உலக மனிதநேய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. மனிதநேயத்திற்கும் மனிதநேய அமைப்புகளுக்கும் மனிதநேயத்தின் நேர்மறையான மதிப்புகளை விளம்பரப்படுத்தவும், மனிதநேய இயக்கத்தின் உலகளாவிய கவலைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இது ஒரு வாய்ப்பாகும், 1980 களில் இருந்து இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மனிதாபிமானம் கொண்டவர்களையும், மனிதாபிமானக் காரணங்களுக்காக தங்களது உயிர்களை இழந்தவர்களையும் நினைவு கூரும் ஒரு நாளாக இந்நாள் அமைந்திருக்கிறது.
மனித நேயம் என்பது சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதைக் குறிக்கிறது. குறிப்பாக, உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.
பிறருக்குத் துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்று கூறலாம்.
மனித நேயத்தின் பொதுவான குணங்களாக அன்பு, கருணை, சமூக நுண்ணறிவு ஆகியவை இருக்கின்றன.
1893 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர… சகோதரிகளே…’’ என்று குறிப்பிட்டு விவேகானந்தர் வழங்கிய உரை, உலக மக்களிடையே மனித நேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது எனலாம்.
“அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு” என்கிற திருவள்ளுவரரின் குறளும், கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பாடல் வரியும்,
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்கிற வள்ளலாரின் கூற்றும் மனித நேயத்தைத் தமிழில் எடுத்துரைக்கின்றன.
எல்லா மக்களும் இயல்பாகவே புத்தர்கள் என்று புத்த சமயம் போதிக்கிறது. மனித குலத்தின் இந்த புத்த சமயக் கண்ணோட்டம், மனித நேயத்திற்கும், உலக அமைதிக்குமான ஒரு முக்கிய மற்றும் அடிப்படைக் கோட்பாட்டை உள்ளடக்கியதாகும்.
கன்ஃபூசியஸ் மனித நேயத்தை “பிற அல்ல சக மனிதனிடத்தில் அன்பு செலுத்துவது” என்றார்.
மேலும் “நீ நிற்க வேண்டுமென்றால் பிறரை நிற்க வை” என்றார். மனித நேயம் என்பது, அன்பு மற்றும் தன்னலமற்று இருப்பதன் முக்கியத்துவத்தைக் கூறுகின்றது.
கிரேக்க அறிஞர்கள் பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் இருவரும் மனிதப் பண்புகள் குறித்து விரிவாக எழுதியுள்ளனர்.
ஆனாலும் மனித நேயத்தை பற்றி மனிதப் பண்பாக குறிப்பிடவில்லை. மாறாக அன்பும் கருணையும் முக்கியம் என குறிப்பிடுகிறார்கள்.
இதே போன்று, அல்பேனியாவில் பிறந்து, இந்தியாவிற்கு வந்து குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியான அன்னை தெரசா, மனித நேயத்தின் முக்கியக் கொள்கைகளாக இருக்கும் அன்பையும் கருணையும் அடிப்படையாகக் கொண்டு இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் பல்வேறு நற்பணிகளைச் செய்தவர்.
இவருடைய பணிகளும் மனித நேயப் பணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாக இன்றும் குறிப்பிடப்படுகின்றன.
– தான்யா