நடிகர் திலகம் சிவாஜியை நேரில் சந்தித்த ‘அந்த நாள்’!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாளையொட்டி அவருடனான சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்வது இனிமையானதாகவே இருக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைந்தபிறகு தமிழக முன்னேற்ற முன்னணி என்கிற கட்சியைத் துவங்கியபோது, அவருடன் ஒரே காரில் தமிழ்நாடு முழுக்க பயணம் செய்த அனுபவத்தைப் பற்றி ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன்.

பிறகு, சென்னை தி.நகரிலிருந்த அன்னை இல்லத்திலும் அவரோடு அமர்ந்து, கமலாம்மாள் பரிமாற சாப்பிட்ட அனுபவமும் பசுமையாகவே இருக்கிறது. 

குமுதம் வார இதழின் தலைமை நிரூபராக நான் பணியாற்றியபோது, சிவாஜி மறைவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு கமலா தியேட்டர் உரிமையாளரான பி.என்.சிதம்பரத்துடன் அன்னை இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.

மாடியறையில் இருந்த அவரை பார்த்தபோது, தாடி மட்டும் நரைத்த தோற்றத்தில் கேஷுவலாக உட்கார்ந்திருந்த சிவாஜி, “வாப்பா.. சீனா தானா” என்று புன்னகையோடு உள்ளே அழைத்தார்.

ஒரு ஷோபாவில் சாய்ந்த நிலையில், ஒரு காலை மடக்கியவாறு அமர்ந்திருந்த அவரிடம் வி.என்.சிதம்பரம் என்னை அருகில் அழைத்துச் சென்று, “ஏற்கனவே உங்களை தம்பி பார்த்திருக்கிறதாவும் உங்களோட கட்சி பிரச்சாரத்தில் கூடவே வந்ததாகவும் சொன்னார். அதனாலதான் கூட்டிட்டு வந்திருக்கேன்.” என்றதும்

என்னை எதிரே உட்கார்ந்திருந்த என்னை உற்றுப் பார்த்தவர், “இப்போ ஹார்ட் ஆப்ரேசனுக்குப் பிறகு நிறையவே மறந்து போயிருக்கு. என்னால் ரீ கலட்க் பண்ணிப் பார்க்க முடியல” என்றவர்,

அமெரிக்காவில், குமுதம் உரிமையாளர்களில் ஒருவரும், இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர். ஜவஹர் பழனியப்பன்தான் தனக்கு ஆப்ரேசன் பண்ணியதாகவும் அவரது வீட்டில் தங்கியிருந்ததாகவும் மெல்லிய குரலில் சொன்னார். 

குமுதத்திற்காக அவரை ஒரு பேட்டி எடுக்கலாம் என்று சொன்னபோது, “வேணாம்ப்பா, என்னத்தைச் சொல்றதுனே தெரியல, எனக்கு ஹெல்த்ம் சரியா இல்லை. வீட்ல என்னை ரொம்ப பத்திரமா பாத்துக்குறாங்க. யார் யார் என்னைய பாக்க வர்றாங்க அவுங்ககிட்ட நா எவ்வளவு நாழி பேசுறேன்றது மொதக் கொண்டு கரிசனமா வாட்ச் பண்றாங்க. 

இப்பக்கூட சீனா தானா உங்களை கூட்டிட்டு வர்றதா சொன்னப்ப நா வேணானு சொல்லல. கொஞ்ச நேரம் பேசிட்டு இருப்போம். புதுசா என்னத்தைச் சொல்லிடப் போறேன்” என்றவர், அடுத்தடுத்து பிரபலமான சில நடிகர்கள் வீட்டிற்கு வந்து பார்த்துவிட்டு போன அனுபவத்தைப் பற்றியும் சொன்னார். 

இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போறேனு தெரியல. என் பிள்ளைக நல்லபடியா இன்னும் கொஞ்சம் கூடுதலான காலம் இருக்கணும்னு ஆசைப்படுறாங்க. ஆனா, உடம்பு இடையிடேயே தொந்தரவு பண்ணுது. 

அதனால இதுக்கு மேல ஒன்னும் பேச வேணாம். நீ நல்லபடியா போயிட்டு வாப்பா நா பேசலனு தப்பா நினைச்சுக்காத என்று புன்சிரிப்போடு சொன்னவர்,

பக்கத்திலிருந்த வி.என்.சிதம்பரத்திடம் இவரைப் போய் கீழ விட்டுட்டு நீ மேல வா என்று சிவாஜி சொன்னதும், அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வந்த காட்சிதான் இன்னும் திரைக்காட்சியைப்போல நினைவில் மீந்திருக்கிறது.

திரையில் தனது பன்முக ஆற்றலை அற்புதமாக வெளிப்படுத்தினாலும் நேரில் அந்த தீவிரமான நடிப்புக்கு சிறிதும் சம்பந்தமில்லாதவரைப் போல பழகும் எளிமைதான் இப்போதும் ஆச்சர்யப்பட வைத்துக் கொண்டிருக்கிறது.

– மணா

#சிவாஜி #நடிகர்திலகம் #சிவாஜிகணேசன் #நடிப்பு #சென்னை #டிநகர் #Sivaji #NadigarThilagam #SivajiGanesan #Acting #Chennai #TNagar

 

Comments (0)
Add Comment