காமத்துப் பாலில் ஒளிந்திருக்கும் காதல் ரகசியம்!

திருக்குறள் காமத்துப்பாலில் புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் வரும், ஒரு தலைவன் தன் தலைவியுடனான தாம்பத்தியத்திற்கு பிறகு வியந்து சொல்வதாக அமைந்துள்ளது.
 
விஜய் – சூர்யா இணைந்து நடித்த ‘நேருக்கு நேர்’ படத்தில், அவள் வருவாளா என்ற பாடல் அனைவருக்கும் நினைவில் இருக்கும்.
 
இந்தப் பாடலில் ஒரு குறிப்பிட்ட வரி திருக்குறள் காமத்துப்பால் என்ற அதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
 
இன்றைய காலக்கட்டங்களில் வெளியாகும் பல பாடல்கள், ஒரு சில மாதங்களுக்கு பிறகு நமக்கு நினைவில் இல்லாமல் போகும் வகையில் தான் இருக்கிறது.
 
ஆனால், 2000  ஆண்டுக்கு முன்பு வந்த பாடல்கள் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
 
பல நேரங்களில் நாம் ரசிக்கும் திரைப்பாடல்களின் ஆழமான வரிகள் எங்கிருந்து வந்தன என்று தேடிப் பார்த்தால், அதன் வேர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறளில் இருப்பதை உணர முடியும்.
 
அத்தகைய ஒரு ஆச்சரியமான அனுபவம் இந்த பாடல் கொடுக்கும். 1997-ம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் விஜய் – சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் படம், யாராலும் மறக்க முடியாது.
 
குறிப்பாக இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் இடம் பெற்ற அவள் வருவாளா என்ற பாடலில் இருக்கும் திருக்குறள் தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.
 
இந்தப் பாடலில், “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டோடி கண்ணே உல”  – என்ற இந்த திருக்குறள் இடம் பெற்றிருக்கும்.
 
வைரமுத்து எழுதிய இந்தப் பாடலில், “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு, அந்த பெண்ணில் இருக்கு” என்ற வரிகள் தான் இந்த திருக்குறள்.
 
இந்த திருக்குறள் காமத்துப்பாலில் புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் வரும்.
 
ஒரு தலைவன் தன் தலைவியுடனான தாம்பத்தியத்திற்கு பிறகு வியந்து சொல்வதாக அமைந்துள்ளது:
 
கண்டு: கண்களால் அவளின் அழகைக் காண்பது.
கேட்டு: செவிகளால் அவளது இன்சொற்களைக் கேட்பது.
உண்டு: வாயால் அவளது இதழ் சுவையை உணர்வது.
உயிர்த்து: மூக்கினால் அவளது மணம் நுகர்வது.
உற்றறியும்: உடலால் அவளது மென்மையைத் தீண்டுவது.
 
இந்த ஐம்புலன்களின் இன்பமும் ஒட்டுமொத்தமாக இந்த ஒரு பெண்ணிடமே (தலைவியிடம்) இருக்கிறது என்று தலைவன் சிலிர்ப்புடன் கூறுகிறான்.
 
தமிழில் இன்று நாம் கொண்டாடும் மிகச்சிறந்த திரைப்பாடல் வரிகள் பலவும் திருக்குறளின் தாக்கத்தில் உருவானவைதான்.
 
திருக்குறளை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக வாசிக்கத் தொடங்கினால், அதன் ஒவ்வொரு அடுக்குகளும் நமக்குள் புதுப்புது அர்த்தங்களை அவிழ்க்கும்.
 
வருங்காலத்தில் ஒரு சிறந்த பாடலாசிரியராக வரவேண்டும் என்ற கனவு இருப்பவர்கள், திருக்குறளின் காமத்துப்பாலை ஒருமுறை ஆழ்ந்து படித்தால், அது கற்பனைக்கும், மொழி ஆளுமைக்கும் ஒரு புதிய திறப்பைத் தரும்.
 
– நன்றி: சினி யுகம்
Comments (0)
Add Comment