அன்றாட வாழ்க்கையிலிருந்து சற்று விடுபட்டு நம் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வளிக்க, இந்தக் கோடை காலத்தில் குறைந்த செலவில் கண்டு களிக்கக் கூடிய சில சுற்றுலா தலங்களைப் பார்ப்போம்.
ஆனைமலை :
கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மலைத்தொடர் தான் ஆனைமலை.
ஊட்டி போலவே அழகும் அதைவிட அதிக அமைதியும் சூழ்ந்த ஒரு பகுதியாகும்.
குளிர்ச்சியுடன் இருக்கும் உப்பாறு நீர்வீழ்ச்சி, அருகிலேயே பச்சை பசேல் என்று தலை காட்டும் வாழை – சோளத் தோட்டங்கள், கேரள சூழலை முன்னிறுத்தும் தென்னை மரங்கள் என்று இங்கு வரிசை கட்டி நிற்கும் இயற்கை காட்சிகள் அனைத்தும் ரம்மியம்.
ஆனைமலையின் சுற்று வட்டாரப் பகுதிகளான வேட்டைக்காரன் புதூர், காளியாபுரம், சேதுமடை ஆகியவையே திரைப்படங்களில் நாம் பார்த்த மாளிகைகளும் எஸ்டேட்டுகளும் ஆகும்.
பஞ்சாயத்து ஆலமரங்களும் உண்டு. படகு சவாரியை விரும்புகிறவர்களுக்காகவே அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் காத்திருக்கிறது ஆழியாறு அணை.
இங்கிருந்து புறப்படும் படகு, வால்பாறை மலைகளின் அடிவாரம் வரை தொட்டுவிட்டு வருகிறது. அணையின் கீழிறங்கி வந்தால் ஊஞ்சல், நீரூற்று என்று குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்த ஆழியாறு பூங்கா வரவேற்கிறது.
வால்பாறை மலைப்பாதையில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது குரங்கு அருவி (மங்கி ஃபால்ஸ்). அருவி நீரில் நீராடி விட்டு மலைப்பாதையிலேயே ஆழியாறு திரும்பி விடலாம்.
மேலும், அடர்ந்து விரிந்திருக்கும் இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயத்தில் அரிதான வன விலங்குகளை கண்டு ரசிக்கலாம்.
இவை தவிர தேயிலை மற்றும் காபி தோட்டங்களும் கண்ணிற்கு விருந்தளிக்கின்றன.
திருமூர்த்தி மலை:
கோவையிலிருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது திருமூர்த்தி மலை. ஹோவென ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் நுழைவாயிலில் இருக்கிறது contour canal.
இங்கு ஏழு அடி ஆழ குழிக்குள் விழுந்து பொங்கி வரும் நீரைப் பார்க்க வியூ பாயிண்ட் அமைத்ததிருப்பது காண்போரை வியக்க வைக்கிறது.
பக்கத்திலேயே மேயும் மான் கூட்டம் மட்டுமல்ல கையில் இருப்பதை பிடுங்க பார்க்கும் குரங்கு கூட்டமும் இந்த மலையின் சிறப்பம்சம் தான்.
திருமூர்த்தி அருவியில் நீராடி விட்டு அருகில் இருக்கும் கோவிலில் சென்று வழிபாடு செய்யும் மக்கள் கூட்டத்தையும் காணலாம்.
அதற்கு அருகிலேயே வண்ண மீன் காட்சியகம், படகு சவாரி என்று குழந்தைகளை குதூகலப்படுத்தும் விஷயங்களும் உண்டு. பின்பு இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அமராவதி அணைக்குச் செல்லலாம்.
அதுவரையில் நாம் கடந்து வந்த நீர் வீழ்ச்சிகளோடு ஒப்பிட்டால் அமராவதி பிரம்மாண்டம்.
ஒன்பது ஷட்டர்கள் கொண்ட இந்த அணையில் எப்போதும் குறைந்தது நான்கு ஷட்டர்களில் நீர் வழிகிறது.
ஷட்டர்களுக்கு எதிரே இருக்கும் பாலத்தில் நின்று கொண்டு அங்கிருக்கும் உணவுகளை சுவைத்துக் கொண்டே அணையை ரசிப்பது அலாதி இன்பம் தரும்.
அங்கிருந்து சிறிது தொலைவில் இருக்கும் முதலைப் பூங்காவும் சிறுவர்களுக்கு திகிலூட்டும் அனுபவமாக அமையும்.
இயற்கையின் அழகை ரசித்திட இவ்விரு இடங்களுமே நல்ல தேர்வாக அமையும். அதோடு, இவை குறைந்த செலவில் செல்லக்கூடிய ஒருநாள் பயணமாகும்.
– எஸ். வாணி