திரைப்படங்களில் நேதாஜி!

நேதாஜி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிற சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. ‘பராக்கிராம தினம்’ ஆக இதனைக் கொண்டாட வேண்டும் என்ற அரசின் முடிவுக்கேற்ப, நாடு முழுவதும் நேதாஜியின் புகழ் பாடப்படுகிறது.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல தலைவர்களின் பெயர்கள் மறக்க முடியாதவை, மறக்கக் கூடாதவை. அவற்றில் நேதாஜியின் பெயர் தலையாயது.

அப்படிப்பட்ட ஒரு தலைவரின் பெயரைத் திரைப்படங்களில் நாம் எப்படி எதிர்கொள்ளாமல் இருக்க முடியும். சுதந்திரப் போராட்டம் குறித்த திரைப்படங்கள் மட்டுமல்லாமல் நாயக சாகசங்களை முன்னிறுத்துகிற படங்களிலும் கூட அதனைக் கண்டுணர்ந்து வந்திருக்கிறோம். அதற்கு, ஒரு தலைவராக அவர் மீது நாம் கொண்டுள்ள அபிமானமே காரணம்.

சரி, அப்படிப்பட்ட நேதாஜி குறித்து முழுநீளத் திரைப்படங்கள் வந்திருக்கின்றனவா?

சில முயற்சிகள்!

நாம் இலக்கியமாகப் போற்றுகிற பல புனைவுகள், உண்மைகளின் நிழலையும் சாயலையும் கொண்டிருப்பவைதான். அவற்றில் யதார்த்தத்திற்கும் கற்பனைக்குமான தொலைவு குறிப்பிட்ட விகிதத்தில் இருக்கும்.

1950-க்கு பிறகு வெளியான தமிழ் நாவல்களில் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் எனும் இரு நாவல்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப் படையைப் பின்னணியாகக் கொண்டவை.

கிட்டத்தட்ட அக்காலகட்டத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்டவை. அவற்றை எழுதியவர் ப.சிங்காரம். தொண்ணூறுகளில் அவர் மறைந்தாலும், இப்போது அப்படைப்புகள் பெரிதும் சிலாகிக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ஒரு பிரமாண்டமான திரைப்படம் அல்லது வெப்சீரிஸ் ஆக்குவதற்கான உள்ளடக்கத்தைக் கொண்டவை அப் புதினங்கள்.

அது போன்ற அனுபவத்தைத் தருகிற அல்லது நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிற திரைப்படங்களைத் தேடும் பயணம் கொஞ்சம் கடினமானது. ஏனென்றால், அவர் குறித்த தகவல்கள் சொற்பம் என்பதாலும், சமகால அரசியல் சூழலில் சில நிகழ்வுகளை விவரிப்பது சிரமம் என்பதாலும், பல ஜாம்பவான்கள் திரையில் அவற்றைச் சொல்லத் தயங்கியிருக்கின்றனர்.

அவற்றை மீறி மேலோங்கி நிற்கிறது, 2004-ல் வெளியான ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: தி ஃபார்காட்டன் ஹீரோ’. அதுல் திவாரி, ஷாமா ஜைதியின் எழுத்தாக்கத்தில் அமைந்த இப்படத்தை இயக்கியவர் மறைந்த இயக்குனர் ஷ்யாம் பெனகல். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

’தெய்வத்திருமகள்’, ‘மாற்றான்’ படங்களில் வில்லனாகத் தோன்றிய மராத்திய நடிகர் சச்சின் கடேகர் இதில் சுபாஷ் சந்திரபோஸ் ஆக நடித்துள்ளார்.

2019-ம் ஆண்டு வெளியான ‘கும்னாமி’ திரைப்படம், நேதாஜியின் வாழ்வு மற்றும் மறைவு குறித்த ஒன்றுக்கொன்று முரணான பல தகவல்களைத் திரைக்கதையில் கொண்டிருக்கிறது. இது பெங்காலி மொழியில் அமைந்துள்ளது.

ஸ்ரீஜித் முகர்ஜி இதனை இயக்கியிருக்கிறார். அவருடன் இணைந்து மனீஷ் பத்ரா இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார்.

திமான்ஷு தூலியா இயக்கத்தில் குணால் கபூர், அமித் சாத் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘ராஹ் தேஷ்’. இதில் கென்னி பசுமதாரி நேதாஜியாக நடித்துள்ளார். இப்படம் 2017-ம் ஆண்டு வெளியானது.

இதே ஆண்டில் ஆல்ட்பாலாஜி ஓடிடி தளத்தில் ‘போஸ்: டெட்/அலைவ்’ எனும் பெயரில் 9 அத்தியாயங்கள் கொண்ட ஒரு ‘மினிசீரிஸ்’ வெளியானது.

அனுஜ் தார் எழுதிய ‘இந்தியாஸ் பிக்கஸ்ட் கவர் அப்’ நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்தொடரைத் தயாரித்தவர் ஏக்தா கபூர். நடிகர் ராஜ்குமார் ராவ் இதில் நேதாஜி ஆக நடித்திருந்தார்.

இன்னும் சில திரைப்படங்களில் நேதாஜியின் இருப்பும், அவரது இந்திய தேசியப் படை குறித்த தகவல்களும் சில கதாபாத்திரங்களின் பின்னணியைச் சொல்லப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 1950-ல் வெளியான இந்திப்படமான ‘சமாதி’, 2005-ல் வெளியான தெலுங்கு படமான ‘சுபாஷ் சந்திரபோஸ்’, 2022-ல் வெளியான ‘1945’ ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

தமிழில் ஷங்கரின் ‘இந்தியன்’னில் இப்பின்னணி காட்டப்பட்டதை நாம் அறிவோம்.

நேதாஜியின் வாழ்க்கையைச் சொல்கிற முயற்சிகள் திரையில் வெகு அரிதாகவே வெளிப்பட்டிருக்கின்றன. அவரது பெயரைக் குறிப்பிடுகிற வாய்ப்புகளும் சில திரைப்படங்களுக்கு அரிதாகவே வாய்த்திருக்கின்றன.

அந்த வகையில், இன்றும் அவரது வாழ்வைச் சொல்கிற காட்சிப்படைப்புகளுக்கான தேவைகள் உயிர்ப்புடன் இருந்து வருகின்றன. கற்பனைகளுக்கு அடங்காத அவரது தீரத்தையும் செயல்பாட்டையும் எதிர்காலத் தலைமுறையினருக்குச் சொல்ல அவை அவசியம்!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment