“பெரியாரிடம் இருந்த பொதுநலன் சார்ந்த கோபம் தான் இன்றையத் தேவை”

சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனின் நேர்காணல் தொடர்ச்சி: மூன்றாம் பகுதி
சந்திப்பு : மணா
*
கே : பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அடித்தளத்தில் பொருளாதாரத்தில் ஒரே மாதிரியான நிலை இருந்தாலும், வழிபடுவதில் ஒருமித்த கருத்து இல்லையே? சண்டை, சச்சரவுகள் அதிலிருந்து தானே கிளம்புகின்றன?

தொ.பரமசிவன் பதில்: தெய்வங்கள் பொதுவாகவே இருந்திருக்கின்றன. மாரியம்மனை எல்லோரும் கும்பிட்டாலும், அந்தத் தேரைத் தொட்டு இழுக்கிற போது தான் சிக்கல் வருகிறது. இது சாதிய அடிப்படையில் கோயிலைப் பேண முயல்கின்ற போது வருகிற தகராறு. இன்னும் சொல்லப் போனால் தாழ்த்தப்பட்டவர்கள் வணங்குகிற தெய்வங்களை மற்ற சாதியினர் வணங்குவதும் தமிழ்நாட்டில் உண்டு. அவர்களது தெய்வங்களைப் புறந்தள்ளுவதில்லை.

நாட்டார் தெய்வங்களில் வேறுபாடில்லை. தெய்வ வழிபாட்டில் அதற்கான சமூக உறவுகளில் மட்டுமே சிக்கல். ஒன்று செய்தால் போதும். இந்தியாவில் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். மதம் மாற அனுமதித்தது மாதிரி, சாதி மாற ஏன் இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை? சாதி காரணமான மேல், கீழ் என்கிற அடக்குமுறையை ஏன் அது பேணிப் பாதுகாக்கிறது?

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வரலாம். ஆனால் பெருந்தெய்வக் கோயிலுக்குள் இருக்கிற கருவறைக்குள் இருக்கிற பத்தடி வெளிக்குள் மட்டும் அவருக்கு அனுமதி கிடையாது.

ஏன் அந்த உரிமையை ஒரு குறிப்பிட்ட சாதிக்கானதாக வைத்திருக்கிறது அரசியல் சட்டம்? இதை எடுப்பதில் என்ன சிரமம்? என்னதான் வேதம் படித்தாலும், பிறப்பு காரணமாக அந்த வெளி மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதலில் சாதிய மறுப்பைக் கோயில் கருவறைகளில் இருந்து துவங்குங்கள். பிறப்பு வழிப்பட்ட மேலாண்மையைக் கோயில்களின் மூலமாக தக்க வைத்துக்கொள்கிற வரைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும், அதன் மூலம் அரசியல் அதிகாரத்தையும் உயர்சாதி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

எனவே மேல், கீழ் என்கிற அடுக்கு முறையை நியாயப்படுத்துகிற எல்லாமே பிராமணியம் தான். அது ஒரு ஒடுக்குமுறைக் கருத்தியல், அது பிராமணர்கள் இல்லாத இடத்திலும் இருக்கிறது. எப்போது பிற்படுத்தப்பட்ட ஒருவர், தாழ்த்தப்பட்டவரைச் சாதியின் பெயரால் ஒடுக்குகிறாரோ, அந்த ஒடுக்குமுறை உறவுக்குப் பெயர் பிராமணியம் என்று நாம் சொல்கிறோம். ஏனென்றால் இதைக் கற்றுக் கொடுத்தது அவர்கள் தான்.

முதலாளித்துவம் என்று இதை மார்க்சிஸ்டுகள் சொன்னார்கள். இதையே பிராமணியம் என்று சொன்னார் பெரியார். அதுதான் வித்தியாசம்.

சாதி முறையை அரசியல் சட்டம் பேணுகிறது என்று பெரியார் சொன்னதில் என்ன தவறு? பிறப்பு வழிப்பட்ட சாதிக் கொடுமைகளை அரசியல் சட்டம் நன்றாக உணர்ந்திருக்கிறது. அதே சமயம் கோவில் கருவறை என்று வருகிறபோது அதே சாதி அடுக்கை அது பாதுகாக்கிறது.

‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று சொன்னால் அதைக் கவனமாக நிராகரிக்கிறது. இதைச் சொன்னால் நம்மில் பலருக்கு உறுத்தலாகத் தெரியலாம். ஆனால், இதுவே நடைமுறை உண்மை.

கே: இந்த உணர்வைப் பெருவாரியான மக்களிடம் எடுத்துக் கொண்டுபோவதற்கான அமைப்புகள் இன்றைக்கு இருக்கிறதா?

பதில் : சில அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் பெரியார் பெயரைச் சொல்கிறவர்களிடம் அந்த அமைப்புகள் நிச்சயமாக இல்லை. அம்மாதிரியான சிந்தனையும், செயல்பாடும் இருக்கவே செய்கின்றன.

திராவிட இயக்கங்கள் நீர்த்துப் போய்விட்டன. இதற்குக் காரணம் வாக்கு வங்கி அரசியல். இருந்தாலும் அவர்களது செயல்பாட்டையும், தேவையையும் நிராகரித்துவிட முடியாது.

கே: பண்பாட்டுச் சிதைவுகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறீர்கள். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்கிற உரத்த கோஷங்களின் பின்னணியில் நிறைய மாற்றங்கள் இப்போது நடக்கும் போது எதைத் தமிழ்ப் பண்பாடு என்று சொல்லமுடியும்?

பதில்: பெருவாரியான மக்கள் இன்னும் பண்பாட்டுடனே வாழ்கிறார்கள். மூச்சு விடுகிறோம் என்கிற தன்ணுணர்ச்சியுடன் நாம் மூச்சு விடுவதில்லை. அது மாதிரி இயல்பாகவே தம் சமூகம் ஒரு பண்பாட்டுப் பின்னணியுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. பண்பாடு என்பது மூளையில் உறை நிலையில் இருக்கிறது. சில நேரங்களில் அது நிலத்தடி நீர் போல இருக்கிறது.

சமூகத்தின் பண்பாட்டை அதன் தேவையை நீங்கள் உணரும் போதே, உணரமுடியும். பண்பாடு மீறப்படும் போது அதை உங்களால் உணரமுடியும். பண்பாட்டைப் புரிந்து கொள்வது ஆராய்ச்சியாளர்களின் வேலை. ஆனால் மக்கள் அதனுடனையே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பண்பாடு என்பது பொருள் உற்பத்தியுடன் தொடர்புடையது. அந்தப் பொருள் என்பது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்றைக்குப் பன்னாட்டு மூலதனம் என்கிற பெயரில் நம் பண்பாட்டின் நுட்பமான வேர்கள் அழிக்கப்படுகின்றன, நுகர்வுக் கலாச்சாரம் மூலம். அது பொருளாக்கத்திற்கான எதிரான கலாச்சாரம்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துக் குழந்தைகள் பனை ஓலைகளில் காற்றாடி செய்வார்கள். பூவரசு இலையை வைத்து ஊதல் செய்வார்கள். சிறு பொருளையேனும் தானே ஆக்கிக் கொள்கிற அந்தக் கலாச்சாரம் இப்போது அடிபட்டுப் போய்விட்டது. இப்போது எந்தக் குழந்தையும் தானே ஆக்கிக் கொள்வதில்லை.

எல்லாம் கடைகளில் வாங்கிக் கொடுக்கப்பட்டு ‘ஆக்கம்’ என்கிற சுயமான உற்பத்தி உணர்வு அடிபட்டு போய்விடுகின்றது. இதைத்தான் அறுந்துபோன நுட்பமான வேர் என்று சொன்னேன். இப்படி நுகர்வுக் கலாச்சாரத்தின் பின்னணியில் நாம் இழந்தவை பல.

மண்பானை செய்பவனுக்கு படிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், தரமான மண்பானையை வடிவமைக்கத் தெரியும். தொழில்நுட்பம் தெரியும். நுகர்வுக் கலாச்சாரம் வந்ததும் இன்றைக்கு ஒரே சீரான பிளாஸ்டிக் குடங்கள் வந்துவிட்டன. மண்பானைத் தொழில் நுட்பம் பின்னுக்குப் போய் விட்டது.

உலகமயமாக்கல் என்பதற்குப் பின்னால் நமது பண்பாடு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தஞ்சை, மதுரை, நெல்லையில் முன்பு விதவிதமான பித்தளைப் பாத்திரங்கள் இருக்கும். இப்போது அந்தப் பன்முகத் தன்மை அழிந்து போய்விட்டது.

இதற்கு முக்கியக் காரணம் பன்னாட்டு மூலதனமும், அதற்கு எடுபிடிகளாக இருக்கக் கூடிய நம்முடைய தகவல் தொடர்பு ஊடகங்களும் தான். இவை கொடூரமான வன்முறையை நமது பண்பாட்டின் மீது நிகழ்த்துகின்றன.

பாரம்பரியமாக நாம் உப்பைப் பயன்படுத்துவதை எதிர்க்கிற விதத்தில் ‘நிறுத்து’ என்று அதிகாரத் தொனியில் தொலைக்காட்சி விளம்பரம் வருகிறது! அதில் வன்முறை இல்லையா? ‘உங்கள் மேனியின் சிவப்பழகு’ என்று சொல்வதில் வன்முறை இல்லையா? கருப்பாக இருக்கும் பெருவாரியான மக்களை அழகில்லை என்று தாழ்த்தி விட முடியுமா? சிவப்பு மட்டும் தான் அழகா? ஆயுத வன்முறையைவிட இது கொடூரமான வன்முறை இல்லையா? அரசியல் ஒடுக்குமுறையிலிருந்து கூட விடுபட்டு விடலாம். இந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவது கஷ்டம்.

கே: சௌகரியம் என்று கருதித்தானே நுகர்வுக் கலாச்சாரத்திற்குப் பலரும் ஆட்படுகிறார்கள்?

பதில் : யாருடைய சௌகரியத்திற்காக இதை அனுமதிக்கிறார்கள்? நுகர்வுக் கலாச்சாரம் நமக்கானது என்றால், இதில் நாம் என்றால் யார்? நம்மைப் போல நகர்ப்புறம் சார்ந்த, படித்த, உத்தரவாதமான, மாதச் சம்பளம் வாங்குகிற, குளிர்சாதனம் அல்லது மின் விசிறிக்குக் கீழ் வேலை பார்க்கக் கூடிய நாமா? அல்லது காடு, கழனிகளில் வேலை பார்க்கக் கூடியா நாமா? தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் வெக்கைக்கிடையில் வேலை பார்க்கும் குழந்தைகளின் நாமா?

‘நாம்’ என்கிற சொல்லாடலை நமக்கு சௌகரியமாக உருவாக்கிக் கொள்கிறோம். ஆனால், இது பெருவாரியான மக்களின் நலனுக்கு எதிரானது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

கே: இயந்திர கதியிலான நுகர்வுக் கலாச்சார வேகத்திற்கிடையில் நமது தனித்த பண்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வது சாத்தியம் தானா?

பதில்: நாம் இன்னும் அந்த அளவுக்குப் பண்பாடு அற்றவர்களாக மாறிப் போய் விடவில்லை. இன்னும் பேருந்தில் கர்ப்பிணிப் பெண் வந்தால் எழுந்து இடம் கொடுக்கிறார்கள். இன்னும் நாம் விலக்கப்பட்ட உறவுமுறையில் திருமணம் செய்யப் போகவில்லை.

குழந்தைகளின் மீதான வன்முறையை நாம் இன்னும் நியாயப்படுத்தவில்லை. இன்னும் இறந்து போன மனித உடலுக்குச் செய்கிற மரியாதை போன்ற பழக்கங்கள் தொடர்கின்றன. பண்பாட்டின் நுட்பமான வேர்கள் சிதைக்கப்பட்டு கொண்டிருந்தாலும், முழுக்க அறுபட்டுப் போய்விடவில்லை.

கே: பண்பாட்டுச் சிதைவுக்கு எதிரான குரல் இன்றுள்ள சூழ்நிலையில் எந்த அளவுக்கு எடுபடும்?

பதில் : படித்து உணர்ந்தவர்கள் தான் இதை மக்களிடம் கொண்டு போக வேண்டும். இந்நிலையில் வலுவான கருவிகளான ஊடகங்கள் எல்லாம் மக்களுக்கு விரோதமாக இருக்கின்றன. இதில் வெற்றி பெறுகிறோமா, தோல்வி பெறுகிறோமா என்பதல்ல விஷயம். இதையும் மீறி நாம் தொடர்ந்து இயங்க வேண்டும். ஒரு கட்டத்தில் வணிக நலன்களுக்கு எதிராக மக்கள் வருவார்கள்.

பிலிப்பைன்ஸில், அர்ஜென்டினாவில் கிளர்ந்து எழுந்ததைப் போல இங்கும் வருவார்கள். நான்கு ஆண்டுகளோ, பத்து ஆண்டுகளோ கட்டாயம் இப்படி ஒரு குரல் எழும்பும். எல்லாவற்றையுமே இழக்க யார் சம்மதிப்பார்கள்?

அதே சமயம் மக்கள் பண்பாடு புது விஷயங்களை வரவு வைத்துக் கொண்டு இருக்கிறது. மிளகை மட்டுமே பயன்படுத்தி கொண்டிருந்தவர்கள் மிளகாயை வரவு வைக்கவில்லையா? உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட்டை வரவு வைக்கவில்லையா?

ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் நினைக்கிற வேகத்தில் இங்கு மாற்றம் நடக்காது. இத்தகைய பண்பாட்டுப் படையெடுப்புகளை எதிர்க்கக் கூடிய ஆற்றல் இன்றைக்கு இல்லை. வலி கடுமையாக உணரப்படுகிறபோது எதிர்ப்பாற்றல் வரத்தான் செய்யும்.

கே: இருந்தும் நுகர்வுக் கலாச்சாரமும் பண்பாட்டுச் சிதைவும் ஒழுங்கமைக்கப்பட்ட அளவுக்கு, எதிர்ப்பு இங்கு ஒழுங்கமைக்கப் படவில்லையே?

பதில்: ஒழுங்கமைவு என்பதே அதிகாரக் கட்டமைப்பு சார்ந்த சொல். மக்கள் சம்பந்தப்பட்ட எதுவும் தோராயமாக இருக்கலாம். ஆனால், துல்லியமாக இருக்க முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் அதனதன் தன்மைக்கு ஏற்பவே எதிர்ப்புக்குரல் வெளிப்படும். இயற்கை வளங்கள் சார்ந்த குரல் இப்போது இங்கு கேட்கிறது.

பாலிதீன் பைகளை, பிளாஸ்டிக் குவளைகளை எதிர்த்து அரசே பேச வேண்டிய தேவை இருக்கிறது. இயற்கைச் சாயத்திற்கான ஆதரவு இருக்கிறது. இப்போது அறிமுகப்படுத்தப்படுகிற எதுவும் நிரந்தரமில்லை என்பதையே இது வலியுறுத்துகிறது.

பண்பாடு என்பது கற்றுக் கொண்டிருக்கிற போதே, அடுத்த தலைமுறைக்குக் கை மாற்றுகிற விஷயம். அப்பாவிடமிருந்து பிள்ளைக்கு வருவது மட்டுமல்லாமல், தாத்தாவிடமிருந்து பேரன், பேத்திக்கு வருவதுதான் பண்பாடு. அப்படிக் கைமாற்றிக் கொடுக்கிறபோது, நீண்டகாலப் பயனுடையதாக இருக்க வேண்டும் என்கிற உணர்வும், மெதுவாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஓராண்டு காலம் மட்டும் உயிரோடு இருக்கிற முருங்கை மரத்தை அருப்புக்கோட்டை பகுதிகளில் அறிமுகப்படுத்திப் பார்த்தார்கள். மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உடனடிப் பயன்பாட்டை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. கூடுதலான விளைச்சலை எதிர்பார்த்து விவசாய நிலத்தைக் கெடுத்து விட்டோம் என்ற குற்ற உணர்வு விவசாயிகளிடம் இருப்பதும் பலமான அம்சம்.

படித்தவர்கள், குறிப்பாகத் தன்னுடைய பலனைப் பேணுவதில் மட்டுமே அக்கறை காட்டக் கூடிய மாத சம்பளக்காரர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் அவர்கள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்து விட்டார்கள். இது எங்கே போய் முடியும்?

கே: இந்தக் கருத்துக்கள் மக்களிடம் எந்த விதமான சலனத்தை ஏற்படுத்த முடியும்?

பதில்: இப்போதுதான் சலனங்கள் துவங்கியிருக்கின்றன. இது காலப்போக்கில் பெருகும். குறையாது. மரபுவழிப்பட்ட எல்லா நிறுவனங்கள் மீதும் மக்கள் நம்பிக்கையாக இருந்து கொண்டிருக்கிறார்கள். எந்த அரசியல்வாதியையும் நம்பத் தயாராக இல்லை. எந்தப் படித்தவனையும் நம்பத் தயாராக இல்லை.

எனவே பிரச்சினைகள் கடுமையாகி தங்களின் கழுத்தை நெருக்குகிற நிலை உருவாகிறபோது மக்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள் என்று சொல்லமுடியாது. பன்னாட்டு நிறுவனங்கள் எந்த அளவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்களோ அந்த அளவுக்கு எதிர்வினையும் இருக்கும்.

பாரம்பரியமான உறவுமுறை சிதைந்திருக்கிறது. சொத்துரிமை முறையும் சிதைந்திருக்கிறது. நகரமயமாதல் என்கிற போக்கும் சில மாற்றங்களை உண்டாக்கத்தான் செய்யும். இந்த விஷயங்கள் சிதைந்து கொண்டிருப்பதைக் கடுமையாக உணரும்போது அதற்கான மாற்றத்தைத் தேடுகிற மனநிலை உருவாகும். ஆனால் தேட விடாமல் உறவுகள் அதே நிலையில் இருப்பதான மயக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன காட்சி வழி ஊடகங்கள். சிதைந்து கொண்டிருக்கின்ற கட்டமைப்பை உயிரோடு இருக்கிற மாதிரி காட்டுகின்றன இந்த ஊடகங்கள்.

கே: எதிலுமே நம்பிக்கையிழக்கிற மனநிலைக்கு மக்களைத் தள்ளுவது இன்னொரு அபாயத்தை விளைவித்து விடுமில்லையா?

பதில் : நம்பிக்கையின்மையின் காரணமாக சில விதங்களில் சமூக மாற்றங்கள் நிகழும். முதலாவது வன்முறைகள், அதிலும் வக்கிரமான வன்முறைகள். இரண்டாவது குடும்ப அமைப்புகளில் அதிர்வுகள் இருந்தாலும் சாதி அமைப்பு சிதையவில்லை. ஏனென்றால் இன்னமும் அரசாங்கமும் காவல்துறையும் தராத பாதுகாப்பை கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்குத் தருகிறது சாதி.

பொருளாதாரப் பாதுகாப்பைத் தராவிட்டாலும், உணர்வுரீதியான பாதுகாப்பை அது தருகிறது. இன்னும் கூடுதல் பாதுகாப்பைப் பெற சாதி அரசியல் அதிகாரத்தைத் தேடுகிறது.

எல்லாவற்றிற்கும் காரணம் பாதுகாப்புணர்வு. நகர்ப்புறங்களில் இந்தப் பாதுகாப்புணர்வைத் தொழிற்சங்கம் கொடுக்கிறது. சாதி ஒழிப்பு என்பது சாத்தியமில்லை. சாதிக்கரைப்புதான் சாத்தியம். ‘கலப்புமணம்’ இதற்குத் தீர்வு என்றும் நான் நம்பவில்லை.

கே: ஹோலிப் பண்டிகைக்கு இன்றைக்கு இங்கும் வரவேற்பிருக்கிறது. தேசியம் பரவலான அடையாளமாக அதைச் சொல்கிறார்கள். கூடவே காதலர் தினம், அன்னையர் தினம் கொண்டாடுவதெல்லாம் எதனுடைய அடையாளம்?

பதில் : பல்வேறு பகுதிகளின் மொத்தக் கலாச்சாரத்தையே நாம் இந்தியக் கலாச்சாரம் என்று சொல்கிறோம். திருவிழா என்பது ஒரு சமூகம் இளைப்பாறிக் கொள்கிற நிகழ்ச்சி. அதன் மூலம் அது புத்துயிர் பெறும், வெயிலில் நடப்பவன் நிழலில் ஓய்வெடுக்கிற மாதிரி. ஆனால் இளைப்பாறுவதையே முழுநேரத் தொழிலாக நமது ஊடகங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு திருவிழாவும், அந்த மக்களின் உற்பத்தி சார்ந்த வெளிப்பாடு.

அறுவடை முடிந்து கோடைக் காலத்தில் நமது திருவிழாக்கள் வரும். இப்போது நுகர்வுக் கலாச்சாரத்திற்குத் தீனி போடக்கூடிய விஷயமாகி விட்டன புதுப்புதுத் திருவிழாக்கள். சுயமான அறிவு உற்பத்தியும் சுயமான பொருள் உற்பத்தியும் இருக்கிற இடத்தில் தான் அதற்கென்று தனிக் கலாச்சாரமும் இருக்கும். அதை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

திராவிட இயக்கங்கள் எழுச்சி பெறுகிற காலத்தில் பொங்கலைத் தமிழர்களின் திருநாளாக அடையாளங் காட்டினார்கள். இன்றைக்கு ஹோலிப் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதே இயக்கத் தலைவர்கள்.

பொதுநலம் பேசுகிறவர்கள் தன்னுடைய கோப உணர்ச்சியைக் கைவிட்டு விடக்கூடாது அதுபோல மான, அவமானம் பார்க்கக் கூடாது. அப்படி எந்த எதிர்ப்பையும் மீறி செயல்பட்டவர் பெரியார். அவரிடம் இருந்த பொதுநலம் சார்ந்த கோபம் தான் இன்றையத் தேவை.

*
மணாவின் தொகுப்பில் வெளியான “ஆளுமைகள், சந்திப்புகள், உரையாடல்கள்” – நேர்காணல்கள் தொகுப்பு நூலிலிருந்து ஒரு பகுதி

08.02.2021  10 : 50 A.M

Comments (0)
Add Comment