முன்னணி நட்சத்திரங்களின் படங்களை இயக்குவதற்கென்றே சில இயக்குனர்கள் உண்டு. அவர்களால் வேறு மாதிரியான படங்களை ஆக்குவது கஷ்டம்.
ஆனால், அப்படிப்பட்ட இயக்குனர்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகிலும் கிடைக்கும் மதிப்பு மரியாதையே தனி. மிகச்சொற்பமானவர்கள் இடம்பெறும் அந்த வரிசையில் இயக்குனர் அட்லீக்கும் ஒரு இடம் உண்டு.
சரி, அட்லீ படம் எப்படியிருக்கும்? ராஜா ராணி தொடங்கி பிகில் வரை நான்கையும் பார்த்தவர்களுக்கு, நிச்சயம் மனதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதனைச் சுமந்துகொண்டு ‘ஜவான்’ படம் பார்க்கச் சென்றால், எப்படிப்பட்ட அனுபவம் கிடைக்கும்?
பல படங்களின் சாயல்!
ஒரு சிறைச்சாலை அதிகாரி, தன்னுடைய கட்டுப்பாட்டிலுள்ள ஆறு பெண் கைதிகளைக் கொண்டு ஒரு மெட்ரோ ரயிலை கடத்துகிறார்.
அதற்குப் பதிலாக, ரூ.40,000 கோடி தொகையைத் தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டும் என்று மிரட்டல் விடுக்கிறார். அதனைத் தரச் சம்மதிக்கிறார் தொழிலதிபர் காளீஸ் (விஜய் சேதுபதி).
அவர் ஏன், அந்த பணத்தைத் தருகிறார்? விவசாயிகள் கடனை வசூலிக்க எந்த எல்லைக்கும் செல்லும் மாநில அரசு, காளீஸ் நிறுவனம் வாங்கிய கடனை ரத்து செய்ய உதவியாக இருந்ததுதான் அதற்குக் காரணம்.
அவர் அனுப்பும் பணத்தைக் கொண்டு நாட்டிலுள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் தீர்க்கிறது அந்த கடத்தல் கும்பல். அந்த சம்பவத்திற்குப் பிறகு தடயமே இல்லாமல் ‘எஸ்கேப்’ ஆகிறது. அவர்கள் குறித்த தகவலோ, அடையாளமோ போலீசார் கையில் கிடைப்பதில்லை.
அந்த சிறைச்சாலை அதிகாரி பெயர் ஆசாத் (ஷாரூக்கான்). விக்ரம் ரதோர் என்ற பெயரைப் பயன்படுத்தித்தான், அவர் அந்த கொள்ளையை நிகழ்த்துகிறார். அந்த பெயரைக் கேட்டதும் காளீஸ் ‘ஜெர்க்’ ஆகிறார்.
அந்த கடத்தல் கும்பலைப் பிடிக்கத் தனது ஆட்களை அனுப்புகிறார். அதேநேரத்தில், மெட்ரோ ரயில் கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறார் காவல் துறை அதிகாரியான நர்மதா (நயன்தாரா).
ஒருநாள் நர்மதவைப் பெண் பார்க்கச் செல்கிறார் ஆசாத். அப்போதே, தன்னைக் குறித்த உண்மைகளை அவரிடம் சொல்ல வேண்டுமென்று முயற்சிக்கிறார். ஆனால், அது நிறைவேறாமல் போகிறது.
இந்த நிலையில், அவருக்கும் நர்மதாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அதேநேரத்தில், மெட்ரோ ரயில் கொள்ளையில் தொடர்புடையவரின் அடையாளங்களை வைத்து ஓவியம் தீட்டும் முயற்சிகள் நடக்கின்றன.
அந்த ஓவியத்தில் ஆசாத்தின் உருவம் தெரிய வருகிறது. அதையடுத்து, போலீஸ் படை ஆசாத் வீட்டைச் சுற்றி வளைக்கிறது.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதற்கான பதில் பல கிளைகளாக விரிகிறது.
இந்த படத்தில் தாய்நாடு தொடங்கி ஆரம்பம், வலிமை, துணிவு மற்றும் மெர்சல், பிகில் உட்படப் பல படங்களின் சாயல் இருப்பதைக் காண முடியும்.
ஸ்பானிஷில் வெளியான ’மனிஹெய்ஸ்ட்’ சீரிஸின் தாக்கமும் நிறைய. அதற்கேற்ப பல காட்சிகளோடு படமும் மூன்று மணி நேரம் ஓடுகிறது. ’ஜவான்’ படத்தின் பலமும் அதுவே; பலவீனமும் அதுவே!
ஷங்கரின் சீடர்!
ஷங்கரின் ‘இந்தியன்’, ‘அந்நியன்’ படங்களில் வில்லன் என்று தனிநபர் ஒருவரை மட்டும் கைகாட்டும் வேலை இருக்காது. மாறாக, ஒட்டுமொத்தமாக ஒரு கும்பலை நோக்கி விரல்கள் நீளும்.
சில வசனங்களில் மக்களின் அறியாமை பெருங்குறையாகச் சொல்லப்படும். ஷங்கரின் சீடர் என்பதாலோ என்னவோ, அதே தொனியைக் கையாண்டிருக்கிறார் அட்லீ.
ஒரு சிறைச்சாலை அதிகாரியால் இப்படியொரு கொள்ளையை நிகழ்த்த முடியுமா? ஆங்கிலப் பட பாணியில், இப்படியொரு பெண்கள் சிறை உண்மையிலேயே இருக்கிறதா? ஒரு ராணுவ வீரனுக்கான எல்லை என்ன என்பது உட்படப் பல கேள்விகளை எழுப்புகிறது இப்படம்.
அதனால், இதில் லாஜிக் மீறல்கள் ஏராளம் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். அதையும் தாண்டி படத்தை ரசிக்கக் காரணமாக இருப்பது ஷாரூக்கின் இருப்பு.
அசத்தலான நடிப்பையும் ஸ்டைலையும் வெளிப்படுத்தும் ஷாரூக், தனது முகச்சுருக்கங்களைத் தணிப்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது.
இதில் இளமை பொங்கத் தோன்றியிருக்கிறார் நயன்தாரா. அதில் பெரும்பங்கு வகிக்கிறது ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு.
இன்னொரு நாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். கொஞ்சம் சீனியர் நாயகிகள் அம்மா வேடம் ஏற்பார்கள்; இதில் அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கிறார் தீபிகா.
பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, சஞ்சிதா, கிரிஜா ஓக், லெகர் கான், ஆலியா குரோஷி ஆகியோர் அந்த ஆறு பெண் கைதிகளாக வருகின்றனர். பிகில் தந்த அனுபவத்தில், அவர்களுக்கும் திரையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் அட்லீ.
விஜய் சேதுபதிக்கு வழக்கமான வில்லன் வேடம். அதனை ஏற்று, கைத்தட்டல்கள் பெறும் விதமாகச் சில வசனங்களை உதிர்த்திருக்கிறார்.
யோகிபாபு. தமிழ் பதிப்புக்காக இரண்டு காட்சிகளில் தலைகாட்டியிருக்கிறார். இவர்களோடு ரித்தி டோக்ரா, இஷாஸ் கான், சுனில் குரோவர், ரவீந்திரா விஜய் என்று இரண்டு டஜன் கலைஞர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு, டி.முத்துராஜின் தயாரிப்பு வடிவமைப்பு அனைத்தும் ஒன்று சேர்ந்து, ஒரு வண்ணமயமான கமர்ஷியல் படம் பார்த்த திருப்தியைத் தருகின்றன.
முக்கியமாக, இதுவொரு பிரமாண்டமான தயாரிப்பு என்பதை வெளிக்காட்டப் பயன்பட்டிருக்கின்றன.
அனிருத் முதன்முறையாக இந்திக்குச் செல்ல உதவியிருக்கும் ‘ஜவான்’, அவருக்கான ஒரு விசிட்டிங் கார்டு என்பதில் சந்தேகமில்லை. அதற்கேற்ப பாடல்கள், பின்னணி இசை அமைந்திருக்கின்றன.
இரைச்சல் அதிகம் என்றாலும், பார்வையாளர்களை உசுப்பேற்றும் வகையில் மெட்ரோ ரயில் கடத்தல் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகளில் பின்னணி இசை ஒலிப்பது இப்படத்தின் பலம்.
அட்லீயின் கவனத்திற்கு..!
ஏற்கனவே பார்த்த பல படங்களை நினைவூட்டுவது அட்லீ படங்களின் சிறப்பம்சம். இதிலும் அது தொடர்கிறது.
அதேநேரத்தில், அந்த தகவல்கள் எதுவுமே நம்மை அண்டவில்லை எனும்போது ‘ஜவான்’ ஒரு காட்சி விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அதற்கேற்ப திரையில் விருந்து படைப்பதற்கான உழைப்பை, ஒரு இயக்குனராக அவர் தந்திருக்கிறார்; சம்பந்தப்பட்ட கலைஞர்களை ஒருங்கிணைத்து தனக்கு வேண்டியதைப் பெற்றிருக்கிறார்.
இந்த படத்தில் ‘யாதோன் கி பாராத்’ மாதிரியான கதையமைப்பை வைத்துக்கொண்டு, ’பிரிந்தவர் கூடினால் பாட்டு பாடுவார்கள்’ என்ற நியதியையும் விஜய் சேதுபதி வழியாகக் கிண்டலடித்திருக்கிறார்.
கூடவே, இன்றைய தலைமுறையினர் எளிதாக ‘கிரிஞ்ச்’ என்று சொல்லக்கூடிய விஷயங்களையும் திரைக்கதையில் நிறைத்திருக்கிறார்.
ஷங்கரின் ‘இந்தியன்’ பாணியில் ஏழைகளைக் கடைத்தேற்றும் காட்சிகள் அந்த வரிசையில் சேர்பவை. எல்லாமே ஒற்றைத்தீர்வை முன்வைப்பவை.
இது தேவையா என்று கேட்டால், ‘இதெல்லாமே பி, சி கிளாஸ் ஆடியன்ஸுக்கு பிடிக்கும்’ என்று அட்லீ தரப்பு பதில் சொல்லலாம்.
அவர்களாக வந்து ‘இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை’ என்று சொல்லும் வரைக்கும் அட்லீ அதைத் தொடரத்தான் போகிறார்.
அதில் சந்தேகமில்லை. ஆனால், ‘ஜவான்’ மாதிரியே அடுத்த படம் தந்தால் அட்லீ நிச்சயம் சிக்கிக்கொள்வார். அது, அவருக்கும் தெரியும். அதனால், அந்த படம் எப்படியிருக்கும் என்பதே நம் கேள்வியாக இருக்கிறது.
’ஜவான்’ படம் பார்த்தால், நிச்சயம் உங்கள் மனதிலும் அதே கேள்வி எழும். அதற்கேற்ப, புத்துணர்வுமிக்க ஒரு அனுபவத்தைத் தந்தாக வேண்டிய கட்டாயத்தில் சிக்கியிருக்கிறார் அட்லீ. பெஸ்ட் ஆஃப் லக்!
– உதய் பாடகலிங்கம்