எழுத்துக்கு அஞ்சும் சமூகம்!

எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் எடுக்கப்பட்ட நேர்காணல்:

*******

1.பெருமாள் முருகன் என்பவர் யார்?

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கூட்டப்பள்ளிதான் நான் பிறந்து வளர்ந்த ஊர். அங்கிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஆனங்கூர் என்னும் கிராமமே என் முன்னோர் வாழ்ந்த ஊர் என்று சொல்வார்கள். இப்போதும் எங்கள் குலதெய்வமாகிய கரியகாளியம்மன் கோவில் ஆனங்கூரில் தான் இருக்கிறது.

என் பெற்றோர் வைத்த பெயர் முருகன். பழனி முருகனுக்கு வேண்டுதல் வைத்து நான் பிறந்த காரணத்தால் எனக்கு முருகன் எனப் பெயர் சூட்டினர்.

என் தந்தையின் பெயர் பெருமாள். நான் கல்வி கற்க வேண்டும் என்று பெரிதும் விரும்பிய தந்தையின் பெயரை இணைத்துப் ‘பெருமாள் முருகன்’ என்று வைத்துக்கொண்டேன்.

2. மாதொருபாகன் எழுதும்போது அல்லது எழுதி முடித்தபின் இப்படி பிரச்சினை வரும் என நினைத்ததுண்டா?

பிரச்சினை வரும் என்று நினைத்திருந்தால் நாவலை வேறு வடிவத்தில் எழுதியிருப்பேன். அல்லது ஊர்ப்பெயர்கள், பாத்திரப் பெயர்களை வேறு மாதிரி வைத்திருப்பேன். இந்தச் சமூகத்தை எடை போடத் தவறிவிட்டேன் என்பது என் வருத்தம்.

சமகால அரசியல் குறித்து என் கவனம் போதுமான அளவுக்கு இல்லாமல் போய்விட்டது என்றும் நினைத்திருக்கிறேன். வாய்மொழி மரபையே பெரிதும் உடைய நம் சமூகம் எழுத்துக்கு இவ்வளவு அஞ்சும் என்னும் அனுமானம் இல்லாமல் போனது என் குறைதான்.

தமிழ்த் துறையில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது? 

நான் எட்டாம் வகுப்பு மாணவனாக இருந்தபோதே கவிதைப் போட்டிகளில் பள்ளி சார்பாகப் பங்கேற்றிருக்கிறேன். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது பாரதியார் நூற்றாண்டு விழா வந்தது.

எங்கள் கல்வி மாவட்டத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன். அப்போது எனக்குக் ‘கவிஞன்’ என்னும் அடையாளம் கிடைத்திருந்தது. நண்பர்கள் அன்பாகப் ‘புலவா’ என்று அழைப்பார்கள்.

என் ஆர்வம் இலக்கியத்தில் என்று கண்டுகொண்ட காரணத்தால் தமிழ் இலக்கியம் பயின்றேன். பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், உயிரியல் பயின்று நல்ல மதிப்பெண் எடுத்த மாணவன் நான். வேறு பாடங்களுக்குப் போகாமல் தமிழ்தான் படிப்பேன் என்று பிடிவாதமாகச் சேர்ந்தேன்.

என் பெற்றோருக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அவர்கள் படிக்காதவர்கள். என் ஆசிரியர்களுக்குத்தான் பிரச்சினையாக இருந்தது.

என்னை மாற்ற அவர்கள் எடுத்த முயற்சிகளை முறியடித்து ஒரே மனதாகத் தமிழ் இலக்கியம் பயின்றேன். அத்தகைய முடிவெடுத்ததால் இன்றைக்கு வரைக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

4. மாதொருபாகன் பிரச்சினையில் உங்கள் உங்களுக்குத் துணையாக இருந்தவர்கள் பற்றி!

தனிமனிதர்கள், இலக்கிய அமைப்புகள், பதிப்பகங்கள் ஆகியவை பெரிதும் உறுதுணையாக நின்றார்கள். ஓரிரு எழுத்தாளர்களைத் தவிர அனைவரும் எனக்கு ஆதரவு தெரிவித்தார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இதில் முன்னின்றார்கள்.

காலச்சுவடு பதிப்பகம் பெரிய அளவில் எனக்கு உதவியது. நண்பர் ஆ.இரா.வேங்கடாசலபதி செய்த உதவி பெரிது. இந்தியா முழுக்கவும் பல அமைப்புகளும் எழுத்தாளர்களும் கருத்துரிமைக்கு ஆதரவாக எழுதினார்கள்; பேசினார்கள்.

உலக அளவிலும் பல இடங்களில் இருந்து ஆதரவு கிடைத்தது. எல்லோருக்கும் சொல்லாலும் செயலாலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நன்றி தெரிவித்து வருகிறேன்.

இன்றைக்கு அதை எனக்குக் கிடைத்த ஆதரவு என்று சுருக்கிப் பார்க்காமல் கருத்துரிமைக்குக் கிடைத்த ஆதரவு என விரிவான தளத்தில் வைத்துப் பார்க்க விரும்புகிறேன்.

– 2020இல் படைப்புக் குழுமம் சார்பில் எடுத்த நேர்காணலின் ஒருபகுதி.

நன்றி: பெருமாள் முருகன் 

Comments (0)
Add Comment