தமிழகத்தில் இளம் சிறுமிகள் கடத்தப்பட்டதாக எத்தனையோ வழக்குகள் பதிவாகி இருக்கிறன. ஒவ்வொரு வழக்கின் போதும் ஊடகங்கள் அவற்றை பரபரப்பான செய்திகளாக்குகின்றன.
சென்ற திமுக ஆட்சியின் போது கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக பக்கத்தில் உள்ள ஒரு புதர் மண்டிய இடத்திற்குச் சென்றபோது, பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார் என்கின்ற செய்தி பரவி அது பெரும் விவாதப்பொருளானது.
அப்போதைய திமுக அரசு அதற்கு உரிய முறையில் பதிலளிக்கவே தவித்துப் போனது.
சாதாரணமாக நகர்ப்புறங்களில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய கழிப்பறை வசதி கிராமப்புறங்களில் இன்னும் உருவாகாததால் ஏற்படும் சிரமங்களை இன்னும் பல கிராமங்களில் சந்திக்க நேர்கிறது.
தற்போது பரபரப்பாய் இருக்கிற, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு கிராமத்தில், சென்ற அக்டோபர் 11-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடி முடித்த கையோடு தனது குடும்பத்தினரோடு சேர்ந்து படுத்திருந்த ஏழு வயதான சிறுமி காணாமல் போய் இதுவரை இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது.
போலீசாரை சும்மா சொல்லக்கூடாது. இந்த பிரச்சனை உருவானதிலிருந்தே இதுவரை காவல்துறையின் தனிப்படைகள் மட்டும் பத்துக்கு மேல் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அந்தந்த கிராமத்தைச் சுற்றியுள்ள வெவ்வேறு காட்டுப் பகுதிகள், குளங்கள், ஏரிகள் என்று சகல பகுதிகளிலும் போலீசாரின் தேர்தல் வேட்டை துவங்கி இதுவரை எதையும் கண்டுபிடிக்க முடியாமல்போன நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
தற்போது சிபிசிஐடி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. சுற்றியுள்ள கிராமங்களில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் ஆராயப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள பல்வேறு வீடுகளிலும் தனி விசாரணை நடத்தப்பட்ட நிலையிலும் அந்த சிறுமி ஏன் கடத்தப்பட்டார்?. கடத்தப்பட்ட அவர் எங்கிருக்கிறார்? என்பது இதுவரை விடை தெரியவராத ஒரு மர்மமாக இருக்கிறது.
தற்போது அந்தச் சிறுமியின் தாயாரிடம் உண்மையைக் கண்டறியும் கருவியைக் கொண்டு சோதனையை மேற்கொள்வதற்கான ஒரு முயற்சியை சிபிசிஐடி போலீசார் முயன்று வருகிறார்கள்.
ஆனால், இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.
பொதுவாக இந்தக் குழந்தைகள் எந்தவிதமான பாலியல் வன்முறைக்கு ஈடுபடுத்தப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ அல்லது வேறு எந்தவிதமான வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் சிக்கினாலோ அந்தக் குழந்தையின் படத்தையோ பெயரையோ பயன்படுத்தக்கூடாது என்பது ஒரு பொதுவான விதி.
ஆனால், அந்த விதியை அப்பட்டமாக மீறி இருக்கின்றன பல்வேறு சமூக வலைத்தளங்கள்.
இந்த வழக்கு குறித்த சில முடிவுகள் இன்னும் சில நாட்களுக்குள் தெரிய வர வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நேரத்தில் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரிலிருந்து எட்டு வயதான சிறுமி அங்கிருந்து வெளியேறி சென்னை சென்ட்ரலில் வடமாநிலத்திற்கு செல்ல முயன்ற நிலையில், மீட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்.
இதே மாதிரியே கொங்கு பகுதியில் தனது வீட்டிலிருந்து டியூசனுக்கு செல்லும்போது இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்ட ஒரு சிறுவன் காணாமல் போயிருக்கிறார்.
இதே மாதிரி தென் தமிழகத்திலும் சிலர் மர்மமான முறையில் காணாமல் போயிருக்கிறார்கள்.
இந்தியாவில் சென்ற ஆண்டில் மட்டும் சுமார் 80 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்கின்ற புள்ளி விவரங்கள் எல்லாம் இப்போது இதே ஊடகங்கள் வழியே கசிந்து கொண்டிருக்கின்றன.
இந்த அளவுக்கு சிறுமிகளைக் கடத்துவது என்பதும் அவர்கள் காணாமல் போகும் சூழ்நிலையும் இந்தியாவிலும் நடக்கிறது.
தமிழகம் போன்ற மாநிலங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. இதில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பது இதில் முக்கிய பிரச்சனை அல்ல.
எந்தக் கட்சித் தலைமையிலான ஆட்சி நடந்தாலும் இதே விதமான கடத்தலும் காணாமல் போவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் பிரச்சனை.
இம்மாதிரியான நிகழ்வுகள் நடைபெறும்போது சம்பந்தப்பட்ட செய்தியை ஒளிபரப்புகிற ஊடகங்கள் இனியாவது குறைந்தபட்ச நெறிமுறைகளை கடைபிடிப்பது நல்லது.
இதன்மூலம் ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகளை வைத்திருக்கிற பெற்றோர்கள் கலவரமான மனநிலையில் இருப்பதைக் குறைக்க முடியும் அல்லது தவிர்க்க முடியும்.
ஆனால், அதே சமயம் இப்படிப்பட்ட குழந்தைகள் கடத்துவது அல்லது காணாமல் போவது என்பதற்கு ஒரு இறுதியான திட்டவட்டமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதைத்தான் பெண் குழந்தை வைத்திருக்கிற எல்லா பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
எத்தகைய விசாரணையும் அதை நோக்கி நீண்டால், இந்திய அளவில் சிறுமிகள் காணாமல் போவது சம்பந்தமான எண்ணிக்கை குறைப்பதற்கும் தவிர்ப்பதற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.