முருக பக்தர்களின் தீவிர கவனத்திற்கு…! 

- பத்திரிகையாளர் மணா

“ஆலயம் செய்வோம்; அங்கே அனுமதியில்லை” – என்கின்ற வாசகம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘சவாலே சமாளி’ படத்தின் பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி. இந்தப் பாடலை எழுதியவர் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய அதே கவியரசர் கண்ணதாசன் தான்.

உலகம் முழுக்க இருக்கிற வெவ்வேறு இந்துக் கோவில்களுக்கு சுவாமி சிலைகளை வடிவமைக்கும் பொறுப்பில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டிருக்கும் சுவாமிமலை ஸ்பதிகளை ஒருமுறை சந்தித்தபோது,

“நாங்கள் தயாரித்த சிலையின் கண்ணை திறந்து வைத்து பூஜை செய்து அனுப்பி வைப்பதுடன் எங்களது கடமை முடிந்து விடுகிறது.

அதன்பிறகு நாங்கள் தயாரித்து அளித்து, கருவறையில் வைக்கப்பட்ட சிலையை, எக்காரணத்தைக் கொண்டும் எதன் பொருட்டும் உள்ளே சென்று பார்க்க முடியாது” என்பதை வேதனையோடு தெரிவித்தார்.

இதேநிலை தான், முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மை வீடாகச் சொல்லப்படும் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி என்று அழைக்கப்படும் முருகன் கோவிலுக்கும் பொருந்தும்.

மற்ற முருகன் கோவில்களைவிட பழனி முருகன் கோவிலுக்கு தனி சிறப்புண்டு. சங்கப் பாடல்களிலேயே வெவ்வேறு பாடல்களில் முருகனின் வெவ்வேறு பெயர்களைக் குறிப்பிட்ட சங்கப் பாடல்களும் இருக்கின்றன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சென்னை மாகாணம் ஒருங்கிணைந்திருந்தபோது கேரளாவில் இருந்து அதிகமான பக்தர்கள் (தற்போது சபரிமலைக்கு தமிழர்கள் போவது மாதிரி) பழனிக்கு வருவதை வாடிக்கையாகவே வைத்திருந்தார்கள்.

பழனி முருகனின் விழாவான தைப்பூசத்திற்கு அப்போதே லட்சக் கணக்கில் மக்கள் திரண்டு இருக்கிறார்கள். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத காலங்களில், பழனி முருகன் கோவிலுக்கு முன்னால் திரண்ட பக்தர்களின் எண்ணிக்கை பலருக்கு அப்போதே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிலருக்கு எரிச்சலையும் கூட.

இதேவிதமான உணர்வில் தான், அப்போது மதுரையை தலைமையமாகக் கொண்ட திருமலை நாயக்கர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

அதனுடைய தளவாய் பொறுப்பில் இருந்தவர் ராமப்பயர். அவர் பழனி கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்தபோது, அங்கு கருவறையில் பழனி முருகன் கோவிலை உருவாக்கிய ஸ்தபதியின் வழி வந்தவர்கள் அர்ச்சனையை, அதிலும் தமிழில் பண்ணிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறொரு சமூகத்தினரை அதே கோயில் கருவறையில் அர்ச்சனை பண்ணுவதற்கு நியமித்திருக்கிறார்.

இங்கு ஒரு சிறிய வரலாறையும் சொல்லியாக வேண்டும். தமிழகத்தில் உள்ள மற்றக் கோவில்களில் உள்ள முருகன் சிலைக்கும், பழனியில் உள்ள தண்டாயுதபாணி முருகன் சிலைக்கும் அடிப்படையான ஒரு வித்தியாசம் உண்டு.

பழனி கோவிலில் உள்ள முருகன் சிலை சீனா வரைக்கும் நன்கு அறிந்த போகர் என்கிற சித்தரின் வழிவந்த புலிப்பாணி சுவாமிகளால் உருவாக்கப்பட்டது.

அப்போதே அந்த சிலை நவபாசானத்தால் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நவபாஷாண கலவைக்கு கூடுதலான மருத்துவ குணம் உண்டு என்பதுதான் அதன் கூடுதல் சிறப்பு.

இப்படிப்பட்ட நவபாசான சிலையினுடைய மகிமையை அப்போதே தமிழக மக்களும், பல மொழி பேசும் மக்களும் உணர்ந்து இருந்ததானாலேயே பழனி கோவிலுக்கு கூடுதலான பக்தர்கள் வருகை தந்த காலமாக இருந்தது.

இந்தநிலையில்தான் அங்கு பழனி கோவிலுக்கு பார்வையாளராக வந்த ராமப்பய்யர் பழனி கோயிலின் கருவறையின் பூஜை செய்யும் உரிமையையே மாற்றி அமைக்கிறார்.

அப்படி மாற்றி அமைத்த ஆண்டு ராமப்பய்யரே எழுதிக் கொடுத்த செப்பு சாசனப்படி, (சாலியவாகன சகாப்தம் 1399 – கலியுக சகாப்தம் 4578 ஆம் ஆண்டில்) கோவில் கருவறையில் அதுவரை பூசித்து வந்த புலிப்பாணி சுவாமிகள் மடத்திற்கு இருந்து வந்த உரிமைகள் பறிக்கப்பட்டு இன்னொரு சமூகத்தினருக்குக் கொடுக்கப்பட்டதை அந்த செப்பு சாசனம் இன்றைக்கும் சாட்சியமாய் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

குறிப்பிட்ட அந்த சாசனம் தற்போதும் பழனி மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி சுவாமிகள் மடத்தில் தற்போதும் இருக்கிறது. அதற்கான அருகிலேயே புலிப்பாணி சுவாமிகளின் சமாதியும் இருக்கிறது.

இன்னொரு புறத்தில் போகருடைய சமாதியும் இருக்கிறது. இப்படி தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களின் மரபோடு ஒருங்கிணைந்து முயற்சியில் உருவாக்கப்பட்டதுதான் பழனி கோவிலின் கருவறையில் உள்ள நவபாஷாண சிலை.

அதனுடைய மருத்துவ குணத்திற்காகவே அதில் பூஜை செய்யப்பட்டு வரும் அந்த நீரையோ, அபிஷேகப் பொருளையோ அருந்தினால் பல நோய்கள் குணமாகும் என்கின்ற நம்பிக்கையும் பக்தர்களுக்கு இயல்பாகவே இருந்ததால், மற்ற கோயில்களை விட பழனி கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை நாளாக நாளாக அதிகபட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் அந்த உள்ளே கருவறையில் பூஜை மாற்றம் நடந்திருக்கிறது.

ஆக, தமிழர்களால், நீண்ட சித்த மரபினுடைய வாரிசுகளாக இருந்த போகர், புலிப்பாணி சுவாமிகள் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட பழனி முருகன் சிலைக்கே ஒரு அந்நிய தலையீட்டின் காரணமாக இப்படி ஒரு நிலை ஏற்பட்டது.

இந்த சாசன உருவாக்கத்திற்குப் பிறகு அந்த சிலையைத் தயாரித்த புலிப்பாணி சுவாமிகளுடைய மடத்தின் வாரிசுதாரர்கள் தற்போதும் பழனி மலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் இன்றும் இருக்கிறார்கள்.

அவர்களிடம் இன்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட உரிமைகள்கூட அவர்கள் இன்றும் பெற முடியாத நிலையில் நீதிமன்றத்தை நாடிய நிலையில் இருக்கிறார்கள் என்பதே இன்றைய நடைமுறை உண்மை.

இதில், முக்கியமான குறிப்பிட வேண்டிய விஷயம், மருத்துவக் குணம் வாய்ந்த முருகனின் சிலையை உருவாக்கியவர்கள் அதன் கருவறையிலிருந்தே தந்திரமாக வெளியிடப்பட்டிருக்கிறார்கள். அதற்கு, ஆகம விதிகளைக் காரணமாகவும் சொல்லி இருக்கிறார்கள். அதோடு இவர்கள் வெளியேற்றியது அதனுடைய அர்ச்சனை மொழியான தமிழையும் வெளியேற்றி இருக்கிறார்கள்.

இன்றுவரை பழனி கோவிலில் சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை நடக்கிறது. பக்தர்கள் நினைத்தால் தமிழிலும் அர்ச்சனை பண்ணலாம் என்பது தான் நடைமுறை விதியாக இருக்கிறது.

என்றைக்கோ ராமப்பய்யர் உருவாக்கிய அந்த செப்பு சாசன விதிமுறைகள் காலம் கடந்தும் வெவ்வேறு வடிவங்களில் நீடித்துக் கொண்டிருக்கின்றன.

ஆக, தமிழ்க் கடவுளாக அறியப்பட்ட அல்லது சொல்லப்படுகின்ற பழனி முருகனின் கோவிலில் கூட, தமிழில் மட்டுமே அர்ச்சனை என்பதை ஏன் சம்பந்தப்பட்டவர்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை?

இவ்வளவுக்கும் தமிழகத்திவேயே அதிகமான வருமானத்தை ஈட்டக்கூடிய கோவில்களில் பழனி கோவில் முதன்மையாக இருக்கிறது.

இவ்வளவு வருமானத்தை தரக்கூடிய முருகனுக்கு, ஆட்சியாளர்களோ அல்லது கோவிலில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறவர்களோ பிரதி உபகாரமாக என்ன செய்திருக்கிறார்கள்?

தமிழை மீண்டும் அதே கோவிலுக்கு அர்ச்சனை மொழியாக்கி ராமப்பய்யர் காலத்தில் வெளியேற்றப்பட்ட புலிப்பாணி சுவாமிகளின் வாரிசாக இன்னும் எஞ்சி இருக்கிற வாரிசுகளைக் கருவறையில் அர்ச்சனை செய்யும் உரிமையை மீண்டும் மீட்டுக் கொடுக்க, இன்றைக்கு முருகனைப் பற்றி தீவிரமாகப் பேசும் பக்தர்களும் தலைவர்களும் முன் வருவார்களா?

இப்படி ஒரு செப்புப் பட்டயம் திருமலை நாயக்கர் காலத்தில் எழுதப்பட்டதா? அந்தப் பட்டையம் எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை வாய்ந்தது என்ற சந்தேகங்கள் இயல்பாக சிலருக்கு வரலாம். அதற்காக அந்த செப்புப் பட்டயத்தின் நகலை, அன்றைய காலத் தமிழ் வாசகங்களோடு இதில் இணைத்திருக்கிறோம்.

அதில் இணைத்திருக்கிற அந்த செப்புப் பட்டயத்தின் கடைசி வரி தான் மிகவும் உறுத்தலானது.

அதில், இந்த குறிப்பிட்ட செப்புப் பட்டயத்தை அப்படியே ஏற்றுக் கொள்பவர்களுக்கு காசியில் உள்ள கங்கையில் கோடி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கு சமம் என்றும்,

அதில் உள்ள விதிமுறைகளுக்கு மாறாக இயங்குபவர்கள் சில கங்கையிலே காறாம் பசுக்களைக் கொன்று வீசிய பாவத்திற்கு ஆளாவார்கள் என்கின்ற எச்சரிக்கையும் அதேப் பட்டயத்தில் இருப்பதை இதே தீவிர பக்தர்கள் கொஞ்சம் அக்கறையோடும், தங்களுடைய நலம் சார்ந்தும் யோசிக்க வேண்டும்.

ஏற்கனவே ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் ஞானப்பழத்திற்காக விநாயகருடனும் தன்னுடைய தந்தையுடனும் சண்டையிட்டு, பழனி மலை உச்சிக்கு கோவண உடையுடன் வந்துவிடுவதாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

பிறகு, பார்வதியாக வரும் நடிகை சாவித்திரியும், கொடுமுடி கோகிலாம்பாள் என்று அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாளும் தமிழ் ததும்பின பாடல்களைப் பாடி முருகனை சமாதானப்படுத்துவார்கள்.

இப்படிப் புராணக் கதை வரலாறும் இதே பழனி முருகனுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆக, ஏற்கனவே ஒருமுறை கோபத்தில் உச்சிக்குப் போய் மலையேறி நின்று தன்னுடைய கோபத்தை முருகன் வெளிப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறது இந்த மரபு.

அப்படிப்பட்ட முருகனை, மேலும் கோபப்படுத்துகிற ஒரு சம்பவமும் இதே பழனி மலையில் நடந்திருக்கிறது.

1983-ம் ஆண்டுக்குப் பிறகு பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் முருகனைக் காப்போம் என்கின்ற வித்யாசமான முழக்கத்துடன் ஒரு போராட்டம் நடந்தது. அதைத் தலைமை தாங்கி நடத்தியவர் பழனி முருகனின் அதிதீவிர பக்தரான ‘வீரக்கனல்’ சுப்பிரமணியம்.

அப்போது, ஜூனியர் விகடனில் நிரூபராக பணியாற்றிய என்னை பழனிக்கு வரச் சொல்லி இருந்தார். நான் அங்கு போனபோது, பழனி முருகன் மலையின் அடிவாரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தது.

அப்போதுதான் பழனி முருகனின் நிலையைப் பற்றி கதறாத குறையாக நம்மிடம் சொன்னார், வீரகனல் சுப்பிரமணியம்.

சொன்னதோடு பக்கத்தில் இருந்த முருகன் சிலையை உருவாக்கிய புலிப்பாணி சுவாமிகள் மடத்திற்கும் அழைத்துச் சென்றார். அங்குள்ள சமாதிகளைக் காட்டிவிட்டு அந்த மடத்தினுடைய தற்போதைய புலிப்பாணி சுவாமிகளின் வாரிசுகளிடம் அழைத்துச் சென்றபோது தான் நம்மிடம் ராமப்பய்யர் எழுதிக் கொடுத்த செப்பு சாசனத்தை கையில் கொடுத்து வாசிக்கச் சொன்னார்.

அந்த செப்பு சாசனம், அந்தக் கால நேர்த்தியுடன் கனமாகவே இருந்தது. அதை நகலெடுத்த ஒரு பிரதியை அப்போதே கையில் கொடுத்தவர்கள், அதிர்ச்சியான ஒரு தகவலைச் சொன்னார்கள்.

நாங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி உருவாக்கிய முருகன் சிலை தற்போது சிதிலம் அடைந்திருக்கிறது. நாங்கள் உருவாக்கிய அந்த சிலை, முருகன் கையில் வைத்திருக்கிற தண்டத்தின் மூலமாகத்தான் இன்னும் கீழே விழாமல் நின்று கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு அது சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. அதனால் அதற்கான பூஜையும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதுபற்றிய உண்மை நிலை தெரிய வேண்டும் என்பதற்காகத்தான், நாங்கள் பழனி மலை அடிவாரத்தில், அரசு இதைக் கவனிக்க கோரி போராட்டத்தை நடத்தி  கொண்டிருக்கிறோம் என்று சொன்னார் வீரக்கனல் சுப்பிரமணியம்.

அவருக்கு ஆதரவாக பழனியில் உள்ள நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருந்தார்கள்.

இதையடுத்து பழனி மலை மேலே உள்ள முருகன் கோவிலுக்கு என்னை அழைத்துக் கொண்டு போனார்கள்.

கோவில் கருவறைக்கு முன்னால் நான் நிறுத்தப்பட்டபோது அருகில் இருந்தவர்கள் அந்த மூலவர் சிலை எப்படி பின்னப்பட்டிருக்கிறது (சேதப்பட்டிருக்கிறது) என்பதைப் பாருங்கள் என்று சொன்னபோது, கருவறையில் இருந்த அரை இருளில் அந்த சிலையின் முழுவடிவம் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த பழனி சிலையை உருவாக்கியவர்களில் வழிவந்த புலிப்பாணி சுவாமிகள் மடத்தைச் சேர்ந்தவர்கள், உள்ளேபோய் அதைக் காட்டட்டுமா என்று கேட்டபோது, அவர் கருவறைக்குள் உள்ளே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதேசமயம் பழனி முருகன் சிலைக்குத் தொடர்ந்து அர்ச்சனை செய்து வந்த அர்ச்சகர்களில் இருவர் கருவறையை விட்டு வெளியே வந்தபோது அவர்களை அணுகிக் கேட்டபோது முருகனின் சிலை சேதமடைந்திருக்கிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்கள்.

எப்படி எப்படி எல்லாம் சேதமடைந்து இருக்கிறது என்பதைச் சொல்லி, அதற்கான பின்னணி சில நிகழ்வுகளையும் குறிப்பிட்டார்கள்.

அதாவது தினசரி பூஜை செய்யும் பொருட்களின் கலப்படத் தன்மை காரணமாக முருகன் சிலை சேதமடைந்திருக்கலாம் என்று அந்த அர்ச்சகர்கள் சொன்னபோது, அதை என்னுடன் வந்திருந்த புலிப்பாணி சுவாமிகள் மடத்தைச் சேர்ந்தவர்கள் இரும்பைவிட கெட்டியானதான நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட சிலையை அவ்வளவு எளிதாக யாரும் சேதப்படுத்திவிட முடியாது. அப்படிப்பட்ட சிலை, இங்கு சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கான விசாரணை வேண்டும் என்றுதான், நாங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னார்.

அந்தக் கருவறைக்கு வெளியவே விளக்கம் சொன்ன கையோடு, “நாங்கள் மலைப்பகுதியிலிருந்து கீழே அனுப்பப்பட்டோம். அது குறித்து அப்போதைய நிர்வாக பொறுப்பிலிருந்த தக்கரிடம் விளக்கம் கேட்க முயற்சித்தபோது, அப்படி ஒரு பிரச்சனையே இல்லை. இதை எந்த விதத்திலும் வெளிப்படுத்த வேண்டாம்” என்று நசிக்கினார்கள் என்றார்.

அதை மீறித்தான் அப்போது ஜூனியர் விகடனில் பழனி முருகன் சிலை சேதப்படுத்தப்பட்டது சம்பந்தமான ஒரு விரிவான கட்டுரை வெளிவந்தது.

இதற்கு அடுத்து இதே பிரச்சனையைப் பற்றி அசைடு ஆங்கில இதழில், மிக விரிவான கட்டுரையை எழுதி இருக்கிறேன். அது தவிர இல்லஸ்ட்ரேட் வீக்லி, தி வீக், அவுட்லுக் போன்ற பல பத்திரிகைகளில் அடுத்தடுத்து இதே பழனி கோவில் பிரச்சனையைப் பற்றி வெளிவருவதற்கான முயற்சிகளையும் அப்போது நான் செய்திருந்தேன்.

ஆக, இது தொடர்பாக பலமுறை நான் முருகன் கோவிலுக்குப் போய் வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால், அதற்குப் பிறகு பழனி முருகன் சிலையின் அசலான தன்மைப் பற்றி விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டதாக சொல்லப்பட்டதே ஒழிய, அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கை என்ன?

அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருந்தது? பாரம்பரியமான நவபாஷாண சிலையால் செய்யப்பட்ட முருகன் சிலைக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை உருவானது? அதை சரிசெய்து மீட்டுருவாக்கம் செய்ய முடியுமா? என்பது பற்றி எல்லாம் இதுவரைக்கும் கேள்விகள் எழுப்பப்படவில்லை.

தற்போது முருகனைப் பற்றிய மாநாட்டை இதற்கு முன்பு அரசு நடத்தியது. தற்போது இந்துத்துவா அமைப்புகள் நடத்துகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில் தாங்கள் மிகவும் அக்கறைப்படும் முருகனின் சிலைக்கு என்ன நடந்திருக்கிறது? என்பது பற்றிய ஒரு தெளிவான அசலான அறிக்கையை வெளிக்கொண்டு வர, இதே ஆர்வமுள்ள பக்தர்கள் அக்கறை காட்டுவார்களா?

ஏற்கனவே புராண மரபுப்படி கோபத்தினால் மலையேறிய தண்டாயுதபாணி சுவாமி என்று அழைக்கப்பட்ட முருகனை, சேதப்படுத்தி அவரை மேலும் மேலும் கோபப்படுத்தலாமா? என்பது பற்றி முருக பக்தர்கள்தான் யோசிக்க வேண்டும்.

இது பற்றிய சிறு குழப்பம் ஏற்படக் கூடியவர்கள் மேலே ராமப்பய்யர் எழுதிக் கொடுத்த சாசனத்தின் இறுதி வரிகளில் மீண்டும் கவனத்துடன் படித்துப் பரிசீலித்துப் பார்க்கவும்.

எததெற்கோ ஸ்கேன் எடுக்கிறோம். மரபணு சோதனை மேற்கொள்கிறோம். பல கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான முருகனின் அசலான நிலையைப் பார்க்க ஒரு ஒரிஜினலான ஸ்கேன் ரிப்போர்ட்டை யார் தயாரிப்பார்கள்?

“காக்க காக்க… கனகவேல் காக்க…” என்று சொல்கிறவர்கள், அந்த ‘வேலை’ கையில் வைத்திருக்கும் முருகனை முதலில் காக்க வேண்டாமா?

Comments (0)
Add Comment