்கின்றன.
அதனால்தான் ‘மணல் மேட்டில் கட்டிய அழகான வீடு’ என்று எழுதியிருந்தேன். ஒரு போர்ச்சூழலில் ஜே.கே.வைக் கொண்டு போய் நிறுத்தினால் என்ன பண்ணுவார்?
முதலாளிகளுக்காக ஆலமரத்தடியில் அமர்ந்து அவர் பேசியிருக்கலாம். ஏழைகளுக்காக அவர் என்ன பேசுவார்? அவர்களுடைய பிரச்சினைகள் தீர்ந்தால்தானே இவருடைய சிந்தனையின் பக்கம் அவர்களால் வர முடியும்.
கே: மக்களில் ஒரு சாரார் வாக்களிக்க வருவது குறைந்து கொண்டிருப்பது அவர்களுக்கு இப்போது இருக்கிற அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்து வருவதைக் காட்டுகிறது. இந்த நிலையில் உரிய மாற்று அமைப்பும் உருவாகாத நிலைமையும் நீடிக்கிறதே?
ஞானி : இதற்கு முதலில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் அசலான கம்யூனிஸ்டுகளாக இருந்திருக்க வேண்டும்.
“அதிகாரங்கள் எங்களுக்கும் வேண்டும். பகிர்ந்து கொடு. நாங்களும் அதிகாரம் பண்ணிக் கொள்கிறோம். பாரளுமன்றத்திற்கு போக வேண்டும்” என்று மக்களை விட்டு விலகிப் போய் விட்டார்கள். எப்படியாவது கெஞ்சிக் கேட்டுப் பதவி பெறக்கூடிய அளவிற்கா இவர்கள் இறங்க வேண்டும்?
பந்த் நடத்துவதற்கு, ஊர்வலம் நடத்துவதற்குக் கூட உரிமை மறுக்கப்பட்டபோது இங்குள்ள கம்யூனிஸ்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களைத் தடுத்தது எது? அதிகார ஆசையா?
ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற கட்சி, அது எதுவாக இருந்தாலும் சரி, தங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பதைப் புரிந்து கொள்கிறபோதே, மற்ற எந்த இயக்கத்தின் மீதும் மக்களின் பார்வை திரும்பி விடக்கூடாது என்பதிலும் அதே கட்சி, மிகுந்த கவனத்துடன் இருக்கிறது.
எதிர்ப்பவர்களை வெவ்வேறு விதமான ஒடுக்குமுறைச் சட்டங்களின் மூலம் ஒடுக்குகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாகின்றன. வேலை இழப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
வேலைக்கான பாதுகாப்பு இல்லை. லஞ்சம் பெருகிக் கிடக்கிறது. மதுக்கடைகள் திறந்து கிடக்கின்றன. பொருளாதார நெருக்கடிகள் அதிகமாகின்றன. மனநோய் அதிகரிக்கிறது.
கிட்னியை விற்க கூடிய அளவிற்குப் போகிறார்கள் தமிழகத்து நெசவாளா்கள். நாட்டில் 70 சதவீதம் பேரிகளிடமிருந்து அவர்கள் வாழ்வதற்கான ஆதார வளம் பிடுங்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு ஏற்ற கல்வி இங்கு கொடுக்கப்படவில்லை.
கே : மதவாதம் ஒருபுறமும், ஜாதிய வாதம் ஒருபுறமும் ஆதிக்கம் செலுத்துகையில், ஏதாவது ஒன்றை தூக்கிப் பிடிக்கக் கூடிய வகையில்தானே தமிழகத்திலுள்ள பெரும்பாலான கட்சிகள் இயங்குகின்றன?
ஞானி : எப்படியாவது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முயல்கின்றன பல கட்சிகளும்.
தேர்தல் ஆணையத்தின் சில விதிமுறைகளுக்காக இதர கட்சிகளிடம் ஓட்டுக்காகக் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டிய தேவையும் இவற்றுக்கிருக்கிறது. கட்சித் தலைவர்கள் பெரிய முதலாளிகள் ஆகிவிட்டார்கள்.
தேர்தல் வேண்டாமென்று சொல்லக்கூடிய இயக்கங்களுக்கும் சுற்றுச் சூழலில் மக்களின் தீவிர பிரச்சினைகளிலோ அக்கறை இல்லை.
வெளிநாட்டுகாரனுக்காக இங்குள்ள வேளாண்மை அழிகிறது, என்பதில் இவர்களுக்காவது அக்கறை வேண்டாமா? அவர்களும் மேடை அரசியல் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கே: பெரியார் கொள்கைகளை இன்றைய தேவைகளுக்கு ஏற்றபடி பயன்படுத்துவது பற்றிச் சில இயக்கங்கள் பேசுகிறார்களே?
ஞானி : பெரியாரைப் புனிதப்படுத்தகிற சில காரியங்களைச் சிலர் நன்றாகச் செய்கிறார்கள். பெரியாரியம் என்பதைச் சமதர்மத்தில் மையப்படுத்த வேண்டும்.
வெறுமனே சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, பார்ப்பனிய ஒழிப்பு என்று சொன்னால் முதலாளிய எல்லையை விட்டு வெளியே போக முடியாது.
சமதர்மம் என்று ஆரம்பித்தால் அதற்குள் அனைத்தும் வந்துவிடும். அதுதான் அசலான பெரியாரியம்.
“திராவிட இயக்கம் என்பது வெறுமனே சீர்திருத்த இயக்கம் அல்ல எல்லாவற்றையும் புரட்டக்கூடிய புரட்சி இயக்கம்” என்று ஓரிடத்தில் சொல்கிறார் பெரியார்.
இப்போது சீர்திருத்த இயக்கமாக மட்டுமே வைத்து இருக்கிறார்கள். இந்தக் குரலோடு இந்துத்துவத்தை எதிர்கொள்ள முடியாது.
பெரியாரும், சிங்காரவேலரும் பேசிய ஈரோட்டுத் திட்டத்தைப் பற்றியெல்லாம் எந்த திராவிட இயக்கங்களும் பேசுவது கிடையாது. காரணம் – இதன் தலைவர்கள் பலரும் முதலாளிகள் ஆனது தான்.
திராவிட இயக்கத்தில் உள்ளவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொண்டாலும், இவர்களுக்குக் காசே கடவுள். அதிகாரம் கடவுளாகி விட்டது. இவர்கள் செய்வதெல்லாம் பெரியாரைக் குறுக்குவதைத்தான்.
கே : மாநில சுயாட்சி பேசப்பட்ட தமிழகத்தில் இப்போது தமிழ் தேசியக் குரல்கள் அங்கங்கே கேட்கின்றன. நீங்களும் அது குறித்து பேச ஆரம்பித்திருக்கிறீர்கள். மார்க்சியம் பேசிவந்த நீங்கள் இதை நோக்கி நகர்ந்து இருக்கிறீர்களே?
ஞானி : இந்திய அரசியல் சட்டத்தின்படி இங்கு இருப்பது ஒரே ஒரு ஆட்சிதான். இது மைய அரசு. இதில் மாநில அரசுகள் வெறும் உறுப்புகள் மட்டுமே. கூட்டாட்சிக் கூறுகள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும், அடிப்படையில் இது ஒன்றியம்தான்.
மாநில அரசுகளுக்கு அதிகாரம் குறைவு. மைய அரசுக்கு அதிகம். “நிதி கொடு, கொஞ்சம் அதிகாரம் கொடு” என்று கேட்பதைத் தவிர மாநில சுயாட்சிக் குரலுக்கு வேறு அர்த்தம் ஏதுமில்லை.
ஆனால் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள் பேசுகிற விஷயம் வேறு. இந்தியா ஒரு துணைக்கண்டம். வெவ்வேறு கலாச்சாரம், வரலாறு கொண்ட தேசிய இனங்கள் அதில் இருக்கின்றன.
ஒவ்வொரு தேசிய இனமும் இறையாண்மை உடையது. இந்த இறையாண்மையை முழு அளவில் ஒப்புக் கொள்ளக்கூடிய மைய அரசும், செயல்படக் கூடிய அளவில் மாநில அரசும் உருவானால் அதற்கு பெயர்தான் ‘கூட்டாட்சி’.
அப்படி இருந்தால்தான் இங்கு எதிலும் தமிழ் என்பதைச் செயல்படுத்த முடியும். அமெரிக்காவில் மைய அரசு, மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடவே முடியாது. அது மாதிரியான அதிகாரத்தைத்தான் தமிழ்தேசியக் குரலை எழுப்பக் கூடியவர்கள் கேட்கிறோம்.
கே: அந்நிய மண்ணில் உருவான இருத்தலியல் வாதம், பின்நவீனத்துவம் போன்றவற்றையெல்லாம் புரிந்து கொண்டு செயல்படுகிற இங்குள்ள தமிழ்க் கலாச்சாரவாதிகள், தமிழ் மண் சார்ந்த இந்தக் குரலை எவ்வளவு தூரம் உள்வாங்கி இருக்கிறார்கள்?
ஞானி : தமிழ் இலக்கியவாதிகளைப் பொறுத்தவரை ஆரம்பக் கட்டத்தில் இவர்கள் திராவிட இயக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனுடைய தொடர்ச்சியாக ‘அரசியல் எங்களுக்கு வேண்டாம். இலக்கியம் எங்களுக்குப் போதும்’ என்கிற பொதுக் குரல் கேட்கிறது.
‘அரசியல் வேண்டும்’ என்று சொல்கிற சிலரும் வெறும் பெரியாரியம் அல்லது தலித்தியம் அல்லது பெண்ணியம் – அதற்கு மேல் எங்களுக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்கிறார்கள். அந்நியர்களின் ஆதிக்கம் பற்றியோ, தமிழர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவது பற்றியோ இவர்களுக்கு அக்கறை இல்லை.
பின்நவீனத்துவவாதிகளிடம் இருக்கிற ‘எல்லாவற்றையும் கலைத்துப் போடு’ என்கிற குரல் உரத்து வெளிப்படுகிறது.
அதேசமயம் எதை ஒருங்கிணைப்பது, எதைக் காப்பாற்றுவது என்பதில் அவர்களுக்குப் பெரிய அளவில் அக்கறை இல்லை. தமிழைப் பாதுகாப்பது என்பதிலும் அக்கறை இல்லை.
தமிழ்ப் பண்பாடு என்று சொன்னாலே அதைச் சாதியப் பாகுபாடு என்று நினைக்கிறார்கள். தமிழ்ப் பண்பாட்டிற்குள் இருக்கும் நமக்கான சமத்துவக் குரலை, சித்தர்களின் குரலை மேம்படுத்த வேண்டும்.
தமிழிசை, தமிழர்களின் சிற்பக் கலை, விவசாயத் தொழில் நுட்பங்கள் வேண்டும்.
தமிழ் மரபு வழிவந்த அறிவு வேண்டும். நமக்கான பாரம்பரியச் சொத்து திரும்பவும் நம்மை வந்தடைந்தாக வேண்டும்.
இதற்கு முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள கலை இலக்கிய வாதிகள் தங்கள் பாகுபாடுகளை மறந்து கூடிப்பேசி, இது குறித்து விவாதிக்கட்டும். அப்புறமாவது இந்த மண்ணின் குரல் அவர்களுக்குப் போய்ச் சேருகிறதா பார்க்கலாம்.’’
– ‘மணா’வின் ஆளுமைகள், சந்திப்புகள், நேர்காணல்கள் நூலிலிருந்து ஒரு பகுதி.
Comments (0)
Add Comment