விஜய் ஆண்டனியின் திரைப்படப் பெயர்கள் மிக வித்தியாசமானதாக இருக்கும். அதே அளவுக்கு உள்ளடக்கத்தையும் கொண்டிருந்த படங்கள் பெருவெற்றி பெற்றிருக்கின்றன.
அப்படியொரு வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ‘மார்கன்’ படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர்.
படத்தொகுப்பாளராகப் பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய லியோ ஜான்பால் இயக்குனராக அறிமுகமாகும் படமிது.
இதில் புதுமுகம் அஜய் தீஷன், பிரிகிடா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், வினோத் சாகர், தீப்ஷிகா, ப்ரீத்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
’மார்கன்’ தரும் திரையனுபவம் எத்தகையது?
‘மார்கன்’ கதை!
பின்னங்கழுத்தில் ஊசி குத்தப்பட்டு, நொடியில் உடல் முழுவதும் கருப்பு நிறமாகிப் போக, அவர் மரணிக்கிறார்.
அடுத்த நாள் காலையில் ஒரு குப்பைத் தொட்டியில் உடல், முகம் கருத்த நிலையில் அந்த பிணம் கிடைக்கிறது.
மும்பையில் இருக்கும் ஏடிஜிபி துருவ் (விஜய் ஆண்டனி) மொபைலுக்கு அந்த பிணத்தின் புகைப்படத்தை அனுப்புகிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு காவல் துறை அதிகாரி.
அதனைக் கண்டதும், உடனடியாகத் தான் அந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்று பரபரக்கிறார் துருவ்.
பிணம் கருத்த நிலையில் கிடைத்தது போலவே, துருவ்வின் இடது கை மற்றும் பக்கவாட்டு கழுத்துப் பகுதி வரை கருத்திருக்கிறது.
அது மட்டுமல்லாமல், மருத்துவம் படித்துக் கொண்டிருந்த அவரது மகளும் இதே மாதிரி கொலையாகியிருக்கிறார்.
அதனால், தனிப்பட்ட முறையில் சென்னை கொலை வழக்கை விசாரிக்க ஆர்வம் காட்டுகிறார் துருவ். சிசிடிவி புட்டேஜை ஆராய்கையில் ஒரு துப்பு கிடைக்கிறது.
இறந்து போவதற்கு முன் அந்த இளம்பெண் இருக்கிற புகைப்படத்தில், அவர் ஒரு செயின் அணிந்திருக்கிறார். அதிலிருக்கும் டாலர் போன்றே ஒரு பழைய காரின் பின்புறத்தில் யாரோ வரைந்து வைத்திருக்கின்றனர்.
அந்தக் காரின் கைரேகையை எடுத்து ஆராய்கையில், போதைப்பொருள் வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தமிழறிவின் (அஜய் தீஷன்) ரேகையுடன் ஒத்துப் போகிறது. அதையடுத்து, அவர் மீது துருவ் குழுவின் பார்வை படிகிறது.
அவரை அழைத்து விசாரிக்கையில், அவர் மிக வினோதமானவர் என்று தெரிய வருகிறது.
உண்மையில், அவர்தான் அந்த பெண்ணைக் கொன்றாரா? இந்த கேள்விக்குப் பதிலறியும் துருவ்வின் முயற்சி பல திருப்பங்களைக் காண்கிறது.
இறுதியில் கொலையாளி சிக்கினாரா, இல்லையா என்பதை ‘த்ரில்’ கூட்டிச் சொல்கிறது ‘மார்கன்’ படத்தின் மீதி.
இருக்கை நுனியில்..
‘மார்கன்’ படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், அது திரையில் ஓடும் நேரம். சுமார் 132 நிமிடங்களே ஓடுகிறது இப்படம். ஆனால், ஏகப்பட்ட காட்சிகள் இரண்டாம் பாதியில் வந்து போகின்றன.
ஒரு படத்தொகுப்பாளர் என்ற முறையில், திரையில் ஓடுகிற பிம்பங்களை மனதில் கொண்டு இதன் எழுத்தாக்கத்தை, இயக்கத்தை, படத்தொகுப்பைக் கையாண்டிருக்கிறார் லியோ ஜான்பால்.
ஆங்காங்கே சில துப்புகள் வழியே நமக்குக் கொலையாளி பற்றிய சில தகவல்கள் முன்கூட்டியே தெரிந்தாலும், ‘யார் அவர்’ என்று தெரிய வருகிறபோது ஆச்சர்யம் வரத்தான் செய்கிறது.
அதுவரை அந்த ‘சஸ்பென்ஸை’ நம் கண்ணில் படாமல் மறைத்து வைத்திருக்கிறார் லியோ. அதனால், இரண்டாம் பாதியில் ரசிகர்கள் இருக்கை நுனியில் அமர வேண்டியிருக்கிறது.
படத்தின் தொடக்கத்திலேயே ‘முடிவு இப்படித்தான்’ இருக்குமென்பதைத் தெளிவாக உணர்த்தி விடுகிறார் இயக்குனர். தியேட்டரை விட்டு வெளியே வந்தபிறகு யோசித்தால் மட்டுமே அது பிடிபடும்.
அவ்வளவு ஏன்? படத்தின் தொடக்கக் காட்சியே கூட, கிளைமேக்ஸ் காட்சியில் சொல்லப்படும் நீதியில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
அந்த வகையில் ‘தி பெர்பெக்ட்’ கமர்ஷியல் படமாக அமைந்திருக்கிறது ‘மார்கன்’.
இப்படத்தின் உள்ளடக்கத்தில் வருகிற சில விஷயங்கள் குறித்து லாஜிக் பூர்வமாக நிறையவே கேள்விகள் எழுப்பப்படும்.
தமிழறிவு பாத்திரம் தண்ணீருக்குள் வெகுநேரம் மூச்சடக்கி இருப்பது, சூட்சம உடல் பற்றிய நம்பிக்கைகள், சித்தர்கள் அற்புதம் என்று சில விஷயங்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை அந்த ரகம்.
மேற்சொன்ன விஷயங்களைச் சேர்த்த காரணத்தால், ‘மர்டர் மிஸ்டரி த்ரில்லர்’ வகைமையோடு ‘சூப்பர் நேச்சுரல் பேண்டஸி’யும் கதையின் தன்மையில் ஒட்டிக் கொள்கிறது.
இந்தப் படத்தின் எழுத்தாக்கத்தை லியோ ஜான்பால் உடன் இணைந்து விஷ்ணு என்பவரும் அமைத்திருக்கிறார்.
ட்ரெய்லர், டீசர் பார்த்துவிட்டு தியேட்டருக்கு ஒருவித எதிர்பார்ப்புடன் வருபவர்களை எதிர்த்திசையில் ‘பக்கா’வாக திசைதிருப்பி விடுகிறது இப்படம்.
அதற்கு யுவாவின் ஒளிப்பதிவு, ஏ.ராஜாவின் கலை வடிவமைப்பு ஆகியவற்றோடு விஜய் ஆண்டனியின் பின்னணி இசை உட்படப் பல தொழில்நுட்ப அம்சங்கள் ஒன்றிணைந்து துணை நிற்கின்றன.
நடிப்பைப் பொறுத்தவரை, ‘ஊமை விழிகள்’ படத்தில் வரும் விஜயகாந்த் பாத்திரத்தை முன்மாதிரியாகக் கொண்டு இதில் வந்து போயிருக்கிறார் விஜய் ஆண்டனி.
அவரது பாத்திரத்தை விட அஜய் தீஷன் பாத்திரத்திற்கு ‘ஸ்கோப்’ அதிகம். ஆனாலும், இளைய தலைமுறைக்கு வழிவிட்டு விஜய் ஆண்டனி ஒதுங்கி நின்றிருக்கிறார்.
ஒரு புதுமுகமாக ‘ஓகே’ என்கிற அளவுக்கு வந்து போயிருக்கிறார் அஜய். அவரது ஜோடியாக வருகிற தீப்ஷிகாவின் நடிப்பு ஈர்க்கிறது.
பிரிகிடா படம் முழுக்க வருகிறார். ஆனால், அவருக்குப் பெரிதாக வேலை இல்லை. இரண்டாம் பாதியில் ‘ஸ்வீட் சர்ப்ரைஸ்’ ஆக வந்து போயிருக்கிறார் ப்ரீத்திகா.
இது போக சமுத்திரக்கனி, வினோத் சாகர், ராமச்சந்திரன் துரைராஜ் உட்படச் சிலர் வந்து போயிருக்கின்றனர். அவர்களில் மகாநதி சங்கர் மிகச்சில இடங்களில் அடிக்கிற ‘நையாண்டி’ சிரிக்க வைக்கிறது.
’பிச்சைக்காரன் 2’ படம் முழுமையான கமர்ஷியல் அனுபவத்தைத் தரவில்லை. அந்த வகையில், விஜய் ஆண்டனியிடம் இருந்து ரசிகர்கள் பெற்றிருக்கும் ஒரு சிறப்பான ‘கமர்ஷியல்’ வெற்றிப் படமாக உள்ளது ‘மார்கன்’.
இந்த படத்தின் மீது எதிர்விமர்சனங்கள் ஏராளமாக வைக்கப்படலாம். அவற்றைத் தாண்டி இப்படத்தின் உள்ளடக்கம் ‘ப்ரெஷ்’ஷான திரையனுபவத்தைத் தருவதை எவராலும் புறந்தள்ள முடியாது.
இப்படியொரு கதையின் இறுதியில் நீதி சொல்வது மிகக்கடினம். அதையும் மிகப்பொருத்தமானதாக அமைத்திருக்கிறார் லியோ ஜான்பால்.
அந்த வகையில், நிறைய வித்தியாசமான கமர்ஷியல் படங்கள் தருவார் என்ற நம்பிக்கையை ‘மார்கன்’ வழியே ஏற்படுத்தியிருக்கிறார். அவருக்குப் பாராட்டுகள்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்