எங்கிருக்கிறது உன் அழகு?

*
அழகிப் போட்டி
எதிலும் கலந்துகொண்டு
எந்தப் பட்டமும் பெறாதவள் நீ.

ஆனாலும்
உலக அழகிகளை விட
உன்னத அழகியென்று
உன்னைத்தான் கூறுவேன்.

சாயம் பூசிக் கண்ணைக் கவரும்
கவர்ச்சியிலா இருக்கிறது உன் உதட்டழகு?

கைவிடப்பட்டக் குழந்தையொன்றைக்
கையில் அள்ளி முத்தமிட்டாயே…
அந்த அன்பில் இருக்கிறது
உன் அதரங்களின் அழகு.

அழகு நிலையங்களில் திருத்தம் செய்யப்பட்ட
புருவ ஒழுங்கிலோ
கருமை தீட்டப்பட்ட
இமை முடிகளிலோவா இருக்கிறது
உன் கண்களின் அழகு?

விபத்தொன்றில் கொத்துக்கொத்தாய்
மனித உடல்கள் சிதறிக்கிடந்த
தொலைக்காட்சிச் செய்தியைப்
பார்த்துக்கொண்டிருக்கும் போதே
கண்ணீர் கசிந்ததே…

அந்த மனித நேசத்தில் இருக்கிறது
உன் மணிவிழி அழகு.

கச்சிதமாய் நகம் வெட்டி
வண்ணம் தீட்டி
சுத்தமாய் மிளிர வைப்பதிருப்பதிலா இருக்கிறது
உன் கைளின் அழகு?

அடை மழை நாளொன்றில்
சேற்றில் சரிந்து கிடந்த செடியொன்றை எடுத்து
மீண்டும் நட்டு வைத்தாயே
அந்தக் கருணையில் இருக்கிறது
உன் கரங்களின் அழகு.

நூற்றுக்கணக்கான
வெறித்த கண்களுக்கு நடுவே
நீச்சல் உடை அணிந்து
ஒயிலாகப் பூனை நடை நடப்பதிலா இருக்கிறது
உன் கால்களின் அழகு?

போக்குவரத்து நிறைந்த சாலை ஒன்றின்
குறுக்கே ஓடிய
குட்டி நாயொன்றை
அவரசரமாக ஓடிப் போய்
அடிபடாமல் காத்தாயே…

அந்தப் பதற்றமும் பரபரப்புமான
பாதங்களில் இருக்கிறது
உன் கால்களின் அழகு.

வழவழப்பிலும்
பளபளப்பிலுமா இருக்கிறது
உன் வயிறழகு?

இல்லை…
அடுத்தவர் பசியையும்
உன் வயிற்றால் அறிவாயே
அந்தத் தாய்மையில் அல்லவா இருக்கிறது அது?

மார்பளவு இடையளவு தொடையளவு
கச்சிதமாக
அமைந்திருக்கும்
கவர்ச்சி மிகுந்த உடலில் அல்ல…

அதற்குள்
துடித்துக்கொண்டிருக்கிறதே
குழந்தைத்தனம் மாறாமல் ஒரு இதயம் …

அதன் தெய்வீகத்தில் இருக்கிறது
அப்பழுக்கற்ற உன்
அழகு.
*
காதலர் தின வாழ்த்துக்கள் 💐
*
– பிருந்தா சாரதி
*

Comments (0)
Add Comment