ஜுன் 19 – தேசிய வாசிப்பு தினம்
புத்தக வாசிப்பு என்பது ஒரு சுகமான அனுபவம். ரம்மியமான இயற்கைச் சூழலைக் கண்டு மெய் மறப்பது போல, காதல் கொள்கிற இணை உடன் சேர்ந்து பொழுதைக் கழிப்பது போல, நித்திய ஆனந்தத்தில் திளைத்திருப்பது போல, இந்த கணங்கள் இப்படியே நிலைத்திருக்கட்டுமே என்று நினைக்கத் தோன்றுகிற ஒரு கணம்.
அதனாலேயே, உங்களுக்குப் பிடித்த புத்தகம் அல்லது எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமே வாசியுங்கள் என்று புதிதாக வாசிக்க வருபவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.
வாசிக்க வாசிக்க மனம் இலகுவாகும். விதவிதமான மனிதர்களை, சூழல்களை, வாழ்வனுபவங்களைக் கண்டடையும். அது வாழ்வை எதிர்கொள்கிற மனப்பாங்கை மெதுவாக மாற்றும். மனதின் வேகம் அதிகமாகும். அதன் பரப்பு விசாலம் ஆகும்.
மொத்தத்தில், வாசிப்பு இல்லாமல் நாம் வாழ்வதில் இருந்து முற்றிலும் எதிர்திசையில் இருக்கிற அனுபவங்களை வாரி வழங்கும்.
அந்த அனுபவத்தைக் கண்டுணர்ந்தவர்கள், என்றும் எப்போதும் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்கின்றனர். புத்தக நெடி அறியாதவர்கள், விரும்பாதவர்களை நோக்கி ‘படி.. படி..’ என்று உரத்தக் குரலில் உத்தரவிடுகின்றனர்.
வாசிப்பு தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 19-ம் தேதியன்று நம் நாடு முழுவதும் ‘தேசிய வாசிப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த புதுவயில் நாராயண பணிக்கரின் நினைவாக இது அனுசரிக்கப்படுகிறது.
இவர் ‘நூலகம் மற்றும் எழுத்தறிவு இயக்கத் தந்தை’ என்று அம்மாநில மக்களால் போற்றப்படுகிறார்.
ஆசிரியராகப் பணி செய்த பி.என்.பணிக்கர், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கேரளாவின் சில பகுதிகளில் பொது நூலகங்களைத் தொடங்கத் துணை நின்றார்.
1926ஆம் ஆண்டு இவர் முதன்முறையாக நூலகம் ஒன்றை நிறுவினார். பிறகு திருவாங்கூர் நூலக அமைப்பின் மூலமாக 47 நூலகங்கள் அமையக் காரணமானார்.
மேற்சொன்ன அமைப்பு, பின்னர் ‘கேரள கிரந்தசாலா சங்கம்’ என்று பெயர் மாற்றம் கண்டது. சுமார் 6,000 நூலகங்களை உருவாக்கியது. 1977-ம் ஆண்டு கேரள அரசு அவற்றைக் கையகப்படுத்திக் கொண்டது.
1995-ம் ஆண்டு பி.என்.பணிக்கர் மறைய, அதற்கடுத்த ஆண்டு முதல் அவரது நினைவாக ‘வாசிப்பு தினம்’ கேரளாவில் பின்பற்றப்பட்டது. 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, அத்தினத்தை ‘தேசிய வாசிப்பு தினம்’ என்று அறிவித்தார்.
அனைத்தையும் எளிதாக்கும்!
பள்ளி, கல்லூரி செல்கிற எந்தவொரு மனிதரும் தமது வாழ்நாளில் சிறு பகுதியை வாசிப்புக்காகச் செலவிட்டிருப்பார். பாட நூல்கள் தவிர்த்து வேறு பலவற்றை வாசிக்க முயன்றிருப்பார். சிலருக்கு அதில் வெற்றி கிட்டும். அது தொடர் பழக்கமாக மாறியிருக்கும்.
சிலருக்கு அதில் ஈடுபாடு இல்லாமல் போகும். மீதமுள்ளவர்களில் பலர், ‘டெய்லி லைஃப் பிரச்சனைகள்ல வாசிக்கறதுக்கு எங்க நேரம்’ என்று தமது வாழ்க்கையில் மூழ்கிவிடுவார்கள்.
இப்படிப் பலதரப்பட்ட மனிதர்களை ஒன்றிணைத்து, அவர்கள் வழியாக அடுத்த தலைமுறையினரிடத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதே இத்தினத்தின் நோக்கம்.
குழந்தைகளைப் பாட நூல்கள் தவிர்த்து வேறு புத்தகங்களை வாசிக்க வைப்பது பலவிதங்களில் பயன் தரும். குறிப்பாக, அந்த வாசிப்பு பழக்கம் பாடங்கள் படிப்பதை எளிதாக்கும்.
புதிய தகவல்களை அறிவதன் வழியாகப் புதிய வாசல்கள் திறக்கும். எதிர்காலத்தில் கல்லூரி படிப்பு, பணி போன்றவற்றைத் தேர்ந்தெடுக்க அது ஏதோ ஒரு வகையில் உதவும்.
மிக முக்கியமாக, குழந்தைகளின் கோபம், ஆற்றாமை, பொறாமை, பயம் போன்றவற்றை மடைமாற்றி வேறு திசையில் அவர்களது திறன்களை அதிகப்படுத்த வாசிப்பு நிச்சயம் பயன்படும்.
இன்றைய சூழலில், ‘குழந்தைங்க படிக்க மாட்டேங்குறாங்க’ என்பதே பெற்றோர்களின் கவலையாக உள்ளது.
அப்படிப்பட்ட பெற்றோர்கள் முதலில் தாங்கள் வாசிப்பில் ஈடுபட வேண்டும். அதனைக் கவனிக்கிற சிறு குழந்தைகள் தாங்களாகவே அவ்வாறு வாசிக்கிற உத்வேகத்தைப் பெறுவார்கள்.
பிறகு, அவர்களுக்குப் பிடித்த வகையில் கேளிக்கை நிறைந்ததாக புத்தக வாசிப்பை மாற்ற வேண்டும். அதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.
இன்றைய மொபைல் யுகத்தில் குழந்தைகள் தாங்களாகவே பல்வேறு துறைச் சார்ந்த தகவல்களை ‘காட்சிரீதியாக’ப் பெற்று வருகின்றனர்.
ஆனால், வாசிப்பு என்பது அவர்களது மனதுக்குள் காட்சியாக்கத்தை வளர்க்கும் என்பதைப் புரிய வைத்துவிட்டால், அவர்கள் புத்தகங்கள் பக்கம் பார்வையைத் திருப்புவது நிகழும்.
நகரின் பெரிய நூலகத்திற்கு அழைத்துச் செல்வது, பார்வைக்கு வசீகரமான இதழ்கள் அல்லது புத்தகங்களை அவர்களிடத்தில் கொடுப்பதன் மூலமாக, வாசிப்பதற்கான தூண்டுதல்களை அவர்கள் பெறக்கூடும்.
கல்வி என்பது புத்தகங்களை வாசிப்பது அல்லது அதிலுள்ள தகவல்களை எழுதிப் பார்ப்பது, அத்தகவல்களைக் காதால் கேட்பது, காட்சிரீதியில் தகவல்களை அறிவது மற்றும் செய்முறை விளக்கங்கள் வழியாகக் கற்பது என நான்கு வகைப்படும். அதில் முதலாவதை நாம் தவிர்க்க முயல்வது பெருந்தவறாக மாறும்.
குறிப்பிட்ட வயதில் பலப்பல விஷயங்களை வாசிப்பின் வழியே அறிந்துகொள்கிறபோது, வாழ்வில் புதியனவற்றைக் கண்டு பயந்து ஒதுங்குவது நிகழாது.
குழந்தைகள் என்றில்லை, பெரியவர்களுக்கும் கூட இது பொருந்தும். வாசிப்பு பழக்கம் நமது வாழ்வில் புதிய மனிதர்களை, சூழலை, சிந்தனைகளை அறிமுகப்படுத்தும்.
அவற்றின் வழியே இன்றிருக்கிற நமது மனநிலையில் நல்லதொரு மாற்றங்கள் நிகழும் என்றால், அவற்றை கைக்கொள்வதில் என்ன அச்சம் வேண்டியிருக்கிறது?!
வாருங்கள், வாசிப்பு பழக்கத்தை வளர்த்தெடுப்போம். நமது முன்னோர்கள் காட்டிய வழியில் அதனை ஒரு இயக்கமாக முன்னெடுப்போம்..!!
- மாபா