– டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதுபோல 2 வீடியோக்கள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
முக்கியமாக இந்த வீடியோக்கள் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வேகமாக பரவியது. இதனால் அந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இதையறிந்த தமிழக காவல்துறை அந்த வீடியோக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே இதுதொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகிறது. அந்த வீடியோக்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை.
இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இருவேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டுள்ளன.
இதில் ஒரு வீடியோ திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டது. மற்றொரு வீடியோ கோவையில் உள்ளூர்வாசிகள் மோதிக் கொண்டது.
அதோடு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.