கலை விமர்சகர் தேனுகா அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (அக்டோபர் 24) சென்னை டிஸ்கவரி புக் பேலஸ், பிரபஞ்சன் அரங்கத்தில் தேனுகா நினைவுப் பகிர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இயக்குநர்கள் ஜே.டி, பிருந்தா சாரதி, ஆவணப் பட இயக்குநர் கவிஞர் ரவிசுப்ரமணியன், பத்திரிகையாளர் சுந்தரபுத்தன், எழுத்தாளர் ஏக்நாத், எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவின் மகள் விஜயா, பாடலாசிரியர் பா. மீனாட்சி சுந்தரம், இயக்குநர் ஜெகன், பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும், கலை விமர்சகர் தேனுகாவின் பன்முக ஆளுமைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
ஓவியம், சிற்பம், இசை முதலிய நுண் கலைகள் மீதான அவருக்கிருந்த அளவற்ற ஆர்வத்தையும், அதற்காகத் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவழித்தையும் அவரோடு தான் கொண்டிருந்த உணர்வுபூர்வமான நட்பையும் கவிஞர் ரவி சுப்பிரமணியன் நெகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
கவின் கலைகள் மற்றும் நாதஸ்வரம் ஆகியவை குறித்துத் தாங்கள் ஆவணப்படங்கள் எடுத்தபோது தேனுகா கொடுத்த ஒத்துழைப்பையும்,
‘சாரல் அறக்கட்டளை’ மூலமாக எழுத்தாளர்களுக்கு விருதளித்தபோது நடுவராக இருந்து தேனுகா முறையாக செயல்பட்டதையும் இயக்குனர் ஜே டி எடுத்துரைத்தார்.
‘தோற்றம் பின்னுள்ள உண்மைகள்’ என்ற தேனுகாவின் முழு தொகுப்பை எடுத்துவந்து அதில் இருக்கும் பல்வேறு தலைப்பிலான கட்டுரைகளைப் பற்றி அறிமுகம் செய்து தேனுகா ஒரு பன்முக ஆளுமை என்பதையும்,
தான் துளிர்க்கத் தொடங்கியபோது தன் மேல் நீர் தெளித்த ஒரு பூவாளி தேனுகா என்பதையும் இயக்குநர் லிங்குசாமியோடு அவர் கொண்டிருந்த அன்பையும் இயக்குநர் பிருந்தா சாரதி பகிர்ந்துகொண்டார்.
நாதஸ்வர மேதை ராஜரத்தினம் பிள்ளை, இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, ஓவியர் வான்கா, மைக்கேல் ஏஞ்சலோ, லியானார்டோ டாவின்சி, ப்யத் மொந்ரியான்,
கட்டடக் கலைஞன் ரீத் வெல்த் ஆகியோரின் கலை மேதமை, தஞ்சாவூர், தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம் கோவில்களின் கட்டடக்கலை,
ஆல்பர்ட் காம்யூவின் தத்துவ இலக்கியம், தமிழ்நாட்டின் சிற்ப ஓவிய ஆளுமைகள் வித்தியாசங்கள் ஸ்தபதி, சந்தானராஜ், ஆதி மூலம் ஆகியோர் பற்றிய ஆக்கங்கள்,
காந்திக்காக ஏங்கும் உலகு எனும் காந்திய சிந்தனைக் கட்டுரைகள்,
பழகத் தெரிய வேணும் எனும் வளரும் குழந்தைகளுக்கான நடைமுறை வாழ்க்கைக் குறிப்புகள் என்பது போன்ற அவரது கட்டுரைகள் ‘இந்த காம்பினேஷன் காணக் கிடைக்காத அபூர்வம் தேனுகா’ என்பதை உணர்த்தியது.
அடுத்தவர் நலனில் அக்கறை, விருந்தோம்பல், அவரது கனிந்த குரல், அன்பு மயமான பேச்சு, எழுத்தாளர்கள் எம்விவி, கரிச்சான்குஞ்சு ஆகியோர் மீது அவர் கொண்டு வந்த பெரும் மதிப்பு ஆகியவற்றை எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவின் மகள் விஜயா பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவருமே தேனுகாவைத் தங்கள் சொந்த அனுபவங்களின் வழியே நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டனர்.
என்றென்றும் மறக்கமுடியாத கலை ஆளுமை தேனுகா என்பதை இந்தக் கலந்துரையாடல் உறுதிசெய்தது.