ஆதிதிராவிட மாணவர்களுக்கான நிதியில் ஊழல்!

சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
ஆதி திராவிடர் மாணவர்களுடைய நலனுக்காக அரசு தரப்பில் வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகையான 100 ரூபாயை அவர்கள் கணக்கில் சேர்க்காமல் கையாடல் செய்ததாக ஒரு புகார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்வைக்கப்பட்டது.
 

இது தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில், “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 2 கோடி 35 லட்சம் நிதியில் பெரும் மோசடி நடந்துள்ளது.

2017 முதல் 2023 வரை அரசு ஒதுக்கிய தொகை, மாணவர்களின் கணக்கில் செலுத்தப்படாமல், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் பதவி உயர்வும் பெற்றுள்ளனர். ஒரு சிலர், பணி ஓய்வு பெறவும் மாவட்ட ஆட்சியர் அனுமதித்துள்ளார். 

ஆதி திராவிடர் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.

அரசு நிதியை மோசடி செய்தவர்களுக்கு சாதகமாக காவல் துறை செயல்படுகிறது.

எனவே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 
இதை விசாரித்த நீதிபதிகள், ஆதி திராவிட மாணவர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்தபட்சமான மாதாந்திர உதவித்தொகையைக் கூட கையாடல் செய்திருக்கிறார்கள் என்றால், அந்த ஊழல் அதிகாரிகள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்.
 
இதைவிட அந்த குறிப்பிட்ட அதிகாரிகள் பிச்சை எடுக்கலாம் என்கிற அளவுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
 
அத்துடன் நிற்காமல், கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த இத்ததைய ஊழல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பான முழு விவரங்களும் தங்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.
Comments (0)
Add Comment