‘எங்கே அநீதியைக் கண்டாலும் உன் மனம் தாங்க முடியாமல் துடிக்கிறதா? அப்படியானால் நீயும் என் நண்பன்தான்’ என்று சொன்னவர் சேகுவேரா.
சேகுவேரா அல்லது ‘எல் சே’ எனப் பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா அர்ஜென்டினாவில் பிறந்த கியூபப் புரட்சியாளர்.
மற்ற புரட்சியாளர்களுக்கும் சேகுவேராவுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம், மற்ற புரட்சியாளர்கள் அவரவர் சொந்த நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியிருப்பார்கள்.
ஆனால், ‘சே’வைப் பொறுத்தவரை மற்ற நாடுகளையும் தன் நாட்டைப் போலவே நினைத்து, ஆயுதம் ஏந்திப் போராடியவர்.
அப்படிப்பட்ட வெறும் 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து சரித்திரத்தின் பொன்னேடுகளில் தன்னை பதித்துக்கொண்ட ஒரு சமாந்திரனின் மரணம் இன்றும் பேசப்பட்டு வருவது எப்படி?!
தென் அமெரிக்காவின் பொலிவியா காட்டில் வாலேகிராண்டே பகுதியில் 53 வருடங்களுக்கு முன் சே குவேராவின் உடலுக்குள் பாய்ந்த எம்1 கார்பைன் ரக துப்பாக்கியின் ஒன்பது குண்டுகளில் முதல் ஐந்து கால்களிலும், இரண்டு கைகளிலும் ஒன்று தோளிலும் பாய்ந்தது.
கடைசியாக மார்பில் பாய்ந்த குண்டுதான் அவரது உயிரைப் பறித்தது. அந்த கடைசி குண்டுக்குத் தெரியாது தான் ஒரு உடலை விதையாக மாற்றப்போகிறோம் என்பது!
அந்த நிமிடத்திற்கு முன் வரை கியூபாவுக்கு மட்டுமே நன்கு அறிந்த சே குவேராவின் முகம் இன்று உலகின் கடைக்கோடி மனிதர்கள் வரை அதிகம் பேரால் நேசிக்கப்படும் முகமாக மாற்றியதில் அந்த கடைசி குண்டுக்கு பெரும்பங்கு உண்டு.
அக்டோபர் 7, 1967-ம் நாள் இச்சம்பவம் நடந்து எட்டு நாட்களுக்குப்பின் கியூபாவில் சே குவேராவின் மரணத்தை அறிவித்தார் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ.
அப்போது அவர் ஆற்றிய உரையில் தம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய மந்திரத்தையும் சொன்னார்.
‘’நானும் ஒரு செகுவேராவாக மாறுவேன்’’ என்பதுதான் அது.
அதன்படியே அந்த வார்த்தையை பள்ளிகளில் தேசிய கீதம் போல பாடலாகவும் ஒலிக்கச் செய்தார். அன்றைய உரையில் ஃபிடல் இன்னொன்றும் சொன்னார்.
‘’அவர் நமக்கு மட்டுமல்ல… இந்த உலகத்துக்கே முழுமையான மனிதன் எப்படி இருப்பான் என அடையாளமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
வருங்காலத்தில் அவர் விடுதலை உணர்வின் அடையாளமாக உலகம் முழுக்க கொண்டாடப்படுவார்’’ என்று சொன்னார்.
அன்று அவர் கூறிய தீர்க்கதரிசனம் இன்று 53 ஆண்டுகளில் நிரூபணம் ஆகியிருப்பது வரலாறு!
இடைப்பட்ட காலத்தில் அப்படி என்ன நடந்தது? அந்த ஆச்சர்யமிக்க கதையின் சுருக்க வரலாறு இதோ…
சே இறந்த அடுத்த சில நாட்களில் அவரது படுகொலை குறித்தும் அதில் அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏ-வின் சதி பற்றியும் புகைப்படங்கள், கட்டுரைகள், கவிதைகள் உலகம் முழுக்க பத்திரிகைகளில் அச்சாகின.
அறிஞர்களும் தலைவர்களும் சே குவேராவின் இறப்புக்கு அஞ்சலி செலுத்தத் தொடங்கினர்.
’’விடுதலையை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சே குவேரா ஒரு உத்வேகம்” என நெல்சன் மண்டேலா புகழ்ந்தார்.
பிரெஞ்சு தத்துவ அறிஞரான ஜீன் பால் சார்த்தர் ‘’சே குவேரா ஒரு அறிவுஜீவி மட்டுமல்ல… நாம் வாழும் காலத்தின் மிக முழுமையான மனிதர்” எனப் புகழ்ந்தார்.
தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அலென் கின்ஸ்பெர்க், ஜூலியோ கொத்தஸார், ப்ரான்ஸ்வா ஃபனான், க்ரஹாம் க்ரீன், சூஸன் சாண்டக் போன்ற உலக எழுத்தாளர்கள் சே வின் மரணத்தை சரித்திர நிகழ்வாக கருதி கட்டுரைகள் எழுதினர்.
இது உலகம் முழுக்க உள்ள அறிவுஜீவிகளின் வழியாக சே-வை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்க்கத் தொடங்கியது.
இதையொட்டி சிரித்த சே குவேராவின் புகைப்படங்கள் லண்டன், பாரிஸ், சிகாகோ என முக்கிய நகரத்தின் வீதிகளில் முதன் முதலில் தோன்றத்துவங்கின.
அந்த புகைப்படங்கள் முன் அசையும் மெழுவர்த்திகளில் சே குவேராவின் கண்களில் இயேசுவின் உயிர்த்தெழுதலை கண்டதாக மக்கள் கண்ணீர் சிந்தினர்.
சில மாதங்களுக்குப் பிறகு பெர்லின், பிரான்ஸ் மற்றும் சிகாகோவில் கலவரம் வெடித்தபோது மக்களின் உடலில் சே குவேராவின் உருவம் பதித்த டி-ஷர்ட்டுகள் முதன்முறையாகத் தோன்றத் தொடங்கின.
தொடர்ந்து புரட்சி, போராட்டம் எங்கு நடந்தாலும் அங்கு போராளிகள் சே குவேராவின் உருவ பதாகைகள் உயர்த்தி பிடிக்கத் தொடங்கினர்.
இதன் உச்சமாக, அமெரிக்க கல்லூரி வளாகங்களில் போராட்டங்கள் வெடித்தபோது, இளைஞர்களும், பெண்களும் சே குவேரா டி-ஷர்ட்களை அணிந்துகொண்டு, ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர்.
இது அமெரிக்காவே மிரண்டு போன காலப்பகடை. தன்னால் கொல்லப்பபட்ட ஒரு முகம் தன் மக்களால் தங்கள் முன் நாயகனாக உயர்த்திப்பிடிக்கப்படுவதை அமெரிக்காவால் ஜீரணிக்கவே முடியவில்லை .
இதுகுறித்து ராணுவ வரலாற்றாசிரியர் எரிக் ‘’சேகுவேரா இறக்கவில்லை… அமெரிக்காவிலேயே அவர் உயிர்த்தெழுந்துவிட்டார்’’ என எழுதினார்.
இப்படியாகத்தான் சே குவேராவின் புகழ் இன்று உலகம் முழுக்க பல கோடி மக்களிடம் படிப்படியாக பரவத்துவங்கியது.
தொடர்ந்து அவரைப் பற்றிய புத்தகங்கள், இசைத்தட்டுக்கள், திரைப்படங்கள் ஆகியவை எடுக்கப்பட்டு ஒவ்வொரு தலைமுறையிலும் சே-வின் புகழ் பன் மடங்கு பெருகிக்கொண்டே வருகிறது.
இப்படியான அவரது உலகப்புகழுக்குக் காரணம் அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒற்றை மனிதனாக எதிர்த்த துணிச்சலோ அல்லது புதிய உலகம் பற்றி கனவு கண்ட மனித நேயமோ மட்டுமல்ல.
அவர் ஒரு சிறந்த நிர்வாகி, சிறந்த மருத்துவர், சிறந்த நண்பன், மற்றும் சிறந்த கணவன் என எல்லா நிலைகளிலும் உயர்ந்து விளங்கினார்.
அவர் ஒரு சிறந்த தந்தையும்கூட என்பதற்கு அவர் குழந்தைகளுக்கு எழுதிய கடிதமே சாட்சி.
’அன்புச் செல்வங்களே… இந்த கடிதத்தை நீங்கள் படிக்கும் நேரத்தில் நான் உங்களையும், இந்த உலகையும் விட்டு முழுமையாக பிரிந்திருப்பேன்.
போராளிகளின் இறப்புக்காக யாரும் கண்ணீர் விடக்கூடாது. உங்கள் தந்தை கொண்ட கொள்கைக்கு உண்மையாக வாழ்ந்தார் என பெருமை கொள்ளுங்கள். தொழில் நுட்பக் கல்வியை தேர்வு செய்து படியுங்கள்.
அவை உங்கள் எதிர்காலத்தை மேம்படுத்தும். புரட்சி பாதையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் கண்முன் ஒரு அநீதி நடக்கும் போது அதை முழு மனதுடன் எதிர்க்க வேண்டும்’’ என எழுதியிருந்தார்.
சே-வின் நீடித்த புகழுக்கு இப்படியாக பல்வேறு உப காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
சே குவேரா வாழ்வின் ஏதாவது ஒரு பகுதியை எடுத்து படித்தால்கூட அதில் நம் முன்னேற்றத்தின் சிறு படிக்கட்டுகள் ஒளிந்து கிடப்பதை உணர முடியும்.
– அஜயன் பாலா
நன்றி : விகடன்