இசையில் நனைந்த தமிழ்ப் பாடல் வரிகள்!

‘தாய்’ இணைய இதழ் வாசகர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்குமேல் இணையத்தில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த திரைத் தெறிப்புகள் தொடர், நன்கு அறிமுகம் அறிமுகமாகி இருக்கும்.

‘ஹரிதாஸ்’ படத்தில் தியாகராஜ பாகவதர் தொடங்கி, கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ்.சுப்புலெட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.எஸ் என்று பல்வேறு தரப்பட்ட இசைக்கலைஞர்கள் இசைத்த பாடல்களின் தொகுப்புதான் இந்தத் திரைத் தெறிப்புகள்.

வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் முதல் பாகம், விரைவில் அந்திமழை பதிப்பக வெளியீடாக வெளிவர இருக்கிறது.

அந்த நூலுக்கு நூலாசிரியர் மணா எழுதிய முன்னுரை கீழே.

****

சினிமாப் பாடல்களுக்கும் நமக்கும் சிறுவயது முதலே ஒருவித நெருக்கமான பந்தம் இருந்து கொண்டே இருக்கிறது.

என்னுடைய இளம்வயதில் கேட்ட திரையிசைப் பாடல்கள் இன்னும் நினைவின் ஒரு பகுதியாகப் பதிந்திருக்கின்றன. டி.எம். சௌந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, எஸ்.ஜானகி, பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எம்.ராஜா என்று பலர் திரை இசையை ஆக்கிரமித்திருந்த காலம் அது.

அந்த இளம்வயதில், தியாகராஜ பாகவதரின் பாடல்களை எப்போதாவது அபூர்வமாகத் தான் கேட்க நேர்ந்தது.

இலங்கை வானொலி மூலமாக திரை இசைப்பாடல்கள் நமது செவிப்புலனுக்குத் தீனியாக எத்தனையோ திரை இசைப்பாடல்களை நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தன.

அந்த வயதில், மதுரையில் டி.எம்.சௌந்திராஜனின் பல கச்சேரிகளை நேரடியாகக் கேட்டிருக்கிறேன்.

ஏ.எம்.ராஜா, ஜிக்கி, ஏ.எல்.ராகவன், சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்களின் கச்சேரிகளுக்கும் பார்வையாளனாகச் செல்ல முடிந்ததெல்லாம், இப்போதும் இனிய ஞாபகங்கள்.

இதையடுத்து, கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்று பலருடைய கச்சேரிகளுக்குச் செல்ல முடிந்திருக்கிறது.

இதெல்லாம், ஒரு பார்வையாளனாக திரையிசையுடன் நம்மை நெருக்கமாக்கிய சில அனுபவங்கள்.

அதேசமயம், பத்திரிகைத் துறையில் இருந்ததனால், இசைத்துறையில் பிரபலமான பாடகர்கள், பாடகிகளை நேரடியாகச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்புகள் எல்லாம், ஒருவிதத்தில் மறக்க முடியாத அனுபவங்கள் தான்.

மதுரையில் உள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சொந்த வீட்டிற்குப் போய்த் திரும்பிய கையோடு, சென்னையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களைச் சந்தித்தபோது, குழந்தைத்தனமான பரவசத்துடன் முகம் நிறைந்த சிரிப்புடன் அவர் முதன்முதலில் பத்து வயதில் பொது மேடையில் பாடிய பாடலின் முதல் இருவரிகளையும் ‘மீரா’ படத்தில் இடம்பெற்ற “காற்றினிலே வரும் கீதம்…” பாடலின் முதல் இரு வரிகளையும் சட்டென்று மென்மையாக பாடிக் காட்டியபோது, அவர் முகத்தில் வெளிப்பட்ட பாவனைகளை அருகிலிருந்து பார்க்கக் கிடைத்தது ரசமானதொரு அனுபவம்.

அதைப்போலவே ‘இசைச் சித்தர்’ என்று புகழப்பட்ட சிதம்பரம் ஜெயராமன் அவர்களை அவர் படுக்கையில் படுத்த நிலையில் சந்தித்தபோது, அந்த நிலையிலும் சம்பூர்ண ராமாயணம் படத்தில் இடம்பெற்ற “சங்கீத சௌபாக்கியமே“ என்ற பாடலின் வரிகளைப் பாடக் கேட்டதெல்லாம், ஊடக உலகம் கொடுத்த நல்லதொரு அனுபவம்.

அதைப்போலவே மதுரையில் டி.எம்.சௌந்தரராஜன் பிறந்து வளர்ந்த வீட்டுக்குப் போய்விட்டு திரும்பி சென்னையில் அவரைச் சந்தித்தபோது, எம்.ஜி.ஆருக்காகவும், சிவாஜிக்காகவும் எப்படிக் குரலை மாற்றிப் பாடுகிறேன் என்று சொன்னதோடு, சில பாடலின் முதல் இருவரிகளைப் பாடிக் காட்டவும் செய்தார்.

அப்படி அவர் தனது குரலை மென்மைப்படுத்திக் கொண்டு பாடிக் காட்டிய பாடல், ’சாந்தி’ படத்தில் இடம்பெற்ற, “யார் அந்த நிலவு” பாடல். எம்.ஜி.ஆருக்காக அதேமாதிரி குரலை, சற்று மாற்றிப் பாடிக் காண்பித்த பாடல் அன்பே வா.

ஒருவிதத்தில், மறக்கவே முடியாத அனுபவத்தைத் தந்தவர் இதமான பாடகரான பி.பி.ஸ்ரீநிவாஸ்.

அப்போதைய சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஓரத்து சீட்டில் அமர்ந்தபடி தன்னுடைய வாழ்வின் விசித்திரங்களை விவரித்துவிட்டு தனது மிக மென்மையான குரலில், அவர் பாடிக்காட்டிய பாடல், “மயக்கமா, கலக்கமா…”.

‘பராசக்தி’ படத்தில் பண்டரிபாய் கதாநாயகியாக சிவாஜியுடன் ஜோடி சேர்ந்து பாடும், “புதுப் பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே…” என்று துவங்கும் பாடல் உட்பட கவனத்தில் நிற்கும் பல பாடல்களைப் பாடியவரான மூத்த பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரியை அவரது வீட்டில் சந்தித்தபோது, குதூகலமான குழந்தைக் குரலில் அவர் பாடிக்காட்டிய பாடல், “சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா..?”.

திரை இசைப்பாடல்களில் பல உச்சங்களைத் தொட்டிருக்கிற எஸ்.ஜானகியை அவரது வீட்டில் பார்த்தபோது, நமக்குச் சொந்தமான பெரியம்மாவைப் பார்த்த உணர்வு.

மலர்ந்த முகத்துடன் அவருடைய வாழ்க்கையை விவரித்துக் கொண்டிருந்த அவர், பாடிக்காட்டிய ஒரு பாடல், “சிங்கார வேலனே.. தேவா…”.

அந்தப் பாடலின் நான்கு வரிகளை மிருதுவானக் குரலில் அவர் பாடி முடிக்கும்முன்பு அவரது முகத்தில் தான் எத்தனை பாவங்கள்!

இப்படி ஊடக அனுபவத்தில், எனக்குக் கிடைத்த திரை இசைச் சார்ந்த பேரனுபவங்கள்தான் இந்தத் தொடரை நான் எழுதுவதற்கான மூலக்காரணம்.

இந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிற பாடல்கள் என்னளவில், என் நினைவில் பதிந்திருக்கும் பாடல்கள் என்றே சொல்ல வேண்டும்.

இதேமாதிரி இதைப்படிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரது விருப்பம் சார்ந்த எத்தனையோ பாடல்கள் அவர்களது நினைவில் முதன்மைப்பட்டிருக்கலாம், முக்கியமாகவும் பட்டிருக்கலாம். இது அவரவர் சொந்த ரசனை சார்ந்த விஷயம்.

‘தாய்’ இணைய இதழில் இத்தொடரை மிகவும் கேசுவலாக ஆரம்பித்தபோது, அதற்கு வாசகர்களிடம் கிடைத்த வரவேற்பு அபரிதமானது. அந்த வரவேற்பே இந்தத் தொடரை தொடர்ந்து எழுத வைத்திருக்கிறது.

80-கள் வரை வெளியான திரைப்பட பாடல்கள் மட்டுமே இந்த முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. மற்றவை அடுத்தப் பாகத்தில் வெளிவரும்.

தமிழ்த் திரை இசையை வளமானதாக மாற்றிய எத்தனையோ இசை அமைப்பாளர்கள், பாடக பாடகிகள், பாடலாசிரியர்கள், பாடல் உருவாவதற்கு பின்னணியில் உழைத்த ஏராளமான இசைக் கலைஞர்கள், அவற்றை நினைவில் வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள் என்று அனைவருக்கும் இதமான நன்றி.

– மணா

Comments (0)
Add Comment