சில தினங்களாக தேனியில் இருக்கிறேன். சென்னையில் இன்றைக்கு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. இருந்திருந்தால் சொல்லிக் கொள்ளாமல் நேரில் போய் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி நதியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கலாம். அவர் அப்படி ஒரு தாக்குதலை எப்படி எதிர்கொள்வார் என்று யோசித்தேன். மகிழ்ச்சியைத் தாண்டி ஒரு விதமான கூச்சம் அவரை ஒட்டு மொத்தமாக மூடிக்கொண்டு விடும். (ஒருமுறைகூட நாங்கள் இதுவரை நேரில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கொண்டதில்லை என்று நினைக்கிறேன்).
பாராட்டு, புகழ்ச்சி போன்ற சில விஷயங்களை நதியால் எதிர்கொள்ளமுடியாது. ஒரு மாதிரி மூச்சுத்திணறிப் போய் விடுவார். . அடடா, இன்று நேரில் போய் வாழ்த்தி நதியின் ரியாக்ஷனை எல்லாம் அடுத்த வருட வாழ்த்துப் பதிவில் எழுதும் வாய்ப்பு மிஸ் ஆகி விட்டது. அடுத்த வருடமாவது அதை செய்துவிடவேண்டும். எவ்வளவு நாள்தான் நதியை அச்சுறுத்தாமல் இருப்பது .
நதி என்று பெயர் வைத்திருக்கிறாரே தவிர நதியின் இயல்பு பெரும்பாலும் நத்தையின் இயல்பாக இருக்கிறது. கூட்டுக்குள் தன்னை இழுத்துக் கொண்டு வெகு காலம் தலைமறைவாக இருந்து விடுகிறார். ஒருமுறை நீண்டநாளாக தொடர்பிலேயே இல்லையே, ஏதேனும் துருவப் பிரதேசம் போய் விட்டிருப்பாரோ என்று மெஸேஜ் போட்டேன்.
“எங்க இருக்கீங்க? எப்படி இருக்கீங்க?”
“சென்னையில்தான் இருக்கிறேன்”
“சென்னையிலா ? எப்ப வந்தீங்க?”
இப்பதான், ஜஸ்ட் ஆறு மாசம் ஆச்சு, என்பது மாதிரியான ஒரு பதிலில் ரொம்ப கடுப்பாகி விட்டேன். ஆறு மாதமாக ஒரு செய்தி கூட இல்லாமல் இது என்ன பழக்கம், பிறந்தநாளைக்கு பதிவு போட்டா சரியாப் போச்சா? என்று ஆதங்கத்துடன் கொஞ்சம் கடிந்து கொள்வது மாதிரி பேசினேன். சற்று அமைதிக்குப் பின் சொன்னார்.
“ஒரு சர்ஜரி பாஸ், சில மாதங்களாக வெகு பாடுபட்டு விட்டேன். இப்போதுதான் அதிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறேன்” என்று விபரம் சொன்னார். ரொம்ப வருத்தமாகிவிட்டது.. சென்னையில்தான் சர்ஜரி செய்து இருக்கிறார்.
“என்ன நதி பழக்கம் இது, ஒரு மெஸேஜ் போட்டிருக்கக் கூடாதா? ஏதேனும் உதவி செய்திருக்கலாம். அல்லது ஆறுதலாக வந்து நின்றிருக்கலாம். ஏன் சொல்லவே இல்லை” என்ற எனது ஆதங்கத்துக்கு ரொம்ப சிம்பிளாக பதில் சொன்னார்.
“உங்களை ஏன் தேவையில்லாம கஷ்டப்படுத்தணும் என்று தோணுச்சு. அதான். ரொம்ப ஸாரி”
அதற்கப்புறம் திட்டத் தோன்றவில்லை. பிறரைக் கஷ்டப்படுத்தக்கூடாது என்பது நல்ல குணம்தான். ஆனால் தேவையான சமயத்தில் நண்பர்கள் அருகில் இருப்பதும் முக்கியம்தானே என்று நதியிடம் சொல்லலாம். ஆனால் நத்தை அதை செவிமடுக்காது.
சோஷியல் மீடியா மட்டும் இல்லை என்றால் நதி தனது புத்தகங்களில் வரும் பாத்திரங்களாக உருவெடுத்து அவர் வீட்டின் அலமாரி அலமாரியாக பிசாசு போல் அலைந்துகொண்டிருப்பார். வெவ்வேறு தேசத்தின் நாவல்களிலும், கவிதைகளிலும் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு அவருக்கான உலகில் மட்டுமே உலா வந்திருப்பார்.
அப்போது யாராவது என்னிடம் தமிழ்நதி எங்க இருக்காங்க என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்? அவங்க ஜாரோட ரஷ்யாவில இருக்காங்க.
துருக்கியின் தெருக்களில் அலைஞ்சுக்கிட்டிருக்காங்க, ஹெமிங்வேயோட சேர்ந்து கடல்ல அந்த மீனைப் பிடிக்க போராடிக்கிட்டு இருக்காங்க என்பது மாதிரிதான் சொல்ல முடியும்.
வாசிப்பை நேசிப்பது என்பது தாண்டி வாசிப்பை வாழ்க்கை முறையாக மாற்றிக் கொண்டிருப்பவர் நதி. அவரிடம் நான் பொறாமை கொள்ளுமிடம் அதுதான்.
நான் எல்லாம் பலபட்டறையாக அலைந்து திரிபவன். ஒட்டு மொத்த கவனத்தையும் இலக்கியம், வாசிப்பு, படைப்பு என்று மாற்றிக்கொண்டு வாழும் வாழ்க்கை நதியின் வாழ்க்கை.
நம்மிடம் யாரெல்லாம் மனதார அன்பு செலுத்துகிறார்கள் என்பதை சில சந்தர்ப்பங்கள்தான் உணர்த்தும். அந்த மனிதர்களை மனமும், உள்ளுணர்வும் இனம் கண்டு கொள்ளும். அப்படி நான் இனம் கண்டுகொண்ட ஒரு அன்பான ஜீவன் தமிழ்நதி.
– நன்றி: முகநூல் பதிவு
#எழுத்தாளர்_பாஸ்கர்_சக்தி #எழுத்தாளர்_தமிழ்நதி #writer_baskar_bharathi #writer_tamilnathi