வர்த்தக, தொழில்துறை மற்றும் நிறுவனப் பயன்பாட்டிற்காக பெட்ரோல், டீசலை பெட்ரோல் பங்குகள் மூலம் மொத்தமாக வாங்குவதற்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
இவர்கள் இனி அங்கீகரிக்கப்பட்ட மொத்த விற்பனை சேனல்கள் மூலமாக மட்டுமே எரிபொருளை வாங்க வேண்டும்.
இந்த உத்தரவு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், பெரிய அளவில் டீசல் பயன்படுத்தும் நிறுவனங்கள் உள்ளிட்ட மொத்த எரிபொருள் நுகர்வோருக்கு பொருந்தும்.
மத்திய அரசு வெளியிட்ட இந்த தற்காலிக ஒழுங்குமுறை உத்தரவு ஜூன் 11 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த கட்டுப்பாடு ஆரம்ப கட்டமாக 90 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து சில்லறை பெட்ரோல் பங்குகளுக்கும் பொருந்தும்.
மொத்த நுகர்வோர், குறைந்த விலையிலான சில்லறை பெட்ரோல் பங்குகளில் இருந்து அதிகளவில் டீசல் வாங்கத் தொடங்கியதால் சில பகுதிகளில் எரிபொருள் விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டது.
பொதுமக்களுக்கு தடையில்லா எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், பதுக்கல் மற்றும் முறைகேடுகளை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்குகள் மூலம் மொத்த விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதுடன், டீசல் விற்பனைக்கும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஒரு வாகனம் அல்லது வாடிக்கையாளருக்கு நாளொன்றுக்கு அதிகபட்சம் 200 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
– சு. சுரேகா