அதிமுக பொதுக்குழு: தொடரும் சர்ச்சைகள்!

ஜூலை 11-ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா என்கிற சஸ்பென்ஸ் ஒருவழியாக விலகியிருக்கிறது.

ஓ.பி.எஸ். தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்குக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அதோடு அ.தி.மு.க பொதுக்குழு திட்டமிட்டபடி நடத்தவும் அனுமதி அளித்திருக்கிறது.

இம்முறை பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தால், சென்ற தடவை ஓ.பி.எஸ்ஸூம், அவருடைய ஆதரவாளர்களும் கலந்து கொண்டு சில அவமானங்களைச் சந்தித்த மாதிரி தற்போதும் பொதுக்குழுவுக்குத் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் செல்வார்களா? அப்படியே சென்றாலும் பொதுக்குழு அமைதியாக நடக்குமா என்று சொல்ல முடியுமா?

அப்படி ஒருவேளை ஓ.பி.எஸ் பொதுக்குழுவுக்குச் செல்லவில்லை என்றால், பொருளாளரான அவர் வரவு-செலவுக் கணக்கைச் சமர்ப்பிக்கவில்லை என்றால், அது தேர்தல் ஆணையத்திற்கு செல்லும்போது பிரச்சினை ஆகாதா?

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் – பதவிகள் தேர்தல் ஆணையத்திற்கு முன்பும் காலாவதியாகி விட்டது என்று சொல்ல முடியுமா?

பெயரளவுக்குப் பொதுக்குழு உறுப்பினர்களைத் தன்னுடைய பிரத்யேகச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தன்னுடைய ஆதரவாளர்களாகத் தோற்றம் காட்டியிருப்பது மாதிரி நாளை அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியிலும் எடப்பாடி பழனிசாமி செல்வாக்குப் பெற முடியுமா?

இடையில் நிலுவையில் இருக்கிற கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சில முக்கியப் புள்ளிகள் சிக்கினால் அ.தி.மு.க கட்டமைப்பில் அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இதுவரை புலப்படவில்லை.

பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியின் திட்டப்படி ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியை விட்டு நீக்க முற்பட்டால், அவர்கள் தரப்பில் சும்மா இருப்பார்களா?

ஓ.பி.எஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் சொன்னபடி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எவ்வளவு தூரம் முறைகேடாகச் சம்பாதித்திருக்கிறார்கள்? அவர்களின் பினாமிகள் யார் யார்? என்ற சொத்துப் பட்டியலை வெளியிடுவோம் என்று அறிவித்திருக்கிறார்.

சிறையில் இருக்க  வேண்டியவர்கள் வெளியில் இருப்பதால் தான் இவ்வளவு குழப்பம் நடக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.

பதிலுக்கு எடப்பாடி தரப்பும் சளைக்காமல் ஓ,பி.எஸ். தரப்புப் பட்டியலை வெளியிடலாம்.

ஏற்கனவே சில பிரமுகர்களைக் குறிவைத்து வருமானவரிச் சோதனைகள் நடந்து கொண்டிருக்கும் போது, இருதரப்பிலும் பரஸ்பரம் வைக்கும் குற்றச்சாட்டுகள் மேலும் சோதனைகளுக்கே வழிவகுக்கும்.

பொன் விழாவைத் தாண்டியிருக்கிற அ.தி.மு.க.வில் அதன் நிறுவனரான எம்.ஜி.ஆர் அதன் அடிப்படைப் பலமான தொண்டர்களால் கட்சித்தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை அடிப்படை விதியாக அறிவித்திருந்தார்.

தற்போது அப்படிப் பொதுக்குழு நடக்கிறதா? தலைவர் சொல்படி தலைமை தேர்ந்தெடுக்கப்படுகிறதா?

தொண்டர்கள் தான் 2600 க்கு மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா? தொண்டர்களுக்கு வாக்கின் மூலம் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறதா? முக்கியமாக அவர்களுக்கு அதற்கான வாக்குரிமை இருக்கிறதா?

தற்போது அ.தி.மு.க. இயக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் குளறுபடிகளை அதன் தொண்டர்கள், ஆரம்ப காலத்திலிருந்து அதன் அடிப்படைத் தூணாக இருந்தவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

அ.தி.மு.க என்ற இயக்கத்திற்கு உண்மையில் உயிர் கொடுப்பவர்கள் அவர்கள் தானே!

– யூகி

Comments (0)
Add Comment