மீன் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது தண்ணீர்தான். ஆனால், தண்ணீரை விட்டு வெளியே வந்து சேற்றில் நடந்து, அங்கேயே உணவு தேடி, தன் வாழ்க்கையின் முக்கியமான வேலைகளைச் செய்யும் ஒரு மீன் இருக்கிறது. அதுதான் சேற்றுத்துள்ளி மீன் (Mud skipper).
மட் ஸ்கிப்பர் (Mud skipper) எனும் இந்த மீன் முழுமையாக நீர்வாழ் உயிரினம் அல்ல. அவை தண்ணீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய இருவாழ்வுத் தன்மை கொண்ட மீன்கள் (Amphibious fish).
இவை பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டலக் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன.
இந்தியக் கடற்கரை முதல் தென்கிழக்கு ஆசியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் சில பசிபிக் தீவுகள் வரை இவற்றின் வாழ்விடம் பரவியுள்ளது.
ஆப்பிரிக்காவின் சில கடற்கரைப் பகுதிகளிலும் இவற்றின் இனங்கள் காணப்படுகின்றன.
பொதுவாக சதுப்புநிலக் காடுகள் (Mangroves), சேற்றுத் திடல்கள் (Mudflats), கழிமுகங்கள் (Estuaries) மற்றும் அலைவரத்து பகுதிகளே (Intertidal zones) இவற்றின் முக்கிய வாழ்விடங்கள்.
இவை நிலத்துக்கு வந்தவுடன் சுவாசிப்பதற்க்கு நுரையீரலைப் பயன்படுத்துவதில்லை நுரையீரல் அவற்றிடம் இல்லை.
அதற்குப் பதிலாக, ஈரமான தோல், வாய்ப்பகுதி மற்றும் செவுள் அறை (Buccopharyngeal and opercular surfaces) வழியாக காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பெறுகின்றன.
இதற்குத் தோல் ஈரமாக இருக்க வேண்டும் என்பதால், தண்ணீரை விட்டு வெளியே இருந்தாலும் ஈரப்பதத்தை கவனமாகப் பாதுகாக்கின்றன.
அவற்றின் கண்கள் நீரிலும் நிலத்திலும் பார்க்கும் வகையில் தகவமைக்கப்பட்டுள்ளன.
கண்கள் தலையின் மேல்பகுதியில் உயர்ந்து இருப்பதால், உடல் சேற்றில் இருந்தாலும் சுற்றியுள்ள நிலப்பரப்பைப் பார்க்க முடியும்.
இந்த வகை மீன்கள் கண் சிமிட்டுகின்றன! மனிதர்களைப் போல கண் இமைகளை மூடித் திறப்பது இல்லை.
கண்களைச் சற்று உள்ளே இழுத்துக்கொள்ளும்போது, கண்களைச் சுற்றியுள்ள ஒரு மெல்லிய சவ்வு அவற்றை மூடுகிறது.
இந்தச் செயல் கண்களை ஈரமாக வைத்திருக்கவும், தூசி போன்றவற்றை அகற்றவும், கண்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
முக்கியமாக, இந்தக் கண் சிமிட்டும் திறன் நிலத்தில் வாழ்வதற்கான தேவைகளுக்கு ஏற்ப தனியாக உருவாகிய ஒரு தகவமைப்பாகும்.
நடப்பதற்கு ஏற்றவாறு இவற்றின் உடல் தகவமைக்கப்பட்டுள்ளது. அதன் மார்புத் துடுப்புகள் (Pectoral fins) சேற்றில் உடலைத் தாங்கி முன்னோக்கி நகர உதவுகின்றன.
அதனால் தூரத்திலிருந்து பார்த்தால், ஒரு சிறிய மீன் சேற்றின் மேல் நடப்பது போலவே தெரியும்.
இவற்றின் உணவு தேடும் முறையும் வித்தியாசமானது. சில mud skipper மீன்கள் வாயில் தண்ணீரை எடுத்துக்கொண்டு நிலத்துக்கு வந்து, இரையைப் பிடிக்க அந்தத் தண்ணீரைப் பயன்படுத்துகின்றன.
நீரில் பயன்படுத்தும் உறிஞ்சும் உணவுமுறையை (Suction feeding) நிலத்திலும் பயன்படுத்துவதற்கான ஒரு சிறிய தந்திரம் இது.
நிலத்தில் வாழ்வது மூச்சு விடுவதில் மட்டும் சவால் அல்ல. உடலில் உருவாகும் கழிவுப் பொருட்களையும் சமாளிக்க வேண்டும்.
குறிப்பாக, தண்ணீருக்கு வெளியே இருக்கும்போது, உடலில் உருவாகும் அமோனியாவைச் சமாளிப்பது முக்கியமானதாகிறது.
மீன்களின் உடலில் உருவாகும் அமோனியா (Ammonia) அதிகமாக சேர்ந்தால் நச்சுத்தன்மை ஏற்படலாம்.
அதனால் இந்த வகை மீன்கள் அமோனியாவைச் சமாளிக்கவும் வெளியேற்றவும் பல்வேறு உடலியல் மற்றும் மரபணு தகவமைப்புகளை உருவாக்கியுள்ளன.
நிலத்திலும் சேற்றிலும் அதிக நேரம் வாழ்வதால், இவற்றுக்கு பாதுகாப்பான இடமும் தேவைப்படுகிறது. அதற்காக இவை சேற்றுக்குள் குழிகளையும் உருவாக்குகின்றன.
அந்தக் குழிகள் வெறும் மறைவிடங்கள் அல்ல; இனப்பெருக்கம் மற்றும் கடினமான சுற்றுச்சூழல் நிலைகளில் பாதுகாப்பு போன்ற பல தேவைகளுக்கும் பயன்படுகின்றன.
சில இனங்களில் முட்டைகளுக்கான குழிக்குள் காற்றைச் சேர்ப்பதும் இனப்பெருக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.
மீன்கள் எப்படி நில வாழ்க்கைக்கு மாறக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு mud skippers மீன்கள் ஒரு உயிருடன் இருக்கும் உதாரணமாக இருக்கின்றன.
ஆனால், இவை பழங்கால நிலவாழ் முதுகெலும்பிகளின் நேரடி முன்னோர்கள் அல்ல.
அதாவது, பழங்கால நான்கு கால்விலங்குகளின் பாதையைத் தொடர்ந்து வந்தவை அல்ல; நில வாழ்க்கைக்கான சில ஒத்த தகவமைப்புகளை தனித்தனியாக உருவாக்கியவை. இதையே ‘Convergent Evolution’ என்கிறோம்.
இந்த தகவமைப்புகள் எல்லா சேற்றுத்துள்ளி மீன்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. சில இனங்கள் தங்கள் வாழ்விட எல்லைகளையே இன்னும் விரிவுபடுத்தியுள்ளன.
மேலும், தென்கிழக்கு ஆசியாவில் ஓடும் மெக்காங் ஆற்றில் வாழும் ஒரு வகை சேற்றுத்துள்ளி மீன் (Periophthalmodon septemradiatus) உவர்நீர் முதல் நன்னீர் பகுதிகள் வரை வாழ்வதும், வெவ்வேறு உப்புத்தன்மை கொண்ட சூழல்களிலும் இனப்பெருக்கச் செயல்பாடுகளை மேற்கொள்வதும் ஆய்வில் பதிவாகியுள்ளது.
மெக்காங் ஆறு தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும்.
இங்கு வாழும் இந்த வகை mudskipper, வெவ்வேறு உப்புத்தன்மை கொண்ட சூழல்களுக்கு எவ்வாறு தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு ஒரு முக்கிய வாய்ப்பாக அமைகிறது.
தண்ணீருக்குள் பிறந்த ஒரு மீன், நிலத்துக்கு வந்து நடக்கிறது, காற்றைச் சுவாசிக்கிறது, கண் சிமிட்டுகிறது, உணவைத் தேடுகிறது.
அது நமக்கு பரிணாம வளர்ச்சியின் (Evolution) ஒரு பெரிய பாடத்தை நினைவுபடுத்துகிறது.
இயற்கை எப்பொழுதும் தேவைகேற்ப தங்களுக்கான புதிய வழிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது.
– சங்கீதா