ஈரோடு வெற்றி திமுக மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் கிடைத்த வெற்றி திமுக மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் கட்சியின் அருமைச் சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இந்த மாபெரும் வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றியானது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி.

தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள மகத்தான அங்கீகாரம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாண்டு கால ஆட்சியானது, மக்களின் நம்பிக்கையைப் பூர்த்தி செய்து, தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றி வருவதற்கு மக்கள் தங்களது நன்றியை வாக்குகளின் மூலமாக உயர்த்திக் காட்டி இருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தார்கள்.

வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருந்து செயல்பட்டுள்ளோம் என்பதற்கு மக்கள் இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலமாகப் பாராட்டுச் சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.

இந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிப் பயணம் தொடரும்” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment