மொழியின் அற்புதம்!

“ஓரிரவு ஒரு கனவு கண்டேன். கண்டு ஏறக்குறையப் பதினாறு வருடங்களாகியும் மறவாத அந்நினைவைக் கனவென்று கொண்டால்…

“வானத்தில் நிலவுக்கு முன் மேகங்கள் சரசரவென விரைந்து கொண்டிருந்தன. ஆனால் சந்திரன் தெரியவில்லை. தேங்காயைத் துருவி மலையாய்க் குவித்திருந்தது.

என் கண்ணுக்கெட்டியவரையில் மேகங்களில் கற்கண்டுக் கட்டிகள் போல் நட்சத்திரங்கள் வாரி இறைத்திருந்தன.

“அப்போது யாரோ பாடும் குரல் கேட்கிறது. ஆண் குரல். ஹிந்துஸ்தானி சங்கீதம். ‘கஜல்’. இடையிடையே நீண்ட தொகையறாக்கள். குரலோடு இழைந்து இழைந்து, பத்துச் சாரங்கிகள் அழுகின்றன.

திடீரென்று தபேலாவின் மிடுக்கான எடுப்புடன் ஆரம்ப அடியில் பாட்டு முடியும்போதெல்லாம் இன்பம் அடி வயிற்றைச் சுருட்டிக் கொண்ட ‘பகீர்’ ‘பகீர்’ என்று எழும்புகிறது. அந்த மாதிரிக் குரலை நான் கேட்டதேயில்லை.

என் எலும்பெல்லாம் உருகிவிடும் போல் இருக்கிறது. நான் அதைத் தேடிக் கொண்டே போகிறேன்.

“நான் போகிற வழியெல்லாம் யார் யாரோ மேடுகளிலும், பள்ளங்களிலும், மரத்தடிகளிலும், பரந்த வெளிகளிலும், கூட்டம் கூட்டமாயும், கொத்துக் கொத்தாயும், தனித் தனியாயும் அசைவற்று உட்கார்ந்திருக்கிறார்கள்.

நான் போகப் போகப் பாட்டின் நெருக்கமும், இனிமையும் இந்த உடல் தாங்கக் கூடியதாயில்லை.

“பாடும் ஆளும் தென்படுவதாயில்லை. என் எதிரே கட்டிடமுமில்லை. ஒரே பரந்த வெளிதான். ஆனால் குரலின் கணகணப்பும், நெருக்கமும், இனிமையும் ஒரே இரைச்சலாய் வீங்கி என் மேல் மோதுகையில் எனக்கு ஏற்பட்ட தவிப்புத் தாங்க முடியவில்லை.

திகைப் பூண்டை மிதித்த மாதிரிக் கடைசியில் என்னேயே நான் சுற்றி வருகிறேன். அப்பொழுது என்னிலிருந்து அக்கீதம் ரத்தக் குழாய்களை வெடித்துக் கொண்டு வெளிப்படுதாய்க் காண்கிறேன்.

அன்றிலிருந்து நான் முன் மாதிரி இல்லை என்னில் ஒரு புதுப் பிரக்ஞையை உணர்ந்தேன்.

– லா.ச.ரா. ‘சொல்’

Comments (0)
Add Comment