உள்ளாட்சித் தேர்தல்: திமுக, அதிமுகவின் நிலை என்ன?

இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சிகளுக்கான பதவிக்காலம் நிறைவடைவதால், சில மாதங்களுக்குள்ளேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம்.

தற்போதைய தவெக அரசு நினைத்தால் உள்ளாட்சி அமைப்புகளை முன்னரே கலைத்து உள்ளாட்சித் தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் செய்யலாம்.

அப்படி ஒரு உள்ளாட்சித் தேர்தல் நடந்தால், அதை எப்படி எதிர்கொள்ளப் போகின்றன திமுகவும் அதிமுகவும்?

திமுகவைப் பொறுத்தவரை கடந்த தேர்தலில் கண்ட எதிர்பாராத சரிவிலிருந்து இன்னும் மீளவில்லை என்பதை அவர்களுடைய தடுமாற்றமான பேச்சுக்களே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

திமுகவின் உயர்மட்டத் தலைவர்களோ, இரண்டாம் கட்டத் தலைவர்களோ என்ன விதமாகப் பேசினாலும் அதற்கு எதிர்வினையாக பலதரப்பட்ட விசில் சத்தங்கள் சமூக வலைதளம் எங்கும் எதிரொலிக்கின்றன.

முதலில் குறிப்பிட்ட காலக்கெடு விதித்து, பிறகு திமுக தலைமையே அந்தக் காலக்கெடுவை மீறி தவெக ஆட்சிக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறபோது, தவிர்க்க முடியாமல் 1967 நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தில் அதுவரை ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் பெரும் சரிவைச் சந்தித்து, அதன் மூத்த தலைவரான காமராஜரே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய மாணவர்களில் ஒருவரான பெ.சீனிவாசனிடம் தோற்றபோது முதல்வரான அண்ணா காமராஜரின் தோல்வி குறித்து வருத்தப்பட்டார்.

காமராஜரும் தனது தோல்வி குறித்து அலட்டிக்கொள்ளாத மனோபாவத்துடன் தான் இருந்தார்.

ஆனால், ஏறத்தாழ ஒன்னேமுக்கால் கோடி வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தவெக பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருக்கிறது.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு, அவர்களுக்கும் ஆட்சியில் பங்களித்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, ஐ.எம்.யூ.எல் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்து தவெக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே, திமுகவில் முக்கிய அங்கம் வகித்த தலைவர்கள் மீது வழக்குகள் அடுத்தடுத்து பாயலாம் என்கின்ற செய்திகள் தொலைக்காட்சிகளில் கசிந்து கொண்டிருக்கின்றன.

மிக அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் தமிழக முதல்வரான விஜய்யை கடுமையாக எதிர்த்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே சனாதனம் குறித்த தனது பேச்சை மீண்டும் பதிவு செய்தார்.

இப்போதைய நிலையில், ஏற்கனவே நடந்துகொண்டிருக்கிற உள்ளாட்சி அமைப்புகளில் திமுக கவுன்சிலர்கள், மேயர்கள் உள்ளிட்ட பலர் நடந்து கொண்ட விதம் கடந்த கால திமுக அரசுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இதை திமுகவுக்கு கிடைத்த சர்வேக்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

‘எங்கும் கமிஷன்; எதிலும் கமிஷன்’ என்று கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.

இதைக் கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுமே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஏற்கனவே இருந்த கூட்டணிக் கட்சிகளின் பலத்தையும் இழந்து திமுக தனித்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தால் தமிழக வாக்காளர்கள் திமுகவுக்கு தரப்போகும் மதிப்பு என்னவாக இருக்கும்?

அதிமுகவின் நிலையோ இன்னும் பரிதாபம். ஏற்கனவே தேர்தல் நடப்பதற்கு முன்பே தவெகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு நெருங்கி வந்தும் கூட, அதைத் தவறவிட்ட அதிமுக,

தவெக பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க சில தொகுதிகள் தேவைப்பட்டபோது, அதிமுக தலைமை சுதாரித்து முடிவெடுத்திருந்தால் தமிழக அமைச்சரவையிலும் பங்கேற்று கட்சியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால், இதுவரை கடந்த தேர்தலில் சந்தித்த தோல்வியில் இருந்து எந்த அனுபவப் பாடத்தையும் அதிமுக கற்றுக்கொள்ளவில்லை. தன்னுடைய கட்சியையும் கால மாற்றத்திற்கு ஏற்றபடி புதுப்பித்துக்கொள்ளவில்லை.

அதில் அங்கம் வகித்த சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல முன்னாள் அமைச்சர்களும் கூட தவெகவுக்கு இடம்பெயர்ந்து விட்ட நிலையில், இலையுதிர் மரமாக நின்றுகொண்டிருக்கிறது அதிமுக.

இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தால் அவர்களுக்கு உரிய மதிப்பை வாக்காளர்கள் தரத்தயாராக இருப்பார்களா?

அதே சமயம் தற்போது கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கிற தவெக, காங்கிரஸ், விசிக, ஐ.எம்.யூ.எல் மட்டுமல்ல ஒருவேளை பொதுவுடமைக் கட்சிகளும் சேர்ந்து பலமான கூட்டணியாக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டால்,

அதற்கு வாக்காளர்கள் எப்படிப்பட்ட மதிப்பைக் கொடுப்பார்கள் என்பதற்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவே சாட்சியத்தைப் போலிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்தால் அந்தத் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை திமுக, அதிமுகவின் தலைமைதான் ஆலோசித்து முடிவெடுத்தாக வேண்டும்.

எது நடந்தாலும் தற்போதும் வெற்றியைத் தீர்மானிக்கப்போவது வாக்காளப் பெருமக்கள்தான்.

– அ. தமிழரசன்

Comments (0)
Add Comment