நூல் அறிமுகம்:
தமிழக கல்விச் சூழல் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். பள்ளி ஆசிரியை சு. உமாமகேஸ்வரியின் சமகால கல்விச் சிந்தனைகள் விரவிக்கிடக்கிற கட்டுரைகளை உள்ளடக்கியது.
நூலுக்கான அணிந்துரையில் ஆயிஷா இரா. நடராசன், “தோழர் உமா, ஒரு ஆசிரியை. சராசரி ஆசிரியர்களைப் போல இல்லாமல், பணியைக் கடந்த கல்வி விமர்சகர்” என்கிறார்.
மேலும் பேசும் அவர், “கற்றல், கற்பித்தலில் சமரசம் செய்துகொள்ளாதவர். இன்றைய தமிழக கல்விச்சூழல் குறித்து பெருங்கவலையோடு அவர் அவ்வப்போது எழுதிவரும் கட்டுரைகளை வாசித்தது உண்டு.
மேலே இருப்பவர்கள் கொண்டு வரும் திட்டங்களைக் கடைக்கோடி வகுப்பறைக் களத்திலிருந்து, இது இப்படி இருந்திருக்கலாமே என்று உரிமையோடு இடித்துரைக்கும் சுட்டுவிரலாகத் தன் சிவப்பு மை பேனாவைப் பயன்படுத்துபவர் அவர்” என்று தன் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்றைய கல்விச் சூழல் இருவகையான போக்குகளைச் சந்தித்திருக்கிறது.
ஒன்று நாம் எதிர்க்கும் புதிய கல்விக்கொள்கையின் மோசமான பிற்போக்கு அம்சங்களை எப்படியோ திணித்து, நாம் காலங்காலமாக வளர்த்த பொதுக்கல்விக் கனவைத் தகர்க்கும் முயற்சிகள் காலங்காலமாக தொடர்ந்து நடப்பதைப் பார்க்கிறோம்.
மற்றொன்று தமிழக அரசு நம் பள்ளிக்கல்வித்துறை மூலம் அறிமுகம் செய்துவரும் ஏராளமான கல்வித்திட்டங்கள். இந்தச் சூழலில் கல்வியாளர் உமாவின் குரல் தனித்து ஒலிக்கிறது என்று பாராட்டுகிறார் ஆயிஷா இரா. நடராசன்.
பேராசிரியர் யோகராஜன், “ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோர்களும் கல்வியாளர்களும் நன்மனம் படைத்தோரும் இந்த நூலைப் படிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். உண்மைதான். இது தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் படிக்கவேண்டிய நூலாக இருக்கிறது.
நூலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வணக்கம் சொல்லி தொடங்கும் உமா, தமிழகத்தில் கல்வி, குறிப்பாக அரசுப்ப ள்ளிகளில் கல்வி எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பதை உணர்த்தும் குறிப்பு நூல்தான் இது என்று அறிமுகப்படுத்துகிறார்.
2022 ஜூன் முதல் டிசம்பர் வரையில் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் அழகிய நூலாக தொகுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு நிறுவியுள்ள மாநில கல்விக் கொள்கை வரைவுக் குழுவிற்கு மாநில கல்விக்கொள்கைக்கான நமது ஆலோசனைகளும் பரிந்துரைகளாக இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
வளமான வகுப்பறைகள் வசப்படட்டும் என்ற கட்டுரை முதல் அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள் என்ற கட்டுரை வரையில் 26 கட்டுரைகள் நூலில் உள்ளன. சமகால கல்விச் சூழல் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு ஒரு ரெபரன்ஸ் நூலாக வந்திருக்கிறது.
தமிழக கல்விச் சூழல்:
சு. உமாமகேஸ்வரி
வெளியீடு: சுவடு பதிப்பகம்,
7ஏ ரெங்கநாதன் தெரு,
சேலையூர், சென்னை – 73
விலை ரூ. 130