தற்போது வருகிற பல திரைப்படங்களில் கானா பாடல்கள் இடம்பெற்று அவை பெரும் வரவேற்பு பெறுகின்றன. அப்படி கானா பாடி பெருமளவில் புகழ் பெற்றவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால், இந்த இம்மாதிரியான கானாவை தமிழ்த் திரையிசை உலகில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை இசையமைப்பாளர் தேவாவையே சேரும்.
அவர் இசையமைத்த படங்களில்தான் முதன் முதலில் கானா பாடல்கள் இடம்பெற்றன.
அவர் பாடி இசையமைத்த சில பாடல்களுக்கு நடிகர் பிரபுதேவா போட்ட ஆட்டத்தை யாரும் மறந்துவிட முடியாது.
அவருடைய இசையும் கானா பாடல்களும் தொடர்ந்து பிரபலமானதால் அவர் இசையமைக்கும் படங்களில் ஏதாவது ஒரு கானா பாடல் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.
அப்படி சென்னை குறிப்பாக வடசென்னை மக்களின் அல்லது கடற்கரை ஓரமாக வாழும் குப்பத்து மக்களின் எளிய வட்டார மொழியைத் திரையிசைக்கு கொண்டுவந்த பெருமை தேவா அவர்களையே சாரும்.
இதுதவிர பல மேற்கத்திய பாணியிலும் தன்னால் பலதரப்பட்ட சிறப்பான பாடல்களைக் கொடுக்க முடியும் என்பதற்கு அவர் இசையமைத்த பாட்ஷா, வாலி, குஷி, அவ்வை சண்முகி, அண்ணாமலை, அருணாச்சலம், காதல் கோட்டை, நட்புக்காக, பஞ்ச தந்திரம், நேருக்கு நேர், நினைத்தேன் வந்தாய், சிட்டிசன் என்று பல்வேறு படங்களின் பட்டியல் நீளும்.
தினமும் ஒரு நாளைக்கு மூன்று படங்களுக்கு இசையமைக்கக் கூடிய அளவுக்கு படுதீவிரமாக தேவா இயங்கிய காலமும் உண்டு.
தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களுக்கும் தேவா இசையமைத்துள்ளார்.
இன்றைக்கும் வாலி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அவருடைய தனித்துவமான தேவா அவர்களின் தனித்துவமான இசையை திறம்பட உணர்த்தும்.
அதோடு உரத்த துணியில் பாடிய பாடல்களும் பெரும் புகழை ஈட்டுத் தந்திருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நபராக திகழ்ந்த தேவா, பிறகு படிப்படியாக தனது இசையமைப்பைக் குறைத்துக் கொண்டார்.
ஆனால், அது குறித்து எந்த வருத்தத்தையோ, ஆதங்கத்தையோ அவர் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தியதில்லை.
இடையில் தேவா அவர்களின் பாடல்களை மட்டும் வைத்து தனி ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டபோது, அதற்கு வந்த பெருங்கூட்டமே அவருக்கு இருந்த ஒரு மகத்தான வரவேற்புக்கு நல்லதொரு சான்று.
தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்று பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார்.
தன்னை நாடி வந்தவர்களை முக்கியமாக எளிய நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் திறமையை உணர்ந்து அவர்களுக்கான உரிய அங்கீகாரம் அளிக்கவும் வழிவகை செய்திருக்கிறார்.
அப்போது வெளிவந்த ஒரு வார இதழில் அவர் அளித்த பேட்டியில், தான் இளமைக் காலத்தில் வறுமையாக இருந்தபோது தான் வசித்த குடிசை வீட்டின் முன்னால் அவரும் மனைவியுமாக திருமணக் கோலத்தில் நின்ற ஒரு புகைப்படத்தைக் கொடுத்து அதை வெளியிடச் செய்திருந்தார்.
அந்த புகைப்படம் ஒன்றே அவரது எளிமைக்கு எப்போதும் சான்றாக இருக்கும்.
எப்போதும் அவர் தன்னோடு இசையில் ஒத்துழைத்த சகோதரர்களையும் கொண்டாடடியபடியே இருப்பார்.
தன்னுடைய இசைக்கு பக்கபலம் மட்டுமல்ல, ஆதாரமும் அவர்கள்தான் என்பதை மேடைக்கு மேடை வலியுறுத்தி, அதை அன்பு கனிய வெளிப்படுத்தினார்.
அதுபோலவே அவருடைய மகன் குறித்தும் அவருக்கு அளப்பரிய ஒரு பெருமை இருந்தது. அவரையும் மேடையில் வைத்து அவர் மேல் வைத்திருந்த அன்பை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
தமிழ்த் திரை உலகின் உயர் நட்சத்திரங்களான ரஜினி, கமல் என்று பலரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மேடையில் வெளிப்படையாக தேவாவை அன்புடன் பாராட்டி இருக்கிறார்கள்.
இப்படி பல்வேறு தரப்பிலான பாராட்டை ஏற்கும்போது மேடையில் கூச்சப்பட்ட மனநிலையுடன் தலைகுனிந்தபடி நின்று கொண்டிருப்பார் தேவா.
தன்னுடைய பாடல்களுக்கு தான் மட்டுமே சொந்தம் கொண்டாடாமல் எல்லோருக்கும் போய் சேரட்டும், எல்லோரும் பயன்படுத்தட்டும் என்ற பரந்த மனப்பான்மை கொண்டவராக இருந்தார் தேவா.
சில பாடல்களுக்கு இசையமைத்தாலே தன்னை உயர்மட்ட அளவில் உணர்கிற பல்வேறு இசைப்பாளர்களுக்கு மத்தியில், தான் எந்த எளிய மக்களிடமிருந்து உருவாகி வந்தேன் என்பதை இறுதிவரை அதே எளிமையை உணர்த்தியபடி வாழ்ந்தவர்தான் இசையமைப்பாளர் தேவா.
இறுதிவரை தேவாவின் அந்த எளிமையான அடையாளம் மறையவில்லை என்பதே அவருடைய தனிச்சிறப்பு.
– அ.தமிழரசன்