தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார்!

களப்பணியில் 38,500 பேர்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதுவரை 6 கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில், இறுதிக் கட்டமாக 7-வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறிய தகவல்கள்:

தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 39 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

39 மையங்களிலும் உள்ள 43 கட்டிடங்களில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 234 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி தனித்தனியாக வீடியோவில் பதிவு செய்யப்படும். இதுதவிர, சுற்றியுள்ள நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.

வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் அலுவலர்கள், அவர்களுக்கு உதவியாக மின்னணு இயந்திரங்கள் எடுத்து வருதல் உள்ளிட்ட பணிகளுக்காக 24 ஆயிரம் பேர், நுண்பார்வையாளர்கள் 4,500 பேர் என மொத்தம் 38,500 பேர் இந்தப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவர்களுக்கான பயிற்சி சில நாட்களாக நடந்து வருகிறது.

8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

ஜூன் 4-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை 8.30 மணிக்கு தொடங்கும்.

மின்னணு வாக்குகள் எண்ணப்படும்போதே, தபால் வாக்கு எண்ணிக்கையும் தொடர்ந்து நடைபெறும்.

அதே நேரம், தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே, இறுதிச் சுற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

முடிவு எப்போது?

தமிழ்நாட்டில், மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாகப்பட்டினம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், சிதம்பரம், பொள்ளாச்சி, திண்டுக்கல், தென்காசி, நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் 9 முதல் 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்தத் தொகுதிகளில் மதியத்துக்குள் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.

கரூரில் 54, தென் சென்னையில் 41 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இந்தத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கு அதிக மேஜைகள் போடப்படுகின்றன.

இந்தத் தொகுதிகளின் முடிவுகள் மாலைக்குள் அறிவிக்கப்படும்.

– மு.மாடக்கண்ணு

Electronic MachinesLok Sabha ElectionSatyapratha SahuTamil Nadu Chief Electoral Officerசத்யபிரத சாஹுதபால் வாக்குகள்தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிமக்களவைத் தேர்தல்மின்னணு இயந்திரங்கள்வாக்கு எண்ணிக்கைவேட்பாளர்கள்
Comments (0)
Add Comment