தமிழ்ச் சமூகத்தின் சமத்துவ நெறியை உயர்த்திப் பிடித்த மாமேதை!

முனைவர் துரை.ரவிகுமார். எம்.பி

மாவீரன் இரட்டைமலை சீனிவாசனின் முன்முயற்சியால் நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாணையின் காரணமாகவே இன்றளவும் ஆதிதிராவிடர் என்கிற பெயர் தமிழ்நாடு அரசாங்கத்தின் பயன்பாட்டில் உள்ளது.

அது பட்டியல் சாதிகளில் இடம்பெற்றுள்ள உள்சாதி ஒன்றின் பெயர் அல்ல. அந்தப் பெயரில் எந்தவொரு சாதியும் இருந்ததில்லை. சாதி மறுப்பின் அடையாளமாகவே அந்தப் பெயர் சூட்டிக்கொள்ளப்பட்டது.

அரசாணை வெளியிடப்பட்டாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போதும், சாதிச் சான்றிதழ் வழங்கும்போதும் உள்சாதிகளின் பெயர்களையே அதிகாரிகள் பயன்படுத்தியதால் இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்ட முன்னோடிகள் போராடிப் பெற்ற அடையாளம், இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராத நிலை உள்ளது.

1967இல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவில் (The Scheduled Castes and Schedule Tribes Orders (Amendment) Bill 1967) தேட், சண்டாளா, பஞ்சமா, பறையன் என்கிற பெயர்கள் இழிவுபடுத்தும் தன்மை கொண்டவை; எனவே அவற்றை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

1969 நவம்பர் மாதம் 17இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அந்தச் சட்ட மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக்குழு அறிக்கையும் அதை வலியுறுத்தியது.

அந்தக் கூட்டுக் குழுவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கா.சுப்ரவேலு இடம்பெற்றிருந்தார்.

அந்த மசோதாவில் தமிழ்நாட்டின் எஸ்.சி. பட்டியலில் 58 சாதிகள் மட்டுமே இருந்தன. அதில் பறையன் என்பது இல்லை.

அந்தப் பெயரில் அழைக்கப்படும் மக்களை ஆதிதிராவிடர் எனப் பட்டியலில் குறிப்பிட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அன்றைய காங்கிரஸ் அரசு அதை நிறைவேற்றவில்லை.

தேவேந்திர குலவேளாளர், அருந்ததியர் என்ற அடையாளங்களுக்குள் உள்ளடக்கப்பட்ட 14 சாதிகள் போக மீதமுள்ள சாதிகளை ‘ஆதிதிராவிடர்’ என ஒரே பெயரில் வகைப்படுத்திட வேண்டுமெனத் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘திராவிட மணி’ இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் அமைத்து மரியாதை செய்யும் தமிழ்நாடு அரசு, அவர் போராடி உருவாக்கிய ஆதிதிராவிடர் என்ற அடையாளத்தை நிலைநிறுத்த முன்வர வேண்டும்.

அது அவருக்குச் செய்யும் சிறப்பு மட்டுமின்றி, தமிழ்ச் சமூகத்தின் சமத்துவ நெறியை உயர்த்திப்பிடிப்பதுவும் ஆகும்.

– நன்றி: இந்து தமிழ் திசை

Comments (0)
Add Comment