சபாநாயகராக சட்டமன்றத்தில் தான் பொறுப்பேற்ற தினத்திலிருந்தே அடிக்கடி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய பல்வேறு பசுமையான நினைவுகளை தமிழகச் சட்டமன்றத்தில் பகிர்ந்திருக்கிறார் சபாநாயகரான ஜே.சி.டி. பிரபாகர்.
அதிமுகவில் ஜே.சி.டி. பிரபாகர் இருந்தபோது, எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவராகவே அவர் இருந்ததை பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுவெளியில் அவர் பகிர்ந்திருக்கிறார்.
சபாநாயகரான பிறகும் அதேவிதமான பகிர்வை இப்போதும் தொடர்கிறார்.
தான் பதவியேற்ற தினத்தில் எம்.ஜி.ஆரின் அரும்பெரும் குணங்களைப் பற்றி தன்னுடைய நேரடி அனுபவத்தை விவரித்து பேசியிருக்கிற சபாநாயகர், தற்போது நடந்துவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தன்னுடைய வில்லிவாக்கம் தொகுதிக்கு எம்.ஜி.ஆர். வந்திருந்தபோது நடந்த ஒரு அனுபவத்தையும் சுவையாகக் கூறினார்.
வில்லிவாக்கத்தில் ஒரு இடத்தில் ரேஷன் கடையை மக்கள் திலகத்தின் கார் கடந்தபோது, அந்த இடத்திலேயே காரை நிறுத்தச் சொல்லி இறங்கி, அந்த ரேஷன் கடைக்குள் அதிரடியாக எம்.ஜி.ஆர். நுழைந்து சோதனை நடத்தி இருக்கிறார்.
அங்கு கூடியிருந்த மக்களிடம் தரமான அரிசியும் மற்ற பொருட்களும் விநியோகிக்கப்படுகிறதா என்று கனிவுடன் விசாரித்திருக்கிறார். எடைபோடும் அந்தத் தராசை சரி பார்த்திருக்கிறார்.
சரியான நேரத்தில் கடை திறக்கப்பட்டு, ரேஷன் கடை ஊழியர்கள் சரியானபடி வந்து இயங்குகிறார்களா என்பதை விசாரித்து அறிந்திருக்கிறார்.
அங்கே விநியோகிக்கப்பட்ட அரிசியையும் வாங்கி அதை தன் கையில் வைத்து ஆராய்ந்து பார்த்திருக்கிறார்.
இதையெல்லாம் சட்டசபையில் தெரிவித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தான் வருவதற்கு முன்பு அதிமுகவில் இருந்தபோது எம்.ஜி.ஆருடன் அவர் பழகிய மிகவும் கனிவான அனுபவங்களை சட்டசபை உறுப்பினர்களுக்கும் நேரலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில்,
அதை பார்க்கக் கூடிய தமிழக மக்களுக்கும் எம்.ஜி.ஆரின் புகழைத் தொடர்ந்து கொண்டு செல்கிறவராக இன்னும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இருப்பது எம்.ஜி.ஆரின் தொண்டர்களை பெரிதும் மகிழ்வடையச் செய்திருக்கிறது.