உலகின் மனசாட்சியை உலுக்கிய புகைப்படம்!

வியட்நாம் போரின் கொடுமையை உலகுக்கு எடுத்துக்காட்டும் விதமாக குண்டுவீச்சில் இருந்து தப்பிவரும் பெண்ணின் புகைப்படத்தை நிக் உட் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த நாள் (08-06-1972).

1955-ம் ஆண்டு தொடங்கிய வியட்நாம் போர், 1975 வரை நீடித்தது. 1954-ல் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து மீண்ட வடக்கு வியட்நாம், அதன்பிறகு தெற்கு வியட்னாமையும் தங்களோடு இணைக்க நினைத்தது.

இந்த முயற்சிக்கு கம்யூனிஸ நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

ஆனால், இந்த முடிவை ஏற்காத தெற்கு வியட்நாம், அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளின் உதவியுடன் வடக்கு வியட்நாமுக்கு எதிராக போரில் குதித்தது.

20 ஆண்டுகள் வரை நீண்ட இந்த போரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்களும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வியட்நாம் வீரர்களும், சுமார் 20 லட்சம் பொதுமக்களும் பலியானார்கள்.

அசோசியேடட் பிரஸ் நிறுவனத்தின் புகைப்பட நிபுணரான நிக் உட், இந்த போரை படம்பிடிக்க வியட்னாமுக்கு சென்றிருந்தார்.

சாய்கான் நகரத்துக்கு அருகே அமைந்துள்ள தரங் பாங் என்ற இடத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட வியட்நாம் மக்களில் ஒரு பிரிவினர், பெருந்திரளாக ஓடிவந்தனர்.

அவர்களில் ஒரு சிறுமி, தன் உடலில் ஆடையே இல்லாமல் அலறி அடித்தபடி நிக் உட் இருக்கும் இடத்தை நோக்கி ஓடி வந்திருக்கிறார்.

தன் உடலில் ஆடைகள் இல்லை என்பதைப் பற்றிகூட கவலைப்படாமல் ஒரு பெண் ஓடிவருவது நிக் உட்டுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இருந்தாலும் முதலில் தன் தொழிலை கவனிக்க, அந்த பெண் ஓடிவரும் காட்சியை படமெடுத்துள்ளார்.

படமெடுத்து முடித்த பிறகு, அந்த பெண்ணை அருகில் சென்று பார்த்தபோது, அவளது முதுகு முழுக்க தீக்கயங்களால் கொப்புளங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்த்து.

பின்னாளில் அந்த சம்பவத்தைப் ப்ற்றி பேட்டி கொடுத்திருந்த நிக் உட், “’ஒருகணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பிறகு சுதாரித்துக்கொண்டு அருகில் இருந்த ஒரு பக்கெட் நீரை எடுத்து, அந்தப் பெண்ணின் மீது கொட்டினேன். விசாரித்தபோது தனது பெயர் கிம் புக் என்று அந்தப் பெண் கூறினார்.

அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றேன்.

குண்டுவீச்சு காரணமாக அவரது உடலில் 30 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் பிழைப்பது கடினம் என்றும் அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் சக பத்திரிகையாளர்கள் சிலரின் உதவியுடன் அருகில் உள்ள அமெரிக்க சிகிச்சை மையம் ஒன்றில் அவரைச் சேர்த்தேன்.

அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது” என்றார்.

அன்றைய தினம் உட் எடுத்த புகைப்படம் பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகி புயலைக் கிளப்பியது.

வியட்நாம் போரின் தீவிரத்தைப் பற்றி சர்வதேச ஊடகங்கள் விவாதங்களை நடத்தின.

அமெரிக்க படைகள் வியட்நாமில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோஷம் அதிகரித்தது. இப்படத்துக்கு 1973-ம் ஆண்டின் புலிட்ஸர் விருது வழங்கப்பட்டது.

  • ராதா 
Comments (0)
Add Comment