உடல்ரீதியான குறைபாடுகள் மனிதனின் கனவுகளுக்கு ஒரு போதும் தடையாக இருப்பதில்லை என்பதை மாற்றுத்திறனாளிகள் இன்று உலகிற்கு நிரூபித்து வருகின்றனர்.
தங்களின் தன்னம்பிக்கையாலும் தளராத முயற்சியாலும் சமூகத்தின் பார்வையை மாற்றி பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகின்றனர்.
அத்தகைய ஒருவர்தான் ஜிலு மோல் மரியட் தாமஸ். இரு கைகளும் இல்லாமல் கார் ஓட்டும் உரிமம் பெற்ற ஆசியாவின் முதல் பெண் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருப்பவர்.
கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணான இவர், பிறக்கும்போதே இரண்டு கைகளும் இன்றி பிறந்தவர். இவருக்கு நான்கரை வயதானபோது தாயார் அன்னகுட்டி உயிரிழந்தார்.
அதன் பிறகு தந்தையும் சகோதரியும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தொடுபுழாவில் உள்ள மெர்சி ஹோம் என்ற இல்லத்தில் வளர்ந்து வந்தார்.
சிறுவயதிலிருந்தே பிறரை சார்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வரவில்லை.
கைகளால் செய்ய முடியாததை கால்களால் செய்ய கற்றுக் கொண்டார். அன்றாடப் பணிகளைச் செய்யவும், எழுதவும் கால் விரல்களையே பயன்படுத்தினார்.
பிளஸ் டூ தேர்வில் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சென்ட் ஜோசப் கல்லூரியில் அனிமேஷன் மற்றும் கிராஃபிக் டிசைன் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார்.
கொச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர், மலையாளத் திரைப்பட துறையைச் சேர்ந்த அமைப்பில் டப்பிங் கலைஞராகவும் இணைந்துள்ளார்.
இது மட்டுமன்றி சர்வதேச வாய் மற்றும் கால் வழி ஓவியர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.
இவரது ஓவியங்கள், பல கண்காட்சிகளிலும் பங்கு பெற்று பாராட்டுதல்களைப் பெற்றுள்ளன.
இப்படிப் பல இலக்குகளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தவருக்கு சிறுவயதிலிருந்தே கார் ஓட்ட வேண்டும் என்ற கனவு மட்டும் கைகூடாமல் இருந்தது.
இரு கைகளும் இல்லாதவருக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுக்க பலரும் தயங்கினர்.
ஆனால், ஜிலு மோல் பின் வாங்கவில்லை. தொடர் முயற்சியின் விளைவாக, எர்ணாகுளத்தில் உள்ள பயிற்சிப் பள்ளி ஒன்றில் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் பொருட்டு ஒரு நீண்ட சட்ட போராட்டத்தையும் சந்திக்க வேண்டி வந்தது. ஜிலு மோல் ஓட்டும் maruthi celerio கார் அவருக்கேற்ற வகையில் பிரத்தியேகமாக மாற்றி அமைக்கப்பட்டது.
ஸ்டீரிங்கில் சிறப்பு கைப்பிடி போன்ற அமைப்பு பொருத்தப்பட்டது. ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக் பெடல்கள் அவருக்கு ஏற்ற வகையில் உயர்த்தப்பட்டன.
வாகனத்தின் பல்வேறு செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வாய்ஸ் கமெண்ட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இன்டிகேட்டர், வைபர், ஜன்னல், விளக்குகள் என அனைத்துமே இந்தக் குரல் கட்டளையின் மூலம் இயக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வடிவமைப்பு கொண்ட காரை சாலையில் செலுத்துவதற்கான ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக சுமார் ஆறு ஆண்டுகள் ஜில்லு மோல் கடுமையாகப் போராடினார்.
உயர் நீதிமன்றம் முதல் மத்திய அரசு வரை அனைத்தின் வாயிற் கதவையும் தட்டி தன் உரிமைக்காக குரல் கொடுத்தார். இறுதியில் அவரது விடாமுயற்சி வெற்றி பெற்றது.
2023-ம் ஆண்டில் இரு கைகளும் இல்லாமல் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆசியாவின் முதல் பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
இதனை அப்போது கேரள முதல்வராக இருந்த பினராயி விஜயன் ஜிலு மோலுக்கு வழங்கி கௌரவித்தார். இது மட்டுமல்லாமல் இவர் ஒரு பிரபலமான youtuber ஆகவும் தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும் திகழ்கிறார்.
நம்பிக்கையே வாழ்க்கையின் அச்சாணி. கைகள் இல்லை என்பதை ஒருபோதும் கஷ்டமாக எண்ணவில்லை.
நாம் விரும்பும் விஷயங்களைச் செய்வதற்கு எந்த ஒரு குறையும் தடையாக இருக்கக் கூடாது என்ற வார்த்தைகளை உதிர்க்கும் ஜிலு மோல், தானே அதற்கு சான்றாகவும் உள்ளார்.
கலை மற்றும் சமூக பங்களிப்பிற்காக பல்வேறு விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவராகவும் இவர் விளங்குகிறார்.
வனிதா ரத்னா விருது, கலை அமைப்புகள் வழங்கிய சிறந்த ஓவியருக்கான விருது, யூத் ஐகான் பட்டம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இவை தவிர, சென்ற மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற விழாவில் கேரள அரசின் உயரிய மாநில விருதுகளில் ஒன்றான கேரள ஸ்ரீ விருதை அப்போதைய மாநில ஆளுநர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகர் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகளைப் பரிதாபத்துடன் பார்த்த சமூகம், இன்று அவர்களின் சாதனைகளைப் பார்த்து வியப்புடனும் மரியாதையுடனும் அணுகுகிறது.
அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
தடைகளை படிக்கட்டுகளாக மாற்றி உயரும் மாற்றுத்திறனாளிகளின் பயணம், மனித குலத்தின் தன்னம்பிக்கைக்கு என்றும் ஒரு கலங்கரை விளக்கமாக திகழும்.
S. வாணி