நம்மை நெருங்கும் சைபர் குற்றங்கள் – உஷார்!

நவீனத் தொழில்நுட்ப வசதி பெருகப் பெருக அது தொடர்பான வெவ்வேறு குற்றங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன.
 
மிக அண்மைக் காலத்தில் நமது அன்றாடத் தேவைகளில் ஒன்றானதைப் போல மாறிவிட்ட செல்போன்களைப் பயன்படுத்தி அவற்றை ஹேக் செய்து அல்லது பல்வேறு ஆப்-கள் மூலம் அதை கையாள்பவர்களைத் தடுமாறச் செய்து உள்ளே நுழைந்து பணத்தைத் திருடுவது அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
 
இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் குற்றப் பிரிவினர் இந்த எண்ணிக்கையைக் குறிப்பிட்டு வாடிக்கையாளர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள். 
 
இதெல்லாம் ஒருபுறம் நடந்தாலும், அண்மையில் தமிழகத்தில் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டதாக சுமார் 800 இளைஞர்களை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.
 
அவர்கள் மேல் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தான் என்ன?
 
அந்த இளைஞர்களின் வங்கிக் கணக்கில் யாரோ பணம் போட இவர்களுக்கு குறிப்பிட்ட தொகை மட்டுமே கமிஷனாக கிடைத்திருக்கிறது.
 
பிறகு குறிப்பிட்ட அந்த இளைஞர்களின் வங்கிக் கணக்கில் போடப்பட்ட பணத்தை மிக விரைவில் மற்ற வங்கி கணக்குகளுக்கு மாற்றிவிடுவது நடக்கிறது.
 
இப்படி இளைஞர்களைக் குறிவைத்து வெவ்வேறு விதமான சைபர் குற்றங்களைச் செய்யும் நிறுவனங்கள் அதிகரித்திருக்கின்றன.
 
அதாவது சுருக்கமாகச் சொன்னால் தங்கள் வங்கிக் கணக்கை வாடகைக்கு விடுவது மாதிரிதான் இந்த செயல்கள் நடந்திருக்கின்றன.
 
இவற்றில் அதிகப்படியாக முறைகேட்டில் ஈடுபட்ட சுமார் 400 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
 
இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலை இல்லாத இளைஞர்கள்.
 
வேலையில்லாத இளைஞர்களின் பொருளாதார வறுமையை அல்லது இயலாமையைப் பயன்படுத்திதான் இவ்வளவு சைபர் குற்றங்கள் இங்கு நடந்தேறி இருக்கின்றன.
 
இது தவிர கிராமப்புறங்களில் சாதாரணமாக அவ்வளவு படிப்பறிவு இல்லாத அதே சமயம் இந்த ஸ்மார்ட்போனை வைத்திருக்கின்ற முதியவர்களைக் குறி வைத்தும் இத்தகைய மோசடிகள் நடந்திருக்கின்றன.
 
அவர்களது வங்கிக் கணக்கை ஏதாவது ஒரு விதத்தில் செல்பேசி மூலம் கேட்டு, அவர்களைத் தடுமாற வைத்து தப்பித்தவறி அவரது பின் நம்பரை குறிப்பிடும்போது அவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுவது அதிகரித்திருக்கிறது.
 
எந்த ஒரு இளைஞராக இருந்தாலும் சரி, வயதானவர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சைபர் கிரைம் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதை நமக்கு முன்னிருக்கிற இத்தகைய அனுபவங்கள்தான் கற்றுத் தருகின்றன.
 
இவற்றைக் கவனிக்காமல் இன்றைய நவீனத் தொழில்நுட்ப யுகத்தில் யாரும் எளிதில் கடந்துவிட முடியாது என்பதே எதார்த்தம்.

 

– யூகி

Comments (0)
Add Comment