ரசிகர்களைக் கெடுக்கும் எண்ணம் எனக்கில்லை!

நடிகர் அரவிந்த் சாமி வெளிப்படைப் பேச்சு

நடிகர் அரவிந்த் சாமிக்கு அதிக அறிமுகம் தேவை இல்லை. 1990 காலகட்டங்களிலேயே பான் இண்டியா படங்களில் நடித்தவர். பணக்கார வீட்டுப் பையன் என்ற அடையாளம் அவர் முகத்திலேயே எழுதி ஒட்டி இருந்தது.

அவரைப் போல மாப்பிள்ளை வேண்டும் என அந்தக் காலகட்டத்திலிருந்த பெண்கள் உவமையாகச் சொல்வார்கள். அந்தளவுக்கு வசீகரமான முகம் கொண்டவர் அரவிந்த்சாமி.

மணிரத்னம் படங்களில் மூலம் பல லட்சம் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தவர்.

ஆனால், இவர் தனக்கு என்று ரசிகர் மன்றத்தையோ, அடுத்து அடுத்து படங்களில் நடித்து அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தவர் இல்லை.

தனக்கு எப்போது நடிக்க விருப்பமோ அப்போது நடிப்பார். மற்ற நேரங்களில் பிசினஸ் செய்யச் சென்றுவிடுவார். 

அரவிந்த் சாமி பலருக்கு மிகப்பெரிய நடிகராகவே தெரியும். ஆனால், அவர் ஒரு பெரிய தொழிலதிபர். பல நிறுவனங்களை நடத்துகிறவர்.

அதைப் பற்றிப் பேசும்போது, “நான் ஒரு புதியதாக புராஜெக்ட் ஆரம்பித்தால் அதற்காக வேலைக்கு சில ஆட்களை எடுக்க வேண்டி இருக்கும். அது தொடர்பாகத் திட்டங்கள் வகுக்க வேண்டி இருக்கும்.

குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் அந்த நிறுவனத்தை வளர்க்கக் கால அவகாசம் தேவைப்படும். எனவே அந்த மாதிரியான காலகட்டத்தில் படங்களில் நடிக்க மாட்டேன். முழுவதுமாக வேலையை மட்டுமே பார்ப்பேன்.

நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பிசினஸ் செய்யவில்லை. ஒரு பொருளைத் தயாரிக்கிறேன் என்றால், அதன் பயன்பாடு பற்றி மட்டுமே சிந்திப்பேன்.

நான் தயாரிக்கும் பொருள் முன்பே சந்தையில் இருக்கிறது என்றால் அதைவிடக் குறைந்த விலைக்கு நாம் தயாரிக்க முடியுமா என நினைப்பேன். அப்படித்தான் என் சிந்தனையே இருக்கும்.

ஒரு சில கோடிகளை முதலீடாகப் போடுகிறோம். அதை எப்படிப் பல கோடியாக மாற்றுவது என ஒருநாள் கூட யோசித்தது இல்லை. நமக்கு ஒரு ஐடியா இருந்தால் அதைச் செயல்படுத்தலாம் என நினைப்பேன். அது வெற்றி பெற்றால் பணம் தானாகக் கிடைக்கும்.

சமூக வலைத்தளங்களில் பலர் என்னை பல கோடிக்கு அதிபதி என்று போட்டுள்ளார்கள். அதில் உண்மை இல்லை. அந்தளவுக்குப் பணக்காரன் இல்லை. அதே சமயம் ஒரே வேலையை என்னால் தொடர்ந்து செய்ய முடியாது. அது கொஞ்சம் கஷ்டம். ஒரு இடைவேளை தேவை என நினைப்பேன்.

அப்போது சினிமாவில் நடிக்க வந்துவிடுவேன். எனக்கு நடிக்கப் பிடிக்கும். ஆனால், மிகப்பெரிய ஸ்டாராக ஆகவேண்டும் என்பதில் விருப்பம் இல்லை. கஷ்டப்பட்டு நான் நடிக்க வாய்ப்பு தேடி அலையவில்லை.

இளம் வயதில் எல்லா பசங்களைப் போலவே சில கெட்டப் பழக்கங்கள் எனக்கு இருந்தன. அதற்குக் காசு தேவைப்பட்டது. அதனால் மாடலிங் போனேன்.

விளம்பரங்களில் நடித்தால் 2 ஆயிரம், 5 ஆயிரம் எனக் கிடைக்கும். அதை வைத்து நண்பர்களுடன் ஜாலியாக இருப்பேன்.

நான் நடித்த ரோஜா, தளபதி, பாம்பாய், மின்சார கனவு, அலைபாயுதே எனப் பல படங்கள் பல மொழிகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

தமிழிலும் பல படங்கள் ஹிட் ஆனது. அப்படி இருந்தும் எனக்கு ரசிகர் மன்றங்களை வைக்க அப்போதே நான் அனுமதித்தது இல்லை.

ஏனென்றால் அதில் எனக்கு விருப்பம் இல்லை. நடிக்க மட்டுமே ஆசைப்பட்டேன். நான் ஒரு படம் நடிக்கிறேன். அது சிலருக்குப் பிடித்துள்ளது. நான் வேறு சில படங்கள் நடிக்கிறேன். அவை பிடிக்காமல் கூடப் போகலாம்.

என் ரசிகராக இருந்தால் நான் நடிக்கும் எல்லா படத்தை நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அப்படி ஏன் இருவரை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

என் படம் நல்லா இல்லை என்றால், அது சரி இல்லை எனச் சொல்ல உங்களுக்கு ஒரு உரிமை வேண்டும் இல்லையா? அது ரசிகராக இருந்தால் நடக்காது. அந்த சுதந்தரம் முக்கியம்.

என் மகன் ஒரு நடிகருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப் போகிறான் என்று வந்து கேட்டால், நான் என்ன சொல்வேன். ஒழுங்கா படிக்கின்ற வேலையைப் பார் என்று சொல்வேன்.

அதே வேறு ஒருவரின் மகன் எனக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறேன் என்று கேட்டு வந்தால் நான் அதை மறுப்பதுதானே சரி.

என் பிள்ளைக்கு ஒரு அறிவுரையும் ஊரான வீட்டுப் பிள்ளைக்கு ஒரு அறிவுரையும் எப்படிச் சொல்ல முடியும். எல்லோருக்கும் ஒரே அட்வைஸ்தானே சொல்ல வேண்டும். அதானே சரி?

நான் சிவாஜியின் ரசிகன். அவரை எனக்கு அதிகம் பிடிக்கும். இரண்டு மூன்று முறை அவரை சந்தித்து இருக்கிறேன். அவர் நடித்த முக்கால்வாசிப் படங்கள் எனக்குப் பிடிக்கும்.

ஆனால், சில படங்கள் எனக்குப் பிடிக்காது. அதைச் சொல்ல ஒரு சுதந்திரம் வேண்டும். அதையேதான் எனக்கு ரசிகர் மன்றம் தொடங்க உள்ளதாக வந்தவர்களிடம் சொல்லிப் புரியவைத்தேன்” என நச்சென்று பதிலளித்தார்.

  • நன்றி : ஒன் இந்தியா இதழ்
Comments (0)
Add Comment