திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் மர்ம கும்பல் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அதில் இருந்த ரூ.72 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கர்நாடகா, அரியானா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர்.
அதோடு இந்த கொள்ளையில் தொடர்புடைய அரியானாவை சேர்ந்த தஸ்லிம்கான் என்பவரையும் கைது செய்தனர்.
இவர் கொள்ளையர்கள் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்க சென்றபோது அவர்கள் பயன்படுத்திய காரை ஓட்டியவர் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான ஆசீப் ஜாவேத் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டான்.
அரியானா – ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஆரவல்லி மலைப்பகுதியில் ஆசீப் ஜாவேத்தை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜாவேத்திடமிருந்து ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை மேவாட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விமானம் மூலம் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் ஜாவோத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.