காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.பி.சுனீரை, சுமார் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக, தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ எனும் பெயரில் புதிய அணியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த அணியின் பிரதான அங்கமாக காங்கிரஸ் உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (சிபிஐ) ’இந்தியா’ அணியில் உள்ளது. வயநாடு தொகுதியில் இந்த முறையும் சிபிஐ போட்டியிடுகிறது.
அந்தக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி, வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
”கூட்டணி தர்மத்தை நிலநாட்டும் வகையில், இந்த முறை வயநாடு தொகுதியில் சிபிஐயை எதிர்த்து, ராகுல் போட்டியிட வேண்டாம்” என இடதுசாரி தலைவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் அதனை ராகுல் பொருட்படுத்தவில்லை. இது, இடதுசாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
அண்மையில் வயநாடு தொகுதியில் ஆனியை ஆதரித்து பிரச்சாரம் செய்த கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன், வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதை வன்மையாக கண்டித்துப் பேசினார்.
‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஐ வேட்பாளரை எதிர்த்து, ராகுல் போட்டியிடுவது நியாயமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால் இந்த எதிர்ப்புகளைக் கண்டு கொள்ளமால் ராகுல், வயநாடு தொகுதியில் போட்டியிட நேற்று மனுத்தாக்கல் செய்தார்.
இதற்காக ஹெலிகாப்டரில் வயநாடு வந்த அவர், 2 கிலோ மீட்டர் தூரம் தொண்டர்கள் புடைசூழ, ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அவரது சாலைப் பேரணியில், பிரியங்கா மற்றும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ரூ. 20 கோடி சொத்து
வேட்புமனுவுடன் ராகுல்காந்தி, ’அபிடவிட்’ ஒன்றும் தாக்கல் செய்துள்ளார். அதில் தனது சொத்துக்கள் மற்றும் தன் மீதுள்ள வழக்குகள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ராகுலுக்கு 20 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன.
தன் மீது 18 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அவர் ‘அபிடவிட்’டில் தெரிவித்துள்ளார்.
அதில் முக்கியமான வழக்கு, மோடி சமூக மக்களை அவர் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு.
இந்த வழக்கை விசாரித்த, குஜராத்தின் சூரத் நீதி மன்றம் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் அவர் எம்.பி.பதவியை இழக்க நேர்ந்தது.
தண்டனையை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இரண்டாண்டு ஜெயில் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் ராகுலுக்கு மீண்டும் எம்.பி.பதவி கிடைத்தது.
மும்முனைப் போட்டி:
வேட்பு மனுத் தாக்கல் செய்த ராகுல், ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே திரண்டிருந்த பொதுமக்களிடையே, சிறிது நேரம் உரை நிகழ்த்தினார்.
“எனது சகோதரி பிரியங்காவை எப்படி நினைக்கிறேனோ, அப்படியே வயநாடு தொகுதி மக்களையும் நினைக்கிறேன் – இங்குள்ள வீடுகளில் எனக்கு அம்மாக்கள், அப்பாக்கள், சகோதரிகள் உள்ளனர் – உங்கள் ஆதரவுக்கு, என் இதயங்கனிந்த நன்றி” என அவர் உணர்ச்சி வசப்பட்டார்.
வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து சிபிஐ சார்பில் ஆனி ராஜாவும், பாஜக வேட்பாளராக மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனும் போட்டியிடுவதால், இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்தத் தொகுதியில் வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
– பி.எம்.எம்.