நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்றிருக்கிற திரைப்பட இயக்குனரான தங்கர்பச்சான் செய்தியாளர்களை சந்தித்தபோது தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு இப்படிச் சொன்னார்.
“திராவிட இயக்கத் தலைவர்களான பெரியாரும் அண்ணாவும் சாராயக் கடைகளை திறக்கச் சொன்னார்களா?
தமிழ்நாட்டில் தற்போது எல்லா இடங்களிலும் மதுபானக் கடைகள் மலிந்திருக்கின்றன. என்னுடைய சொந்த ஊர் நடுக்காட்டில் இருக்கிறது. அவ்வளவு சின்ன ஊரில் கூட டாஸ்மாக் மதுபானக் கடை வந்துவிட்டது. அதை எதிர்த்து அங்குள்ள மக்கள் பலமுறைப் போராடி இருக்கிறார்கள்.
இதுவரை ஐந்துமுறை அந்தக் கடைகள் மூடுவதும் திறப்பதும் நடந்தது. ஏறத்தாழ என்னுடைய சின்ன கிராமத்தில் மட்டும் சாராயம் குடித்து 122 பெண்கள் தாலி இழந்து இருக்கிறார்கள்.
இந்த பாதிப்பை எடுத்துச்சொல்லி ஆட்சியரிடம் எடுத்துச் சொல்லி சாராயக்கடையை மூடாவிட்டால் தமிழகத்தில் முழுவதும் உள்ள சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை எடுத்து நான் போராட வேண்டி இருக்கும் என்று சொன்னதால், அந்தக் கடையை தற்போது மூடி இருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் நான் தோற்றாலும் கூட இனி அடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம்” என்றார்.