முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக!

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

தமிழகத்தில் கோடை விடுமுறை முடித்து நாளை (4ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

சில குழந்தைகளுக்கு பள்ளியில் இது முதல் ஆண்டாக இருக்கும். சிலருக்கு ஒரு சில ஆண்டுகள் பள்ளி அனுபவம் இருக்கும்.

எப்படி இருந்தாலும் சிறிய வயதில் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் :

பள்ளிக்கு படிக்க மட்டும்தான் போகிறோம் என்ற மனநிலையை திணிக்காதீர்கள்.

அங்கு போனால் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். இடைவேளைகளில் விளையாட மைதானம் இருக்கும் என்பது போன்ற எண்ணங்களையும் விதையுங்கள்.

அப்போதுதான் பள்ளிகள் மீதான அவர்களின் பயம் போகும்.

குழந்தைகள் எடுத்துச் செல்லும் பைகள், புத்தகங்கள், லஞ்ச் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்களின் மீது அவர்களின் பெயர்களை லேபிளில் எழுதி ஒட்டி வைக்கவும்.

அப்போதுதான் பொருட்கள் தொலைந்தாலும் லேபிளில் உள்ள பெயரைப் பார்த்து கொண்டுவந்து தருவார்கள்.

உங்கள் வசதியைக் காட்டுவதற்காக விலை உயர்ந்த லஞ்ச் பாக்ஸ், தண்ணீர் பாட்டில், பை உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளிடையே வேறுபாடு வரலாம்.

அதோடு, தொலைத்தாலும் நஷ்டமில்லாத அளவுக்கு கணிசமான விலையிலான பொருட்களை வாங்கிக் கொடுங்கள்.

குழந்தைகளால் எளிதாகக் கையாள முடியும் லஞ்ச் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் அதை திறக்கும்போதே பாதி கொட்டிவிடும்.

யாருடைய உதவியும் இல்லாமல் பள்ளியில் தனியாக சாப்பிட கற்றுக் கொடுங்கள். முதல் சில நாட்களில் அனுபவமின்மையால் டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் தொலைத்துவிட்டு வந்தாலும் திட்டாதீர்கள். கவனமாக இருப்பதன் அவசியம் பற்றி மென்மையாக அறிவுரை சொல்லுங்கள்.

குழந்தைகள் முதல் நாளில் பள்ளிக்கு செல்லும்போது, அவர்களுக்குப் பிடித்த பொம்மை, ஸ்டிக்கர், தண்ணீர் பாட்டில் என்று ஏதாவது ஒரு பொருளை எடுத்துச் செல்ல அனுமதியுங்கள்.

இது வீட்டிலேயே இருப்பது போன்ற ஒரு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும்.

பள்ளி தொடங்கும் நேரத்துக்கு 10 நிமிடங்கள் முன்பாகவே குழந்தையுடன் பள்ளியில் இருங்கள். பள்ளியில் கழிவறை எங்கு உள்ளது. எங்கு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி குழந்தைகளுக்கு விளக்குங்கள்.

வகுப்பாசிரியர் வந்ததும் உங்கள் குழந்தையை அவருக்கு அறிமுகப்படுத்திப் பேச வையுங்கள்.

முடிந்தால் சக மாணவர்களுடனும் அவர்களைப் பேச வையுங்கள். குழந்தைகளின் இறுக்கமான மனநிலையை போக்க இது உதவும்.

நன்றி: தினமலர்

Comments (0)
Add Comment