பாரம்பரியத்தைப் போற்றும் பழத் திருவிழாக்கள்!

உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில், அறுவடை காலங்களையும் இயற்கையின் கொடைகளையும் கொண்டாடுவது ஒரு முக்கிய மரபாகும். இதில் பழங்களின் திருவிழாக்கள் உலக அளவில் மிகவும் பிரபலமானவை.

இவை வெறும் வணிக கண்காட்சிகளாக மட்டுமல்லாமல் ஒரு நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முக்கிய நிகழ்வாகவும் விளங்குகின்றன.

உலகப் புகழ்பெற்ற சில முக்கிய திருவிழாக்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

தக்காளித் திருவிழா:

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் கூடி தக்காளி பழங்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடும் நிகழ்வே தக்காளி திருவிழாவாகும்.

Tomatina என்று அழைக்கப்படும் இது, உலகின் வித்தியாசமான மற்றும் புகழ்பெற்ற திருவிழாவாக உள்ளது. ஆண்டுதோறும் ஸ்பெயின் நாட்டில் உள்ள பனோகல் என்ற சிறிய நகரில்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இளைஞர்களுக்குள் நடந்த சண்டையின் போது தக்காளி பழங்கள் வீசப்பட்டன.

தற்செயலாக நடந்த இந்த நிகழ்வு அங்கிருந்த மக்களுக்கு மகிழ்ச்சியை தந்ததால், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் மக்கள் தாங்களாகவே தக்காளிகளை கொண்டு விளையாட தொடங்கினர்.

ஆரம்பத்தில் இந்த விழாவுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டாலும் மக்களின் தொடர் விருப்பத்திற்கு இணங்க, 1957-ம் ஆண்டு இது அதிகாரப்பூர்வ விழாவாக அங்கீகரிக்கப்பட்டது.

2002-ம் ஆண்டு ஸ்பெயின் அரசே இதனை சர்வதேச சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த திருவிழா என அறிவித்தது.

இந்த தினத்தன்று ஒரு மணி நேரம் மட்டுமே இந்த நிகழ்வுக்காக ஒதுக்கப்படும். லாரிகளில் டன் கணக்கில் கொண்டுவரப்படும் தக்காளிகளை மக்கள் அள்ளி சுற்றி இருப்பவர்கள் மீது சரமாரியாக வீசுவார்கள்.

அந்த ஒரு மணி நேரத்தில், ஒட்டுமொத்த நகரமும் தெருக்களும் சிவப்பு நிற தக்காளிச் சாரால் வண்ணம் பூசியவாறு மாறும். அதற்குப்பின் எச்சரிக்கை ஒலி முழங்க தக்காளி வீசுதல் நிறுத்தப்படும்.

அதன் பின் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி தெருக்கள் சுத்தம் செய்யப்படும். பாதுகாப்பினை உறுதி செய்ய கடுமையான விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

இதன் மூலம் மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. இவ்விழாவினை காணவும் இதில் பங்கேற்கவும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஸ்பெயின் நாட்டுக்கு படையெடுக்கின்றனர்.

ஸ்ட்ராபெரி திருவிழா:

ஸ்ட்ராபெரி பழங்களின் அறுவடையை கொண்டாடும் ஒரு துடிப்பான மற்றும் சுவையான பண்பாட்டு விழாவாக இது கொண்டாடப்படுகிறது.

பொதுவாக இவ் விழாக்கள் ஸ்ட்ராபெரி பழங்கள் அதிகம் விளையும் வசந்த காலத்தின் பிற்பகுதியிலும் மற்றும் கோடை காலத்தின் தொடக்கத்திலும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நகரங்களில் விமரிசையாக நடத்தப்படுகிறது.

கடினமாக உழைத்து இப் பழங்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் விவசாயிகளை கௌரவிப்பதற்கும், வேளாண் சுற்றுலாவை மேம்படுத்தவும் இது பெரிதும் உதவுகிறது.

புதுமையான முறையில் சாகுபடி செய்யப்பட்ட புதிய மற்றும் தரமான ஸ்ட்ராபெரி பழங்கள் நேரடியாக விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

இப்பழங்களால் செய்யப்பட்ட பல்வேறு பாரம்பரிய இனிப்பு வகைகள் மற்றும் விதவிதமான உணவுப் பொருட்களின் அணி வகுப்புகள் இதில் இடம்பெறுகின்றன.

உள்ளூர் மக்களின் பாரம்பரிய இசை, நடனம், கலை நிகழ்ச்சிகள் போன்றவை இந்த விழாவை மேலும் மெருகூட்டுகின்றன.

இந்தியாவில் மேகாலயா மற்றும் மகாபலேஷ்வர் போன்ற, ஸ்ட்ராபெரி சாகுபடி அதிகம் நடைபெறும் பகுதிகளில் இத்தகைய விழாக்கள் சமீப காலமாக பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

எலுமிச்சை திருவிழா:

பிரான்சில் உள்ள மெண்டன் நகரில் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்நகரத்தின் தனித்துவமான காலநிலை காரணமாக இங்கு எலுமிச்சை விளைச்சல் அமோகமாக உள்ளதால் அதன் பொருட்டு இந்த ஊரில் வருடந்தோறும் இவ் விழா நடைபெறுகிறது.

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை கொண்டு உருவாக்கப்படும் பிரம்மாண்டமான சிற்பங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. 

விலங்குகள், ரயில்கள், கட்டிடங்கள் மற்றும் வரலாற்று மனிதர்களின் வடிவங்கள் போன்ற மாபெரும் கலை படைப்புகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

பழங்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் ஊர்வலமும் நடைபெறுகிறது. இந்த சிற்பங்கள் மற்றும் வாகனங்களை உருவாக்க சுமார் 140 டன்களுக்கும் அதிகமான பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ‘

திருவிழா முடிந்த பின் மிகக் குறைந்த விலையில் இப்பழங்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டு தோறும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இதனை காண வருகை தருகின்றனர்.

இதன் மூலம் உள்ளூர் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உலக சந்தைக்கு கொண்டு செல்ல ஒரு சிறந்த வாய்ப்பினை பெறுகின்றனர். நாட்டின் வருவாயும் இதன் மூலம் அதிகரிக்கிறது.

பழங்களின் திருவிழாக்கள், மனிதனுக்கும் இயற்கைக்குமான பிணைப்பை ஆழமாக்குகின்றன.

மேலும் மனிதர்களிடையே உள்ள பாகுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு மகிழ்ச்சியை கொண்டாடும் ஒரு உன்னத அடையாளமாகவும் இத்திருவிழாக்கள் திகழ்கின்றன என்றால் அது மிகையில்லை.

S. வாணி

Comments (0)
Add Comment