மழையை எதிர்கொள்ளும் மனநிலையில் இருப்போம்! 

“அடடா மழைடா அடை மழைடா“ – என்று லிங்கசாமி இயக்கிய பையா படத்தில் கார்த்தியும் தமன்னாவும் நடனமாடும் மழைக்காட்சி பலருடைய நினைவுகளில் இன்னும் இருக்கலாம்.
 
மழையை முன்வைத்து எத்தனையோ திரைப்படப் பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.
 
கருப்பு-வெள்ளை பட காலத்தில் “புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக” என்ற பாடலை மழையில் நடந்தபடியே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடியதையும் மறக்க முடியாது.
 
அதே மாதிரி சிவாஜி கணேசன் பல மழைக்காட்சிகளில் பாடி நடித்திருக்கிறார். பல நடிகைகளும் மழை என்றால் அதற்கான ஒரு துள்ளலான இசையோடு பாடி நடித்திருக்கிறார்கள்.
 
இப்படி திரைப்படப் பாடல்களில் கொண்டாட்டமாய் புகழப்படும் மழை நமது அன்றாடா வாழ்வில் என்னென்ன விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தி இருக்கிறது.
 
மழை எந்த அளவில் தேவை என்பதை மாநகரத்தில் பெருநகரில் வசிப்பவர்கள் மட்டுமல்ல, அதன் விளைவைப் பசுமையாக உணர்ந்தவர்கள் நமது விவசாயிகள் தான்.
 
மற்ற மாநிலங்களில் பெய்து அது நம் மாநிலத்தில் நுழைந்து வருவதற்கு படும்பாட்டை ஏற்கனவே காவிரி நதிநீர் சிக்கலில் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
 
சில சமயங்களில் அதிக அளவு பெய்யும் மழைநீர் பலதரப்பட்ட தடைகளைத் தாண்டி வீணாகச் சென்று கடலில் கலப்பதும், இங்கு இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது.
 
இப்படி நீர் மேலாண்மையைப் பொறுத்தவரை சற்று குழப்பமான திசையிலேயே நமது அரசுகள் இதில் கவனம் செலுத்தி இருக்கின்றார்.
 
பெருமழை பெய்து நகரங்களில் அது என்ன விதமான விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னையில் பெய்த அடைமழையால் ஏரியிலிருந்து நீர்வரத்துப் பெருகி, பல உயிர்கள் பறிபோன அவலத்தை சென்னைவாழ் மக்கள் ஏற்கனவே சந்தித்திருக்கிறார்கள்.
 
அப்போது சென்னையே வெள்ளக்காடாக மாறிப் போனது. ஏறத்தாழ முழங்கால் அளவு தண்ணீரை சாலைகள் சேமித்து வைத்துக் கொண்டிருந்தன.
 
இருசக்கர வாகனங்களோ, நான்கு சக்கர வாகனங்களோ போவது பெரும் சவாலான ஒன்றாக மாறியிருந்த அவலத்தை இதே சிங்கார சென்னை அனுபவித்தது.
 
தற்போது, மறுபடியும் அதே மாதிரியான ஒரு பெரும் மழையை சென்னை போன்ற தமிழகத்தில் உள்ள வெவ்வேறு பகுதிகள் சந்திக்க வேண்டும் என்பதை வானியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
 
இத்தகைய பெருமழையை சென்னை போன்ற பெருநகரம் தாங்கக்கூடிய வலுவுடன் இருக்கிறதா?
 
சென்ற வாரம் சில மணி நேரம் தொடர்ந்து பெய்த மழைக்கே சென்னை மாநகரம் தவித்துப் போனது. இங்குள்ளவர்கள் திணறிப் போனார்கள்.
 
இதைவிட அடை மழை பெய்யும் பட்சத்தில் சென்னை போன்ற தலைநகரம் அதை எப்படி எதிர்கொள்ள போகிறது என்கின்ற கேள்வி சென்னையில் குடியிருக்கும் பல்வேறு தரப்பு மக்களிடமும் இயல்பாக எழுந்திருக்கிறது.
 
இருந்தாலும் இலங்கையில் சூழ்ந்துள்ள கனமழை இந்தியாவின் தென்பகுதியிலும் வரலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
பேரிடர் நிவாரணக் குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான நிவாரண பணிகளுக்கு அரசு ஆயத்தமாக இருக்கும் நேரத்தில், பல்வேறு தொற்று நோய்கள் பரவக்கூடிய வாய்ப்புள்ள நேரத்தில், அரசு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் சற்று எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம் இது.
 
ஆனால், இதே மழையை முன்பு எப்படி பார்த்திருக்கிறார்கள் என்று பார்த்தால் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் மாதம் மும்மாரி பெய்கிறதா என்று கேட்கப்படும் வசனம் முன்பு பிரபலமாக இருந்தது.
 
‘மாரி’ என்ற சொல் பழந்தமிழ் சொல்லை வைத்துதான் மாரியம்மன் என்கின்ற ஒரு சிறுதெய்வ வழிபாடு துவங்கியது என்பது சில தமிழறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.
 
அதாவது மழையை மாரியம்மனாக வழிபட்டிருக்கிறார்கள் தமிழக மக்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மாரியம்மன் கோயில்கள் கிளை பரவி இருப்பதை நாம் உணரமுடியும்.
 
அந்த அளவுக்கு மழையை ஒரு தெய்வமாக வணங்கி இருக்கிறார்கள் தமிழகத்தில் முன்பிருந்த மக்களும் தற்போது இருக்கின்ற மக்களும்.
 
எது எப்படியோ மழையை எதிர்கொள்ளத் தயாரான மனநிலையில் இருப்போம். 
 
– யூகி 
Comments (0)
Add Comment