யாழ்ப்பாணம். இலங்கையின் வடபாகத்தில் இருக்கிற பகுதியில் ஏராளமான கிராமங்களைச் சேர்த்துத்தான் யாழ்ப்பாண மாவட்டம் என்று சொல்கிறோம்.
வடமராச்சி, தென்மராச்சி சேர்ந்ததுதான் யாழ்குடா நாடு. இந்தக் குடா நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணத்து ஆட்கள் என்று சொல்வது வழக்கம்.
நான் பிறந்து வளர்ந்த இடம் ‘அளவெட்டி’. யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள கிராமம்.
கிராமம் என்றால் தமிழகச் சூழலில் உள்ள ஒரு கிராமத்தைக் கற்பனை பண்ண இயலாது. அங்கு நகரத்திற்கும் கிராமத்திற்குமான வேறுபாடு பெரிய அளவில் கிடையாது.
எல்லாம் சிறு சிறு தோட்டங்கள்; சிறு அளவிலான விவசாயம்; செழிப்பான பிரதேசம் என்றும் சொல்ல முடியாது.
எல்லாவற்றிற்கும் நிலத்தடி நீர்தான். நெல் பயிரிடுவது மிகவும் குறைவு. கத்தரிக்காய், மிளகாய் போன்ற காசுப் பயிர்களின் விளைச்சல்தான் அதிகம்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே பிழைக்கப்போன மத்திய தர வர்க்கம் அங்கிருந்து அனுப்புகிற பணம்தான் யாழின் முக்கிய வருமானம்.
கணக்காளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், ரயில்வே அதிகாரிகள் இவர்களது மூளை உழைப்பின் வருமானம்தான் அதிகம்.
மலேசியா, சிங்கப்பூர், லண்டன் பகுதிகளுக்கு முன்பே போய் அங்கிருந்து உழைத்துத் தாயகத்திற்குப் பணம் அனுப்புவார்கள். புலம்பெயர்ந்து போவது அப்போதே நடந்திருக்கிறது.
இன்னொரு பக்கம், மீன்பிடித் தொழில். இலங்கையின் மொத்த மீன் வளத்தில் முப்பது சதவிகிதம் யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து கிடைக்கிறது.
மீன்பிடி வருமானம், வணிகம், வெளியே போய் பணம் அனுப்புகிற மத்திய தர வர்க்கம், இதுதான் யாழ்ப்பாணப் பொருளாதாரத்தின் மையம்.
யாழ்ப்பாண வறட்சிக்கு அடையாளமாகப் பிரபலமான வழக்கு ஒன்று உண்டு. “யாழ்ப்பாணத்தில் எல்லாம் வளராது. ஒரு விஷயம் மட்டும் வளரும். அது தாடி…”
கல்வியைப் பொறுத்தவரை இங்கு பலமான அடிப்படை. இது பிரிட்டிஷ்காரர்கள் காலத்திலிருந்தே துவங்கிவிட்டது.
பௌத்த சங்கம் நிறுவன மயமாக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு இந்த மிஷினரிகளை எதிர்ப்பது லகுவாக இருந்தது. யாழ்ப்பாணத்துச் சைவர்களிடம் இந்த எதிர்ப்பு பலமாக இல்லை.
அதனால் முக்கியமான மகளிர் கல்லூரி இங்குள்ள ‘உட்வில்’ பகுதியிலேயே நிறுவப்பட்டது.
இதெல்லாம் யாழ்ப்பாணத்தவர்களின் கல்வியில் முக்கிய வீச்சைக் கொடுத்திருக்கிறது. ஆறுமுக நாவலர் போன்றவர்களின் முயற்சியாலும் நிறையப் பாடசாலைகள் உருவாகியிருக்கின்றன.
யாழ்ப்பாணத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தமிழகத்தில் சொல்லப்படுகிற பஞ்சமர்களுக்கு எதிரான தீண்டாமைப் போக்கு கடுமையாக இருந்தது.
1960 வரை இவர்கள் கோவிலில் நுழைவதற்குத் தடை இருப்பதை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன.
இன்றைக்கும் அதே சாதி எண்ணங்கள் இருந்தாலும் யுத்தம் எல்லாவற்றையும் சமச்சீராக்கிவிட்டது.
அதே சமயத்தில் தீண்டாமை முற்றுமுழுதாக ஒழிந்துவிட்டது என்றும் சொல்ல முடியாது.
தமிழகம் மாதிரி நாதஸ்வரத்திலும் தவிலிலும் நன்கு தேர்ச்சி பெற்ற வித்வான்கள் அளவெட்டியில் இருந்தார்கள்.
அதில் பிரபலமானவர் அளவையூர் தட்சிணாமூர்த்தி. பிரமாதமான தவில் வித்வான்.
தமிழகத்தில் உள்ள நாச்சியார்கோவில் ராகவப்பிள்ளையிடம் வந்து குரு மூலமாகப் பயின்று, “உனக்கு இனிச் சொல்லித் தர என்னிடம் ஒன்றும் பாக்கியில்லை” என்று ஆசீர்வதித்து அனுப்பப்பட்டவர்.
இலங்கையில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் அவருக்குப் புகழ்.
“உலகத்தின் எட்டாவது அதிசயம்” என்று மணி அய்யர் போன்ற இசை மேதைகள் புகழ்கிற அளவுக்குத் தேர்ச்சி.
எல்லாக் கோவில் திருவிழாக்கள், குடும்ப விசேஷங்கள் எல்லாம் நாதஸ்வரத்துடன்தான் தொடங்கும். அந்த அளவுக்கு யாழ்ப்பாணத்திலும் நல்ல இசை ரசனை இருந்தது.
தமிழில் பழந்தமிழ் இலக்கியங்களை வெளியே கொண்டு வந்ததில் உ.வே. சாமிநாதய்யருக்கு எந்த அளவுக்குப் பங்குண்டோ, அந்த அளவுக்குப் பங்கு யாழ்ப்பாணத்தின் சி.வை.தாமோதரன் பிள்ளைக்கும் உண்டு.
முதன்முதலில் கலித்தொகை உட்பட பல நூல்களைப் பதிப்பித்தவர் இவர். இவரைப் பற்றி உ.வே.சா.வே பல இடங்களில் அஸ்திவாரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த அளவுக்குச் சைவ இலக்கியத்தில் யாழ்ப்பாணத்தவர்களின் பங்கு அதிகம்.
இலங்கையில் யாழ்ப்பாணப் பகுதிக்கு இங்குள்ளவர்கள் வந்தாலே அவர்களுக்கு கேரளா ஞாபகம்தான் வரும்; கேரளா அளவுக்குப் பசுமை இல்லாவிட்டாலும், வீட்டமைப்புகள், ஓடுகள், பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும் கேரளச் சாயல் படிந்திருக்கும்.
நாங்கள் கதைப்பதுகூட மலையாளம் கதைப்பது மாதிரி இருப்பதாகப் பல நண்பர்கள் சொல்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் கோவில்கள் அதிகம். ‘பிள்ளையார் கோவிலடி’ என்று இடங்களின் பெயரே உண்டு.
“யாழ்ப்பாணத்தில் நீங்கள் எவ்விடம்?”
“அளவெட்டி…”
“அளவெட்டியில் எது? வடக்கா? தெற்கா? கோயிலுக்கு அங்காலயா?”
– இந்த அளவுக்கு விசாரித்தாலே போதும். அங்கு ஒருவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்பது சொல்லாமலேயே விளங்கிவிடும்.
அங்கே சாதியை யாரும் நேரடியாகக் கேட்க மாட்டார்கள். இருந்தாலும் இதன் மூலம் ‘பேசாப் பொருளாக’ விளங்கிவிடும். இந்த மாதிரி விசாரணை யாழ்ப்பாணத்தில் ஒரு அம்சம்.
இதைப் பற்றி ‘நிலவிலே பேசுவோம்…’ என்று ஒரு கதை உண்டு.
வீட்டுக்குள் ஒருவர் வந்துவிட்டால், அவரைப் பற்றி வீட்டில் இருப்பவருக்கு ‘தாழ்த்தப்பட்டவரோ’ என்று சந்தேகம். நேரடியாகக் கேட்க மாட்டார்.
“வாங்க… வெளியில நல்ல நிலவா இருக்கும்… முற்றத்தில் போய்ப் பேசலாம்” என்று வெளியே கூட்டிக்கொண்டு போய் விடுவார். இதில் கணிசமான அளவு உண்மையும் இருக்கிறது.
சிங்களப் பெரும்பான்மைக்கும் தமிழகத்திலுள்ள தமிழ்ப் பெரும்பான்மைக்கும் இடையிலான ஒருவகையான விசித்திரமான வேறுபாடுதான் யாழ்ப்பாணத்தின் தனித்துவமாக இருக்கிறது.
ஒப்பீட்டளவில் தாங்கள் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களைவிட உயர்ந்தவர்கள் என்கிற அபிப்பிராயம் யாழில் உண்டு.
மலையகத் தமிழர்களை யாழ்ப்பாணத் தமிழர்கள் பாவிக்கிற முறையில் இந்த ஆதிக்க மனோபாவத்தைப் பார்க்கலாம். இம்மாதிரியான போக்கு 1980க்குப் பிறகு கணிசமாக மாறியிருக்கிறது.
யுத்தத்திற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இருந்த சிங்களர்கள் மிகவும் குறைவு. சில நூறு பேர்தான் இருப்பார்கள். யுத்தத்திற்குப் பிறகு படிப்படியாகச் சிங்களர்கள் குடியேற்றம் அதிகமாகிவிட்டது.
நான் பிறந்ததிலிருந்து பல்கலைக்கழகக் கல்வி படித்து முடிக்கும் வரை யாழ்ப்பாணத்தில்தான் இருந்தேன்.
அப்படிப் பார்த்தால் நான் உண்மையான ‘யாழ்ப்பாணத்து பனங்கொட்டை’. பனை மரங்கள் எங்கும் இருப்பதால் யாழ்ப்பாணத்தவர்களை அப்படித்தான் இலங்கையில் கேலி பண்ணுவார்கள்.
பனை மரம் யாழின் ஆகுபெயர். ஒருவித உருவகம்.
ஒரு வயதிலிருந்து பத்து பதினைந்து வயது வரையிலான காலகட்டம்தான் அவனுடைய கருத்துகளையும் சிந்தனையையும் புடமிடுவதற்கான முக்கியமான காலம்.
அந்த இடத்திலிருந்துதான் என்னுடைய இடம் என்பதைப் பற்றின புரிதல் எல்லாம் ஆரம்பமாகிற செழுமையான பகுதி. அந்த வயதில் நான் யாழ்ப்பாணத்தில் செலவழித்த காலம் அற்புதமான காலம்.
என் படைப்புணர்வு தூண்டப்பட பாடசாலைச் சூழல் ஒரு காரணம். முருகானந்தன், நித்யானந்தன், ரவி உதயேந்திரன் என்று ஏராளமான தமிழ் எழுத்தாளர்கள் மஹாஜனக் கல்லூரியிலிருந்து வந்தவர்கள்.
கவிஞர்களே கல்லூரி ‘அதிபர்’களாக (பிரின்ஸ்பால்) வந்திருக்கிறார்கள்.
பாடசாலையில் தமிழ் நாடகங்களில் நடிக்கலாம். கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டியெல்லாம் நடக்கும். அதெல்லாம் எங்களுக்குப் புறத்தூண்டுதல்.
எங்கப்பா ‘மஹாகவி’ பிரபலமான கவிஞர் என்பதால் வசதியான குடும்பச் சூழல், நல்ல இசை, கூடவே கிராமங்களில் விடிய விடிய நடக்கும் கூத்துகள்; எல்லாம் சேர்ந்து கலவையாக எழுதத் தூண்டின.
காலை நேரத்தில் தவில், நாதஸ்வரப் பயிற்சி கொடுப்பதெல்லாம் வந்து காதில் விழும். கோவில்களைப் பொறுத்தவரை ராமர் என்கிற உணர்வு அங்கில்லை. எல்லாம் சிவன்தான். கந்தசாமி (முருகன்) கோவிலும் உண்டு.
அங்கே கோவில் திருவிழாக்கள் நடக்கும்போது ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி நாளை ஒதுக்கிவிடுவார்கள். இது எழுதப்படாத ஒப்பந்தம்.
தேர்த்திருவிழா தீர்த்தமெல்லாம் நடந்து பூங்காவனம் என்கிற பெயரில் கச்சேரிகள், நாட்டியமெல்லாம் நடக்கும்.
தேவதாசிகள் ஆடும் ‘சதிராட்டமும்’ அப்போது அங்கே இருந்திருக்கிறது. அதை ஒழித்து, இப்போது ‘சின்ன மேளம்’ என்கிற பெயரில் ஆடுகிறார்கள்.
அதே நேரத்தில் தமிழர்கள் எங்கே இருந்தாலும், தமிழர்களுடைய பண்பாட்டுக் கலாசார உணர்வுகளைத் தொடர்புபடுத்தக் கூடியதாகத் தமிழ் சினிமாதான் இருக்கிறது.
எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு யாழ்ப்பாணத்தில் நடிகர் சங்கங்கள் இருந்திருக்கின்றன.
எம்.ஜி.ஆருக்காக ‘உரிமைக்குரல்’, சிவாஜிக்காக ‘சிம்மக்குரலோன்’ என்று பத்திரிகைகளும் வந்திருக்கின்றன.
இரண்டு சங்கத்தைச் சேர்ந்தவர்களும் மோதி ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்பு கத்திக்குத்துப் பட்டிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணம் தியேட்டர்களில் தமிழக நடிகர்களுக்குப் பெரிய ‘கட் அவுட்’ வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
அங்கே பாட்டு என்றாலும் தமிழ் சினிமாப் பாட்டுதான். அம்மாதிரியான மனோபாவம் உருவானதற்கு இலங்கை ரேடியோவும் ஒரு காரணம்.
எந்த இலக்கியங்களுக்கும் அப்பால் சாதாரணத் தமிழ் மனம், தமிழ் சினிமா, தமிழ்ப் பாட்டு சார்ந்ததாகத்தானிருக்கிறது.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று எங்கு தமிழர்கள் இருந்தாலும் இதே நிலைதான்.
பல்கலைக்கழகத்துக்கு நாங்கள் வருகிறபோது அரசியல் தீவிரமாகிவிட்டது. இலங்கைத் தமிழர் வரலாற்றில் முக்கியமான கட்டமாக மாறுகிறது.
அவர்களுக்குத் தமிழக அரசியல்தான் முன்னுதாரணம். அங்கும் ‘தளபதி’கள் அப்போதே உருவாகிவிட்டார்கள்.
ஆனால், இங்கிருக்கிற மாதிரி கட்சிகளுக்கு அடிமட்டத் தொண்டர்களும் நிறுவன அமைப்பும் அங்கில்லை.
1948லிருந்தே ‘தமிழர்கள் ஒதுக்கப்படுகிறார்கள்’ என்கிற குரல் எழ ஆரம்பித்துவிட்டது. அதை உணர்வுபூர்வமாகப் பிரச்சாரம் செய்வதன் மூலமே அங்குள்ள கட்சிகள் வாக்குப் பெற முடிந்தது.
அரசியல் உணர்வும், தேர்தலில் ஓட்டளிப்பதின் மூலம் அதிக அளவில் பங்கேற்பதும் யாழ்ப்பாணத்தில் அப்போது அதிகம். ஆனால், எந்தக் கட்சிக்கும் அப்போது கிராமம் வரைக்கும் கிளைகள் இல்லை.
எண்பதுக்குப் பிறகு, விடுதலை இயக்கங்கள் உருவாகிறவரை யாழ்ப்பாண அரசியலில், அரசியல் கட்சி என்பது அதன் சரியான அர்த்தத்தில் நிறுவனமயமாகவே இல்லை.
தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகள் எல்லாம் கையாண்ட மொழி தி.மு.க.வின் மொழி.
அந்தச் சமயத்தில் 1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வருகிறார்கள். அது தமிழ் மத்திய தர வர்க்கத்துக்குப் பேரிடி.
யாழ்ப்பாணத்தில் அப்போது நன்கு ஆங்கிலம் வழியாகப் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கக்கூடிய நிலையில் இருந்தது அங்குள்ள அரசுதான்.
அந்தப் பாதுகாப்புணர்வு பிறகு தகர்ந்துபோய் விட்டது. மூன்று நான்கு வருஷங்களுக்குப் பிறகு சிங்களம் படிக்காவிட்டால் தமிழர்கள் பலருக்கு வேலை இல்லை என்று ஆனது.
அந்தச் சமயத்தில் அம்மாதிரி ‘சிங்களம் படிக்க மாட்டேன்’ என்று அரசு வேலையிலிருந்து வெளியேறியவர் கவிஞர் காசி ஆனந்தன்.
அதற்குப் பிறகு அதே நேரத்தில் தமிழைக் கற்றுத் தமிழ்ப் புலமையடைந்து தனது புத்தகங்களைத் ‘தனிச் சிங்களச் சட்டத்திற்குக் காணிக்கை’ ஆக்கினவர் முக்கியமான விமர்சகரான ஏ.ஜெ.கனகரத்நா.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு நடந்த மாதிரி அங்கு சிங்கள மொழி ஆதிக்க எதிர்ப்பு. அங்கு விளம்பரப் பலகைகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்றுமே இருக்கும்.
போராட்டம் வலுத்தபோது தமிழர்கள் போர்டுகளில் உள்ள சிங்களத்தை அழித்தார்கள். சிங்களவர்கள் தமிழை அழித்தார்கள். இறுதியில் மிஞ்சினது ஆங்கிலம்.
அங்கும் தி.மு.க.வின் கிளை, இலங்கை தி.மு.க. என்றெல்லாம் உருவாக்க முயற்சி நடந்தது. இலங்கை அ.தி.மு.க. என்றுகூட உருவானாலும் அவையெல்லாம் பெயரளவுக்கு நடந்த முயற்சிகள்தான்.
யாரும் வேரூன்ற முடியவில்லை. எம்.ஜி.ஆருக்கு அங்கே நடிகர் சங்கங்கள் இருந்தும் அரசியல் ரீதியாக அங்கு எடுபட முடியவில்லை.
யாழ்ப்பாண நூலகம் அங்குள்ள பல தமிழர்களின் மூளைகளில் அழுத்தமாகப் பதிந்துபோன விஷயம்; ‘கச்சேரி’ என்கிற கலெக்டர் ஆபீஸ் அருகில் இருக்கிறது. எங்க அப்பா அங்குதான் உதவி ஆட்சியாளராக வேலை பார்த்தார்.
சனிக்கிழமை எங்களுக்குப் பள்ளி விடுமுறையன்று எங்களை அழைத்துக்கொண்டு நூலகத்தில் விட்டுவிட்டுப் போவார்.
அவர் வேலையிலிருந்து திரும்பி வரும்வரை நாங்கள் பல்வேறு புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருப்போம். சிறுவயதிலிருந்து எங்களுக்குப் பரிச்சயமானது நூலகம்.
நாங்கள் கல்லூரி வரை படித்தது தமிழ்மொழியில்தான். அதற்கு உதவியாக நிறைய மொழிபெயர்ப்பு நூல்கள் எல்லாம் அங்கேதான் அறிமுகமாகின.
அவ்வளவு அருமையான நூலகம் எரிந்துபோனதை இயலாத நிலையில் பார்த்துக்கொள்ள வேண்டியதிருந்தது எங்களது துரதிர்ஷ்டம். அது திட்டவட்டமாக ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதல்.
ஆட்சிமொழி சிங்களமாக இருந்தாலும் 1956 போராட்டத்திற்குப் பிறகு முழுக்கத் தமிழ்மொழியில் படிக்க அங்கு தடையில்லை. எல்லாம் தமிழ்தான். நான் இலங்கையை விட்டு வெளியேறின போது முழுக்க ஆங்கிலத்தில் படிக்கக் கற்றுக்கொண்டேன்.
ஆங்கிலத்தை நாங்கள் சிறுவயதிலிருந்து பாடமாகப் படித்தாலும் நாங்கள் வாழ்ந்தது தமிழ்ச் சூழலில். எங்களுக்கு ஆங்கிலம் இரண்டாவது மொழிதான். அது அங்கு பிரதான மொழியல்ல. தமிழகத்தில் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.
ஆரம்பத்தில் மொழியின் காரணமாக எங்களுக்குக் காட்டப்பட்டது பாரபட்சம். பிறகு ஒடுக்குமுறை. இப்போது முற்றுமுழுதான யுத்தம். இதற்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது.
1972ல் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை சிரிமாவோ பண்டார நாயகா கொண்டுவந்த சமயம், இலங்கைக் குடியரசில் சிங்களம் மற்றும் பௌத்தம் அரசியல் சட்டத்தில் முதன்மைப்படுத்தப்பட்டது. சிறுபான்மை மொழிக்கான சலுகையை எடுத்து விட்டார்கள்.
அப்போது பாடசாலைகளைப் பகிஷ்கரித்தோம். ஹர்த்தால் நடந்தது. எனக்கு அப்போது பதின்மூன்று வயது. அரசியல் சட்டத்தையே எரித்தோம். இப்போதிருக்கக் கூடிய விடுதலை இயக்கங்களின் தலைவர்கள், போராளிகள் பலர் போராட்டத்தில் அறிமுகமானது அச்சமயத்தில்தான்.
தமிழ்ப் பேரவை, மாணவர் இயக்கங்கள் உருவாகின. அதற்குத் தலைமைத்துவம் யாழ்ப்பாணத்தில்தான் இருந்தது. அதற்குப் பிறகு எல்லாம் அரசியல்தான். அரசியலையும் வாழ்க்கையும் பிரிக்க முடியாதபடி ஒரு சூழல் உருவாகிவிட்டது.
சிங்கள எதிர்ப்புணர்வு அரசியல் கட்சிகளால் வளர்க்கப்பட்டது. சிங்கள மொழித் திரைப்படங்கள் தமிழ் மொழித் திரைப்படங்கள் அளவுக்கு வலுப்பெற முடியவில்லை.
இதிலுள்ள நுட்பமான விஷயம், தமிழ் சினிமாவைப் பார்க்கிற ஏராளமான சிங்கள ரசிகர்கள் இருந்தார்கள்.
ஆனாலும், சிங்களப் படங்கள் தமிழர்களிடையே செல்வாக்குப் பெற முடியவில்லை. இது அவர்களது கலாசாரச் சூழலில் ஒருவித பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்கிவிட்டது.
சிங்கள நாடகத்தின் சில கூறுகள் தமிழ்த் தெருக்கூத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான்.
1950க்குப் பிறகு சிங்களவர்கள் அவர்களுக்கென்று தேசிய இசை, தேசியக் கலைகளை வடிவமைத்துக்கொண்டார்கள்; அந்த வடிவத்தை எடுத்துக்கொள்ள அவர்கள் போனது வங்காள மொழிக்கு. ஏனென்றால், ஆரியர்கள் என்ற மனப்பான்மை அவர்களிடம் ஊறியிருந்தது.
இலங்கையின் தேசிய நாட்டியத்தை ஆடக்கூடிய சில சிங்களக் கலைஞர்களின் நாட்டிய பாணி இந்தியாவில் உள்ள உதயஷங்கர் போன்ற கலைஞர்களின் பாரம்பரியத்திலிருந்து உருவானதே.
இப்போது பரத நாட்டியத்தையும் சிங்கள ஆட்கள் பரவலாகக் கற்றுக்கொள்கிற நிலைமையும் வந்திருக்கிறது.
சிங்களப் பெண்கள் பரதம் பழகி அரங்கேற்றம் நடப்பது அங்கு புது ‘மோஸ்தர்’ ஆகிவிட்டது. அரசியலை விட்டால், கலை, கலாசாரம் அனைத்திலும் இந்த மாதிரியான தாக்கம் நிகழ்ந்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
பௌத்தம் அங்கு அரச மதம். பௌத்த மத்தைக் காப்பது அங்கு அரசின் கடமை.
தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களர்களைச் சமீப காலமாகக் குடியேற்றுகிறபோது அவர்கள் செய்கிற முதல் காரியம், அந்தப் பகுதியில் புத்தர் சிலையை வைத்துக் கோவில் கட்டிவிடுவது.
தமிழ்ப் பிரதேசங்களிலும் ஒரு காலத்தில் பௌத்தம் இருந்திருக்கிறது. தமிழர்கள் பௌத்தர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போது, அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
1970 – 75 வரை தீண்டாமைப் பிரச்சினையைக் காரணம் காட்டி, பஞ்சமர்களிடம், “நீங்கள் தமிழ் ஆட்களாக இருப்பதனால் தான் சாதி பார்க்கிறார்கள்” என்று சொல்லி பௌத்தர்களாக்க ஒரு முயற்சி நடந்தது.
ஆனால், சிங்கள அரசின் அடக்குமுறையினால் அந்தத் திட்டத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை.
1956க்குப் பிறகு சிங்கள மொழியும் பௌத்தமும் புத்தர் சிலையும் சிங்கள மேலாதிக்கத்தின் குறியீடாகப் பதிந்துபோனதும் இன்னொரு காரணம்.
ஈழத்துக் கவிதைகளைப் பார்த்தாலே ‘புத்தரின் மரணம்’, ‘புத்தரின் படுகொலை’, ‘புத்தரின் மௌனம் அடுத்த பேச்சுக்குரல்’, ‘புத்தர் ரத்தக் கண்ணீர் வடித்தார்’ என்கிற மாதிரியான பிரயோகங்கள்தான் வருகின்றன.
எங்கள் ஊரை விட்டு நான் வந்தது 1987ல். இரண்டு வருஷங்கள் நாங்கள் வெளியே போய்விட்டு ஊருக்கு வந்தபோது எங்கள் ஊர் முழுக்க இந்திய அமைதிப் படை.
அதனுடைய கஷ்டங்களாலும் பத்திரிகைத் தொழில் செய்ய முடியாமல் 90ல் கொழும்புக்கு வந்து 92ல் நாட்டை விட்டு வெளியேறினேன்.
92ன் இறுதிப் பகுதியில் அளவெட்டியில் உள்ள எங்களது வீட்டிற்குள் நுழைந்தது இலங்கை ராணுவம். என் அம்மாவும் அம்மம்மாவும்தான் வீட்டில் எஞ்சியிருந்தார்கள்.
அதிகாலை நேரத்தில் எல்லோரும் உடனடியாக ஊரை விட்டு வெளியேற நேர்ந்தது. ஈழ யுத்தத்தினால் எவ்வளவோ குடும்பங்கள் இடம்பெயர்வதில் இருக்கிற அவலம் எங்களையும் தாக்கிற்று.
சிறுவயதில் எங்க அப்பாவைக் கொழும்புக்கு வேலை நிமித்தமாக மாற்றியிருந்தபோது நானும் கூடவே போவேன். அங்கிருந்து யாழ்ப்பாணம் போனால் அங்கிருந்து கிளம்புவதற்கு மனசு வராது. கொழும்புக்கு வரப் பிடிக்காது.
அம்மாதிரி சிறு பிராயத்திலிருந்து பழகி என் மனதில் நிறைந்திருக்கிற ஊரை விட்டு வலுக்கட்டாயமாகப் பிரிவது ஒரு சமூகச் சித்திரவதை என்று சொன்னார்கள்.
அங்கே இருக்கிற எங்களுடைய வீடு, அதன் முகப்பு எந்த நிலையில் இப்போதிருக்கிறது என்பது தெரியவில்லை.
இதையும் மீறிப் பிடிவாதத்துடன் போனவர்கள் அங்கே புதைக்கப்பட்டிருக்கிற கண்ணிவெடி வெடித்து இறந்து போயிருக்கிறார்கள். முற்று முதலாகச் சிதைக்கப்பட்ட பிரதேசமாகத்தான் இருக்கிறது எங்கள் ஊர்.
இனி நாங்கள் திரும்பிப் போனாலும், நாங்கள் வெளியேறும்போது இருந்த ஊர் மாதிரி இருக்குமா என்பதும் தெரியாது. எவ்வளவோ சாவுகள்; எத்தனையோ புலம்பெயர்வுகள்.
எங்களை நிலமற்ற அகதிகளாக்கிப் பல தேசங்களுக்கு ஓடவிட்டு உறவுகளைச் சிதறியடித்து எங்களிடம் வெறுமையை நிரப்பியது சிங்கள அரசு செய்த கொடுமையான ஒடுக்குமுறை.
திரும்ப யுத்தம் முடிந்து பலர் எப்போது போவோம் என்றிருந்தாலும், அதற்குள் புலம்பெயர்ந்து குடியேறின நாடுகள், அவற்றின் கலாசாரத்துடன் ஒன்றிவிட்ட எங்களது அடுத்த தலைமுறையைத் திரும்பப் பெயர்த்துக் கொண்டுவருவது சிரமம்.
இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிப் பத்து வருஷங்கள் ஆன நிலையிலும் எனக்கு வரும் கனவுகள் எல்லாமே என் ஊரைச் சார்ந்தவையாகத்தான் இருக்கின்றன.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் என் நினைவில் பதிந்த எங்கள் வீட்டைக் கனவு மூலமே பார்க்க நேரிடுவது எவ்வளவு சித்திரவதையான, சோகமான விஷயம்?
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் சில கவிதா நிகழ்வுகளில் பாடும் எனது பாடல், நாடு விட்டு நிராதரவாக அலைகிறவர்களின் சோகத்தைத் துல்லியமாகச் சொல்லலாம்.
இது என் குரல் மட்டுமல்ல. என்னை மாதிரி நாடு இழந்து திரிகிற பலரது குரல்:
“ஊரான ஊரிழந்தோம்…
ஒற்றைப்பனைத் தோப்பிழந்தோம்…
பாராள வந்தவரே…
உம்மையும்தான் நாமிழந்தோம்…
கடலே நீ இரையாதே!
காற்றே நீ வீசாதே!
நிலவே நீ அவியாதே!
நெஞ்சமெல்லாம் தீயாச்சே!
ஆற்றோரம் மணல்மேடு
மணல்மேட்டில் பட்டிப்பூ!
பட்டிப்பூ பூத்திருக்கு
யார் வரவைக் காத்திருக்கு?”
‘மணா’வின் ‘ஊர் மணம்’ நூலிலிருந்து…
பென் பேர்டு பதிப்பகம், சென்னை.
*
📖 Price: ₹225
📄 Pages: 190
📞 Orders: 8220063246
🛒 www.penbird.in