நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இதயத்தில் பிரச்சினை உருவானபோது பல இதய சிகிச்சை நிபுணர்களை அவரது குடும்பத்தினர் அணுகினாலும், இறுதியில் அவரது குடும்பத்தினரே முன்னுரிமை கொடுத்து சிவாஜி அவர்களுக்கு இதய ஆபரேஷன் பண்ணி அவருக்கு பேஸ் மேக்கர் பொருத்தியவர் தமிழரான டாக்டர் ஜவஹர் பழனியப்பன்.
குமுதம் நிறுவனரும் ஆசிரியருமான திரு ஏஸ்ஏபி அண்ணாமலை அவர்களின் புதல்வரான டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவின் முன்னணி இதய சிகிச்சை மருத்துவர்களில் ஒருவர்.
அண்மையில், சிவாஜிக்கு நடந்த சிகிச்சை குறித்து அவர் வெளிப்படையாக ’வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்.
அவரை பேட்டி கண்டவர் சிவாஜியின் மூத்த மகனான ராம்குமார் என்பதுதான் விசேஷம்.
சிவாஜியை இளம் வயதில் அவர் நடித்த வியட்நாம் வீடு நாடகத்தை நேரடியாக பார்த்தபோது ஏற்பட்ட அனுபவத்தை முதலில் பகிர்ந்து கொண்ட ஜவஹர் பழனியப்பன், தொடர்ந்து சிவாஜிக்கு அளிக்கப்பட்ட பல்வேறு சிகிச்சைகளைப் பற்றி மிகவும் நுட்பமாகவும், சுவாரசியமாகவும் சொல்லிக்கொண்டே போனார்.
முதலில் பிரான்ஸில் உள்ள இதய சிகிச்சை நிபுணரை அணுகினர். அதன்பிறகு, சிவாஜி குடும்பத்தினர் தன்னை சந்தித்தபோது,
“தமிழரான அவரிடம் இதய சிகிச்சை ஆபரேஷன் பண்ணிக் கொள்வது பெருமையாக இருக்கிறது” என்று சிவாஜி சொன்னதை நினைவுகூர்ந்த ஜவஹர் பழனியப்பன் பல்வேறு அனுபவங்களை தொடர்ந்து சொன்னார்.
அமெரிக்காவில் உள்ள டாக்டர் ஜவஹர் பழனியப்பன் வீட்டிலேயே தங்கியிருந்தபடி, அந்த சிகிச்சை நடந்தபோது கூடவே அவருடன் வந்து அவரை நன்கு பராமரித்துக் கொண்டவர் அவரது மனைவியான கமலா அம்மாள்.
அவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் கேலி கலந்த ஒரு உரையாடல்களைப் பற்றி சுவாரசியமாக விவரித்திருந்தார்.
ஜவஹர் பழனியப்பனின் அமெரிக்க வீட்டில் பணியாற்றிய ஒரு ஆங்கிலேயப் பெண் போடும் காஃபி சிவாஜிக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அதை ரசித்து குடித்துக்கொண்டிருந்தபோது ஒரு முறை இப்படி சொல்லியிருக்கிறார்.
“நம்ம கமலா காஃபி கொடுத்தா, அதை குடிக்கிறப்ப, அவங்க அது காஃபின்னு சொன்னாதான் அது காபின்னே தெரியும்” என்று கேலியாகச் சொன்னதை நினைவு கூர்ந்த ஜவஹர் பழனியப்பன், அடுத்து கமலா அம்மாவைப் பற்றி இப்படிச் சொன்னார்.
“சிவாஜியை இதய ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் சேர்த்தபோது பல்வேறு சோதனைகள் அவருக்கு செய்ய வேண்டி இருந்தது. பொதுவாக அங்குள்ள மருத்துவமனைகள் நோயாளியைத் தவிர வேறு யாரையும் கூடவே அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால், சிவாஜியுடன் வந்திருந்த கமலா அம்மாள் எப்படியாவது சிகிச்சையின்போது தானும் உள்ளே செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஆனால், அவரை அந்த வழியிலேயே நிறுத்திவிட்டபோது, தனக்குத் தெரிந்த எளிய ஆங்கிலத்தில், சிவாஜியை சுட்டிக்காட்டி “மை பேபி, மை பேபி” என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.
அவர் உணர்வுடன் சொன்னதைப் பார்த்த அங்குள்ளவர்கள் அவரை, சிவாஜி இருந்த அறைக்குள் அனுமதித்திருக்கிறார்கள். இதே மாதிரி பல சம்பவங்கள்.
அங்கு தமிழ்ச் சங்கம் துவக்கப்பட்டு அதற்கான துவக்க விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக சிவாஜியை அழைத்திருக்கிறார்கள்.
சிவாஜி நடித்த வெவ்வேறு படங்களில் இருந்து காட்சிகளைத் தொகுத்து திரையிட்டிருக்கிறார்கள்.
அப்படி திரையிட்டபோது அந்தந்தப் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை சிவாஜியே சுவாரசியத்துடன் அப்போது விவரித்திருக்கிறார்.
ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட அந்த விழாவின்போது சிவாஜி கணேசன் பேசிய பேச்சு முக்கியமானது.
“இங்கு வசிக்கும் வடநாட்டுக்காரர்கள், தாங்கள் சந்திக்கும்போது இந்தியில் பேசிக் கொள்கிறார்கள். கேரள மாநிலத்துக்காரர்கள் சந்திக்கும்போது மலையாளத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
ஆனால், இங்குள்ள தமிழர்கள் மட்டும் ஏன் பரஸ்பரம் சந்தித்துக் கொள்ளும்போது, ஏன் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
இனியாவது தமிழர்கள் தாங்கள் சந்திக்கும்போது, தமிழில் பேசினால் என்ன?” என்று பேசிய பேச்சு இப்போதும் அங்குள்ள தமிழர்களால் நினைவு கூறப்படுகிறது என்பது உள்ளிட்ட பல அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்
நடிகர் திலகம் சிவாஜியை நேசிக்கும் ஏராளமான ரசிகர்களுக்கு இந்த நேர்காணல் மாறுபட்ட ஒரு அனுபவத்தை நிச்சயமாகக் கொடுக்கும்.