பாமக எனும் அரசியல் கட்சியை நிறுவிய டாக்டர் ராமதாசுக்கு இப்போது 86 வயது.
வன்னியர்கள் அதிகம் வசிக்கும் வட தமிழகம், ஒரு காலத்தில் அவரது கோட்டையாக இருந்தது. பாமக கூட்டணி வைக்கும் கட்சியே ஜெயிக்கும் என்ற நிலை இருந்தது.
தான் ஆரம்பித்த வன்னியர் சங்கத்தை 1980 ஆம் ஆண்டு பாமக எனும் கட்சியாக உருமாற்றினார்.
1991 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அந்த கட்சி தனித்து களம் இறங்கியது. பண்ருட்டி தொகுதியில் மட்டும் வென்றது. எனினும் 6 % வாக்குகளை அள்ளி இருந்தது.
1996 ஆம் ஆண்டு முதல் பாமகவுக்கு ஏறுமுகம்தான். அந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது, பாமக. 4 தொகுதிகளில் வெற்றி.
2001 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 20 தொகுதிகளில் வாகை சூடியது. சட்டசபை தேர்தலில் பாமக அதிகபட்ச இடங்களில் வென்றது அப்போதுதான். 2016-ல் திமுகவுடன் கூட்டணி அமைத்து, 18 இடங்களில் வென்றது.
இந்த கூட்டணி 2011 தேர்தலிலும் தொடர்ந்தது, இந்த தேர்தலில் பாமகவுக்கு 3 இடங்களே கிடைத்தன. அன்று முதல் பாமகவுக்கு இறங்கு முகம்தான்.
2016 ஆம் ஆண்டு தேர்தலில் ராமதாஸ் மகன் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தனியாக தேர்தலை எதிர்கொண்டது. ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஐந்து இடங்களில் வென்றது.
நடைபெற இருக்கும் தேர்தலில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. கடந்து ஓராண்டுக்கும் மேலாக ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே நிலவிய பனிப்போரால் பாமக இரண்டாக உடைந்து போனது.
பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி பக்கம் வந்து விட்டதால் பாமகவின் பெயர், கட்சி கொடி, சின்னம் எல்லாம் அவருக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள அன்புமணியின் பாமக 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கட்சி பெயர், கொடி, சின்னம் ஏதும் இல்லாத சூழலில், அனைத்திந்திய ஜனநாயகப் பாதுகாப்புக் கழகம் எனும் பெயரில் ஒரு அமைப்பை நிறுவிய ராமதாஸ், சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.
35 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
அவர்களுக்கு தனிச்சின்னம் கிடையாது. சிலிண்டர், தர்ப்பூசனி, பச்சை மிளகாய் என பல்வேறு சின்னங்களில் ராமதாஸ் வேட்பாளர்கள் நிற்கின்றனர்.
இவர்களில் சிலர் வேட்பு மனு செய்யாமல் அன்புமணியுடன் இணைந்து விட்டனர்.
அன்புமணியின் செயலால் மனம் புழுங்கி இருந்த ராமதாசுக்கு, அவரது தளபதியாக கருதப்பட்ட ஜிகே மணியும் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன், பாமக இளைஞர் அணியின் தலைவராக இருந்தார். 10 நாட்களுக்கு முன்பு காங்கிரசில் சேர்ந்தார்.
அவரை பெண்ணாகரம் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதி, கடந்த முறை ஜிகே மணி வென்ற தொகுதியாகும்.
துரோகங்கள் தன்னை தொடர்வதால் ராமதாஸ் வேதனையில் உறைந்து போயுள்ளார். நேற்று சேலம் பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். பேசி முடித்ததும் மேடையிலேயே அவர் மயக்கம் அடைந்தார்.
அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலம் வாய்ந்த கட்சிகள் களம் காணும் இந்தத் தேர்தலில் ராமதாசின் கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதே நிலவரம். மாறாக சசிகலாவின் கட்சி பல தொகுதிகளில் அதிமுக வாக்குகளை பதம் பார்க்கும் சூழல் உள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.