பெரியாரின் கொள்கைச் சுடரை அணையாமல் காத்த ஆனைமுத்து!

பெரியாரியல் அறிஞரான வே.ஆனைமுத்து நிறைவான சுயமரியாதை வாழ்வை வாழ்ந்து மறைந்தவர். 

பழைய திருச்சி மாவட்டம், பெரம்பலூர் வட்டத்தில் உள்ள முருக்கன்குடி என்ற கிராமத்தில் வேம்பாயி – பூவாயி அம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 21.06.1925 அன்று ஆனைமுத்து பிறந்தார்.

நாற்பதுகளில் ஆசிரியர் ந.கணபதி என்பவரின் வழிகாட்டுதலில் பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை ஏற்றார்.

1944-ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்ட பிறகு சுயமரியாதை கொள்கைகளை ஏற்றுக்கொண்டு தன் கடைசி மூச்சுவரை கடைப்பிடித்தார்.

சமூகநீதி வரலாற்றில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசிடம் போர்க்குரல் எழுப்பினார். அவரது கோரிக்கைக்குப் பிறகு சமூகநீதியில் பல மாற்றங்கள் தேசிய அளவில் ஏற்பட்டன.

வே.ஆனைமுத்துவை நினைவுகூரும் பத்திரிகையாளர் சுகுனா திவாகர், “பெரியார் குறித்த ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் யாரும் முதலில் எடுக்கும் புத்தகம் வே.ஆனைமுத்து தொகுத்த ‘பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்’ மூன்று தொகுதிகள். ஆனைமுத்து உழைப்புக்கான அடையாளம் அது.

பெரியார் சிந்தனைகளைத் தொகுக்கும் பணி பெரியார் உயிருடன் இருக்கும் காலத்திலேயே தொடங்கியது. ஆனால் பெரியார் இறந்த பிறகு 1974-ல் தான் அந்த நூல்கள் வெளியாகின.

அரை நூற்றாண்டுக் காலத்துக்கும் மேல் இயங்கிய பெரியாரின் எழுத்துகள், பேச்சுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவைதான் அந்நூல்களாக உருவாகின. ஆனால் 2000 வரையிலுமே அந்த நூற்களை மிஞ்சும் வகையில் பெரியார் தொகுப்பு நூல்கள் வரவில்லை” என்று சுட்டிக் காட்டுகிறார்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே ‘திராவிட நாடு’ போன்ற இதழ்களில் எழுதினார்.

கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு திருக்குறள் முனுசாமி ஆசிரியராக இருந்த ‘குறள் மலர்’ இதழில் இணை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

பெரியாரின் பகுத்தறிவுப் பாதைக்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த ஆனைமுத்து, அரசியல் சட்ட நகல்களை எரிக்கும் போராட்டத்தில் பங்கேற்று 18 மாதங்கள் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார்.

ஆனைமுத்துவின் சமூகப் பணி என்பது பெரியாரின் கொள்கைகளுடன் நின்றுவிடவில்லை. சமூக நீதியிலும் அவருடைய கவனம் சென்றது.

மத்திய அரசுப் பணிகளில், கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரி 1978-ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டியிடம் வலியுறுத்தினார்.

கன்ஷிராம், முலாயம் சிங் யாதவ், லாலுபிரசாத் யாதவ், மாயாவதி போன்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட தலைவர்களிடம் சமூகநீதி தொடர்பான உரையாடல்களை நடத்தினார்.

1979 ஆம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது இடஒதுக்கீடு பற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை இந்தியில் மொழிபெயர்த்து நூலாக வெளிவரக் காரணமாக இருந்தார்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர எம்.ஜி.ஆரைச் சந்தித்து வலியுறுத்தினார்.

மண்டல்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதற்கும் ஆனைமுத்து வட இந்தியத் தலைவர்களைச் சந்தித்துக் கொடுத்த அழுத்தம் மிக முக்கியமான காரணம்.

திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறிய பின் ஆனைமுத்து ‘பெரியார் சமவுரிமைக் கழகம்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார். பின்னர் அதை ‘மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி’ என்று மாற்றியமைத்தார்.

பெரியார் குறித்தும், பெரியாரிசம், சமூக நீதி, இட ஒதுக்கீடு குறித்தும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

இந்தியா முழுவதும் மாநாடுகள் நடத்தியும், வெளிநாடுகளிலும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் திருக்குறள் மாநாடுகள், இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான, பெரியாரிய சிந்தனை மாநாடுகள் எனப் பலவற்றை நடத்தியுள்ளார்.

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் 3 தொகுதிகள், சிந்தனையாளர்களுக்கு சீரிய விருந்து, தீண்டாமை நால்வருணம் ஒழிப்போம், பெரியார் கொள்கைகள் வெற்றிபெற பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டியது என்ன?, விகிதாசார இடஒதுக்கீடு செய்! (தமிழ் மற்றும் ஆங்கிலம்), பெரியாரியல் – இரண்டு தொகுதிகள், தத்துவ விவேசினி (தொகுப்பு) உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை வே.ஆனைமுத்து எழுதியுள்ளார்.

– சங்கத்தமிழ்

Comments (0)
Add Comment