விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் ‘ஃபாக்ரோ’!

தமிழகத்தின் ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் இந்தியாவின் மிக முக்கியமான தொழில் முனைவோர் மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

புதுமையான சிந்தனைகள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அரசின் சாதகமான கொள்கைகள் ஆகியவை இணைந்து தமிழ்நாட்டை உலகளாவிய ஸ்டார்ட் அப் வரைபடத்தில் முன்னணியில் நிறுத்தியுள்ளன. 

இத்தகைய ஒரு முன்னோடி நிறுவனம்தான் ஃபாக்ரோ (Faggro). விவசாயிகளையும் வியாபாரிகளையும் தொழில்நுட்பத்தில் இணைக்கும் பாலமாக இது செயல்படுகிறது.

இதன் நிறுவனரான அஷ்டலட்சுமி, கார்ப்பரேட் துறையில் இருந்து விவசாய வர்த்தகத்திற்குள் நுழைந்தவர்.

தொழில் முனைவோராகும் கனவுடன் பல தளங்களில் இடைவிடாது முயற்சித்து தன் இலக்கினை அடைந்தவர்.

விவசாயம் எளிய மக்களின் கைகளில் தான் உள்ளது. ஆனால், அதன் வர்த்தகம் பெரு நிறுவனங்கள் இடையே நடைபெறுகிறது. இவைதான் விவசாயத்தின் முழுச் செயல்பாட்டையும் கட்டுப்படுத்துகின்றன.

தேவைக்கேற்ப சப்ளை செய்தல், பொருட்களை கையாளுதல், தரத்திற்கு ஏற்ப வகைப்படுத்துதல், சேதாரம் இன்றி கொண்டு செல்லுதல் என்பன போன்றவை விவசாயிகளுக்கு கை வராத நிலையில் வட்டிக்குக் கடன் வாங்கி வேளாண் செய்யும் சூழலே இருந்து வந்தது.

மேலும் அறுவடையாகும் விளைபொருட்களை, நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு விற்பதால், உழைப்புக்கு ஏற்ற கூலியும் செலவுக்கேற்ற லாபமும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

ஒரு குண்டூசிக்குக் கூட, தயாரிப்பவர் விலை வைக்க முடியும் எனும்போது, விவசாயிக்கு அந்த வாய்ப்பு கூட வழங்கப்படுவது இல்லை.

இந்த முரண்பாடுகளை களையவும், விவசாயிகளையும் வர்த்தகரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவும், தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் தான்  ஃபாக்ரோ (Faggro).

இதற்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதள போர்டலில், விவசாயியே பொருளுக்கு விலையைத் தீர்மானித்து இதில் விற்பனை செய்யலாம்.

தரத்தை உறுதிப்படுத்தி உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு, வியாபாரியிடம் கொண்டு சேர்ப்பது வரை மொத்த பொறுப்பினையும் ஏற்கிறது ஃபாக்ரோ.

நூற்றுக்கணக்கான விளைபொருட்களை இந்நிறுவனத்தின் செயலி அல்லது இணையதளத்தின் மூலம் வாங்கலாம் – விற்கலாம்.

27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் 5000-க்கும் கூடுதலான வியாபாரிகள் இந்நிறுவனத்தின் மூலம் பரிவர்த்தனை செய்கின்றனர்.

விவசாயம் தொடர்பான இந்த ஸ்டார்ட் அப் செயலியை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்பட, தான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியே காரணம் என்கிறார் இந்நிறுவனர் அஷ்டலட்சுமி.

2017-ம் ஆண்டு மத்திய அரசு உணவுப்பொருள் வீணாவதைத் தடுக்கும் செயல் திட்டங்களை அனுப்புமாறு ஒரு ஸ்டார்ட் அப் சேலஞ்ச் அறிவித்தது.

இதில் கலந்துகொண்டவர், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பல்வேறு தானியங்கள் தாமதம் இல்லாமல் வியாபாரிகளிடம் போய் சேர்ந்தால், உணவுப் பொருள் வீணாகாது என்ற கருப்பொருளுடன் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.

Fast Agro என்பதை சுருக்கி ஃபாக்ரோ (Faggro) என்று இத்திட்டத்திற்கு பெயர் வைத்தார். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இருவரில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் இவருக்கு மூன்று மாத கால பயிற்சி அளிக்கப்பட்டது.

அனைவருக்கும் அவர்கள் விவரித்திருந்த தகவல்களின் அடிப்படையில் அதிலிருந்த சவால்களை முன்னெடுத்துப் போகிற வழிமுறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

பெரிய தொழில் முனைவோர்களைக் கொண்டு இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. முதலீட்டாளர்கள் பலரும் பங்கு பெற்றனர்.

தன்னுடைய திட்டத்தில் முதலீடு செய்ய முன் வருவர் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த அஷ்டலட்சுமியின் திட்ட அறிக்கையை அவர்கள் நிராகரித்தனர்.

தனி ஒருவராக இதனை செயல்படுத்த முடியாது என்பதே அதன் காரணமாக சொல்லப்பட்டது.

இதற்கெல்லாம் துவண்டு விடாமல் தன் நிறுவனத்திற்கென முதலில் இணையதளத்தையும் பின்பு செயலியையும் வடிவமைத்தார் அஷ்டலட்சுமி.

ஊர் ஊராகச் சென்று விவசாயிகளைச் சந்தித்தவர், மிஸ்டு கால் கொடுத்தாலே பொருளை விற்கலாம் என்று கூறி விளம்பரம் செய்தார்.

தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பெயரையே நிறுவனத்திற்கு சூட்டினார். குறுகிய காலத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பெற்றது இவரின் நிறுவனம்.

2024-ம் ஆண்டில் மொத்தம் 28 மாவட்டங்களில் தன்னுடைய வர்த்தகத்தை நிலை நிறுத்தியுள்ளது இந்நிறுவனம்.

இதற்காக வியாபாரி மற்றும் விவசாயி இருவரிடமிருந்தும் தலா 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

5 கிலோவில் இருந்து 50 கிலோ வரை சுத்தம் செய்யப்பட்ட தானியங்களை சில்லறை விலையில் வாங்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மில்களுடன் இணைந்து இச்சேவை பெறப்படுகிறது.

இந்நிறுவனத்தில் Start up TN நிறுவனம், 85 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 கோடி ரூபாய்க்கு வணிகம் மேற்கொள்ளவும் ஒரு லட்சம் விவசாயிகளை இணைத்து செயல்படவும், நாடு முழுமைக்கும் இதனை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், வேளாண் துறையின் புரட்சிக்கு வித்திட்டுள்ளது என்றால் அது மிகையில்லை.

S. வாணி

Comments (0)
Add Comment