நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவில், மக்களவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன.
தெற்கு கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளுக்கு நாளையும் (வெள்ளிக்கிழமை), வடக்கு கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 7-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
களத்தில் 3 கட்சிகள்
கர்நாடக மாநிலத்தில் சிறிதும், பெரிதுமாக சுமார் 80 அரசியல் கட்சிகள் உள்ளன. தமிழ்நாட்டில் வலுவாக உள்ள இரு கழகங்களுக்கும் அங்கே கிளைகள் உண்டு. தலைவர்களும் உண்டு. ஆனால் இந்தக் கட்சிகளுக்கு பெரிய அளவில் வாக்குவங்கி கிடையாது.
காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) ஆகிய 3 கட்சிகள் மட்டுமே, கர்நாடகத்தில் வலுவாக உள்ள கட்சிகள்.
காங்கிரஸ் கட்சியும், பாஜகவுமே அதிக வாக்கு வங்கியை வைத்துள்ளன. இரு கட்சிகளுக்கும் தலா 30 சதவீத வாக்கு வங்கி உண்டு.
ஆனால் பாஜக-காங்கிரஸ் என மாறி, மாறி கூட்டணி வைத்து ’சந்தர்ப்ப வாதக்கட்சி’ என்ற பெயரை சம்பாதித்து, இப்போது வலு இழந்துவிட்டது.
ஜேடிஎஸ் கட்சிக்கு இன்றைய தேதியில் 10 சதவீத வாக்குகளே உள்ளன.
இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியே அதிகமுறை ஆட்சியில் இருந்துள்ளது.
கடந்த கால வெற்றிகள்
2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன.
மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும் ஜெயித்தது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக தனித்துநின்றது. காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
இந்தத் தேர்தலில் பாஜக 25 தொகுதிகளைக் கைப்பற்றியது. பாஜக ஆதரவுடன், மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா வெற்றி பெற்றார்.
பிரதமர் மோடியின் அலையால் இந்த பிரமாண்ட வெற்றி சாத்தியமானதாக பாஜகவினர் கூறினர்.
காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்றும் தனித்து களம் இறங்கின.
மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி, 135 இடங்களில் வெற்றி பெற்றது. சித்தராமய்யா முதலமைச்சர் ஆனார்.
பாஜக 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளுடன் சுருண்டது.
நேரடிப்போட்டி
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 28 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. பாஜக 25 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
கருத்துக் கணிப்புகள், பாஜக கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கின்றன.
எனினும், சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பல வாக்குறுதிகளை, காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது.
பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 2000 ரூபாய் வழங்கும் திட்டம் ஆகியவை தங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும் என காங்கிரஸ் நம்புகிறது.
பாஜக கூட்டணியில், ஜேடிஎஸ் சேர்ந்துள்ளதால், இந்த முறை முஸ்லிம் வாக்குகள் முழுமையாக, காங்கிரசுக்கு கிடைக்கும்.
முதலமைச்சர் சித்தராமய்யாவின் செயல்பாடுகளை, மக்கள் மெச்சுகிறார்கள். எனவே கர்நாடக மாநிலத்தில், பிரதமர் மோடியின் அலை சற்று தணிந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
– பி.எம்.எம்.
#காங்கிரஸ் #பாஜக #மதச்சார்பற்ற_ஜனதா_தளம் #ஜேடிஎஸ் #மோடி #சித்தராமய்யா #மக்களவைத்_தேர்தல் #காங்கிரஸ் #Karnataka_Lok_Sabha_Election_2024 #congress #modi #bjp #jds #Janata_Dal_Secular #கர்நாடகா_மக்களவைத்_தேர்தல்